Published:Updated:

“தேவைக்கு அதிகமாகவே தமிழகத்தில் ஆக்ஸிஜன் இருக்கிறது!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 - டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம்
- டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம்

- டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் நம்பிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரான டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன என்றும், படுக்கைகள் இல்லாமல் கொரோனா தொற்றாளர்கள் பரிதவிக்கிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன. முன்கூட்டியே போதுமான படுக்கைகளைத் தயார் செய்ய அரசு தவறிவிட்டதா?’’

‘‘அப்படிப்பட்ட நிலைமை தமிழகத்தில் இல்லை. தமிழக அரசு மருத்துவமனைகளில் 50,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. அவற்றில், 35,000 பேர்தான் தற்போது இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் படுக்கை வசதிகளையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறோம். குறிப்பிட்ட ஒருசில மருத்துவமனைகளில் மட்டுமே அட்மிட் ஆக வேண்டும் என்று எல்லோரும் நினைத்தால், பிரச்னை வரத்தான் செய்யும். சென்னையைவிட்டு கொஞ்சம் தள்ளி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளுக்கும் செல்லலாம். எந்த அரசு மருத்துவமனைக்குப் போனாலும் ஒரே மாதிரியான சிகிச்சைதான், ஒரேவிதமான மருந்துதான் வழங்கப்படுகிறது. தேவையில்லாமல் மக்கள் பீதியடைய வேண்டாம். அதேபோல், பண வசதி இருக்கிறது என்பதற்காக, வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பவர்களும்கூட தனியார் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகிறார்கள். அதனால், அங்கு உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையிலிருப்பவர் களுக்கு, இடம் கிடைப்பதில் பிரச்னை ஏற்படும். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

“தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதைப் பார்க்கும்போது, டெல்லி போன்ற வட மாநிலங்களின் நிலைமை இங்கும் விரைவில் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறதே?’’

‘‘கொரோனா பரிசோதனைகள் உட்பட இப்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக் கைகள் அனைத்தும் தொடர வேண்டியது அவசியம். தொற்று வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றை கறாராகப் பின்பற்ற வேண்டும். ஆனால், பெரும் பாலானோர் இவற்றைப் பின்பற்றுவது கிடையாது என்பது வருத்தத்துக்குரியது. குறைந்த பட்சம், இன்றிலிருந்தாவது மக்கள் இவற்றைப் பின்பற்ற வேண்டும். பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால், அச்சப்படக்கூடிய நிலைமை இங்கு ஏற்படாது.’’

“தேவைக்கு அதிகமாகவே தமிழகத்தில் ஆக்ஸிஜன் இருக்கிறது!”

‘‘கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தை முன்கூட்டியே கணித்து, அதன் அடிப்படையில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்தீர்கள்?’’

‘‘கடந்த ஓராண்டு அனுபவம் நமக்குப் பெரிதும் கைகொடுக்கிறது. முன்கூட்டிய திட்டமிடலுடன் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். உதாரணமாக, தடுப்பூசி வந்தால் எங்கெல்லாம் அதைச் சேமித்து வைக்கலாம், தேவையான இடங்களுக்கு எப்படி அதைக் கொண்டுசெல்லலாம் என்பதை ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு, உரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். தடுப்பூசி வந்தவுடன், அது பெரிதும் கைகொடுத்தது. தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் இரண்டு மட்டுமே ஆரம்பத்தில் இருந்தன. இப்போது 129 ஆய்வகங்களாக அதிகரித்துள்ளோம். ஆரம்பத்தில் 5-10 என்ற அளவில்தான் ஒரு நாள் டெஸ்ட்டிங் இருந்தது. இன்றைக்கு ஒரு நாள் டெஸ்ட்டிங் எண்ணிக்கை 1.25 லட்சம். இதுபோல, ஒவ்வொன்றிலும் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகளையும் வசதிகளையும் பெருக்கியிருக்கிறோம்.’’

‘‘தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், உயிர் காக்கும் மருந்துகளெல்லாம் போதுமான அளவுக்கு இருக்கின்றனவா?’’

‘‘தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலமாகத் தரமான மருந்துகளையும் கருவி களையும் வாங்கி வைத்திருக்கிறோம். போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. நம்முடைய ஒரு நாள் ஆக்ஸிஜன் உற்பத்தி 400 மெட்ரிக் டன். நமது ஒரு நாள் தேவை, 250 - 300 மெட்ரிக் டன். எனவே, தேவைக்கு அதிகமாகவே நம்மிடம் ஆக்ஸிஜன் இருக்கிறது. நம்முடைய ஆக்ஸிஜன் சேமிப்புத்திறன் 1,200 மெட்ரிக் டன் என்பதால், எதற்கும் கவலைப்படத் தேவையில்லை!’’

‘‘ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் பலர் அலைகிறார்களே?’’

‘‘சமீபத்தில் ரெம்டெசிவிருக்காகச் சிலர் அலைகிற நிலையைப் பார்க்க முடிகிறது. ரெம்டெசிவிர் என்பது உயிர் காக்கும் மருந்து கிடையாது. சில சூழ்நிலைகளில் மருத்துவ மனையில் இருக்கும் காலத்தை அதன் மூலம் குறைக்க முடியும். அவ்வளவுதான். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிலருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் தேவைப்படும். அது தேவையான அளவுக்கு அரசிடம் இருக்கிறது. யாருக்குத் தேவையோ, அதை மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

‘‘கோவாக்ஸின் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட பலருக்கு இரண்டாவது டோஸ் கிடைக்கவில்லை. கோவாக்ஸின் தட்டுப்பாடுக்கு என்ன காரணம்?”

‘‘கோவாக்ஸின் சப்ளை 17 சதவிகிதம்தான் இருக்கிறது. 83 சதவிகிதம் கோவிஷீல்டுதான். ஆனாலும், கோவாக்ஸின் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர் களுக்கு இரண்டாவது டோஸ் போடப்படுவதை 100 சதவிகிதம் உறுதிசெய்திருக்கிறோம்.’’

‘‘மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்று செய்திகள் வருகின்றன. அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’’

‘‘வைரஸுக்கு நாள், தேதி, மாநிலமெல்லாம் தெரியாது. பாதிப்பு வரக் கூடாது என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது; தேவையான நடைமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இப்போதிருந்தாவது, அதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயமாக பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.”

‘‘ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும் சூழலில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் உள்ளிட்டோரின் பணிச்சுமை பல மடங்கு அதிகரித்துவருகிறது. அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?”

‘‘நிச்சயமாக. கடந்த ஓராண்டாக 18 மணி நேரம் வேலை செய்துகொண்டிருக்கிறோம். கூடுதலாக ஆட்களைப் பணியமர்த்தவும் செய்கிறோம். ஆனாலும், கடினமாகத்தான் இருக்கிறது. தற்போதைய சூழலிலிருந்து மீள்வதற்கு அனைவரும் போராடித்தான் ஆக வேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு