Published:Updated:

இந்தியர்கள் மருத்துவத்திற்கு சராசரியாக எவ்வளவு செலவு செய்கிறார்கள்?!#VikatanInfographics

மருத்துவம், கல்வி ஆகியன குடிமக்களின் அடிப்படை உரிமைகள். அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டியது ஓர் அரசின் கடமை. தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகளைவிட ஏறத்தாழ 6 மடங்கு அதிக கட்டணம் வசூல் செய்கின்றன. தமிழ்நாட்டில் இந்தக் கட்டண வேறுபாடு எவ்வளவு மடங்கு தெரியுமா?

இந்தியர்களின் மருத்துவச் செலவு
இந்தியர்களின் மருத்துவச் செலவு

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்வு ஒன்று பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அறந்தாங்கி அருகே பெரியாளூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தீபன், வாகன விபத்தில் சிக்கி, காயங்களுடன் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கார்த்தீபன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அங்கு மருத்துவரோ, செவிலியரோ இல்லையெனக் கூறப்படுகிறது. விபத்தில் அவருக்குத் தாடைப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததால், அதன்மீது தையல் போடப்பட்டது. கார்த்தீபனுக்குத் தையல் போட்டவர், அறந்தாங்கி அரசு மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் கோவிந்தராஜ். அவர் 20 ஆண்டுகளாக, அதே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில் ஆள் இல்லையென்றால், அவர்தான் தையல் போடுவார் என்ற செய்தி அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

`விபத்தில் காயமடைந்தவருக்குத் தையல் போடும் துப்புரவுப் பணியாளர்!’- அறந்தாங்கி அரசு மருத்துவமனை அவலம்
மக்கள் சிறியளவிலான சிகிச்சைகளுக்கு எந்த மருத்துவமனையை நாடுகின்றனர்?
மக்கள் சிறியளவிலான சிகிச்சைகளுக்கு எந்த மருத்துவமனையை நாடுகின்றனர்?

அரசு மருத்துவமனைகளின் நிலை இவ்வாறு இருக்க, இந்தியா முழுவதும் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் சராசரியாக 100–ல் 43 பேர் தனியார் க்ளினிக்கில், சிறிய சிகிச்சைகளை மேற்கொள்பவர்களாக உள்ளனர். எனினும், தமிழ்நாட்டில் சிறிய சிகிச்சைகளுக்காக அரசு மருத்துவமனைகளையே பெரும்பாலானோர் நாடுகின்றனர்.

`எனக்கொரு பிரச்னை; தீர்த்துட்டு போங்க, இல்லைனா..!'- எடப்பாடி காரை கத்தியுடன் வழிமறித்த இளைஞர்

இந்தப் புள்ளிவிவரங்களைத் தேசிய மாதிரி கணக்கெடுப்பு வெளியிட்டுள்ளது. இந்திய குடிமக்கள் மருத்துவத்திற்காக எவ்வளவு செலவு செய்கின்றனர், மருத்துவத்தை இந்தியர்கள் நுகரும் முறை முதலானவற்றைப் பேசுகிறது இந்த அறிக்கை. இதை மத்திய புள்ளியியல் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தல் துறை வெளியிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலம்பெறும் சிகிச்சைகளுக்கு எந்த மருத்துவமனையை நாடுகின்றனர்?
மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலம்பெறும் சிகிச்சைகளுக்கு எந்த மருத்துவமனையை நாடுகின்றனர்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம்பெறும் சிகிச்சைகளுக்கு ஏறத்தாழ பாதிப் பேர் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். மீதிப்பேர் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். ஒட்டுமொத்தத்தில், இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனைகளையே மக்கள் அதிகம் நாடுவதாகக் கூறுகின்றது இந்த அறிக்கை.

அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என்ற விவாதத்தில், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் மீது அலட்சியம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. எனினும், தனியார் மருத்துவமனைகள் தரமாக இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், அங்கும் அலட்சியமான நிகழ்வுகள் தொடர்கின்றன. மேலும், செலவு என்ற அடிப்படையிலும் தனியார் மருத்துவமனைகள் எளிய மக்களின் பர்ஸைப் பதம் பார்ப்பவையாக இருக்கின்றன.

இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளை விட, தனியார் மருத்துவமனைகள் ஏறத்தாழ 7 மடங்கு அதிக கட்டணம் பெறுகின்றன. தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனைகளின் கட்டணம், அரசு மருத்துவமனைகளை விட 73 மடங்கு அதிகம்!
இந்தியர்களின் மருத்துவச் செலவு
இந்தியர்களின் மருத்துவச் செலவு

இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கள் வருமானத்தையும், அதனால் சேர்ந்த சேமிப்பையும் கொண்டே மருத்துவச் செலவுகளைக் கவனித்துக் கொள்கின்றனர். மற்ற நோய்களைவிட, புற்றுநோய்க்கு ஏறத்தாழ 3 மடங்கு அதிக பணத்தைச் செலவு செய்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் மன நோய், நரம்பியல் பிரச்னைகள் ஆகியவை மக்களுக்கு அதிக செலவு தரும் நோய்களாக உள்ளன.

மத்திய அரசின் இந்த அறிக்கை, குழந்தை பிறப்பு பற்றி தனிப்பகுதியை வெளியிட்டுள்ளது. நமது சமூகத்தில் குழந்தைப் பிறப்பு என்பது விலை உயர்ந்த விவகாரமாக மாறியுள்ளது. சுகப்பிரசவமோ, சிசேரியனோ, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக் கட்டணங்களை ஒப்பிடுகையில், தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகளை விட ஏறத்தாழ 6 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

இந்தியாவில் குழந்தை பிறப்பிற்கு சராசரியாக எவ்வளவு செலவு ஆகிறது?
இந்தியாவில் குழந்தை பிறப்பிற்கு சராசரியாக எவ்வளவு செலவு ஆகிறது?
இந்தியா முழுவதும் ஏறத்தாழ 83% மக்கள் எந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் இணையாமல் வாழ்கின்றனர்

தனியார் மருத்துவமனையின் கட்டணத்தையும் பொருட்படுத்தாமல், அரசு மருத்துவமனையை விலக்கி, தனியாரிடம் மக்கள் செல்வதற்கான காரணங்களை அரசே உருவாக்கியுள்ளது. மத்திய அரசு இந்தியாவின் ஒட்டுமொத்த ஜி.டி.பியிலிருந்து 1.28 சதவிகிதப் பணத்தை மட்டுமே சுகாதாரத்துறைக்கு ஒதுக்கி வருகிறது. இது இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, இந்தோனேசியா முதலானவற்றைவிட மிகக் குறைந்தது.

குடிமக்களின் மருத்துவச் செலவுக்கு அரசு எவ்வளவு செலவு செய்கிறது?
குடிமக்களின் மருத்துவச் செலவுக்கு அரசு எவ்வளவு செலவு செய்கிறது?

மேலும், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து சுகாதாரத்திற்கு ஒதுக்கும் செலவில், மத்திய அரசின் பங்கு மிகக்குறைவாக உள்ளது. கடந்த மாதம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட 'தேசிய சுகாதார விவரங்கள் 2019' என்னும் அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மருத்துவம், கல்வி ஆகியன குடிமக்களின் அடிப்படைத் உரிமைகள். அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டியது ஓர் அரசின் கடமை. மருத்துவத்துறையில் தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்துக்கொண்டே வருவதும், அரசு மருத்துவமனைகளிலிருந்து மக்கள் தனியாரை நோக்கிச் செல்வதும், மக்களின் சுகாதாரம் மீதான அரசின் மெத்தனப் போக்கைக் குறிக்கிறது.

மக்களின் நோய்களை வைத்து லாபம் ஈட்டும் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றாக, அரசு மருத்துவமனைகளைப் புனரமைத்து, அரசு மருத்துவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கும் அரசே, குடிமக்களின் நண்பனாக இருக்கும்.