Election bannerElection banner
Published:Updated:

கடும் தடுப்பூசி தட்டுப்பாடு, கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் ரூ.35,000... என்ன நடக்கிறது ஹைதராபாத்தில்?

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்

ஹைதராபாத்தில் நிலவும் தடுப்பு மருந்து தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் வெளிநாட்டுத் தயாரிப்பான 'ரெம்டெசிவிர்' மருந்தைப் பதுக்கி வைத்து 35,000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றின் முதலாம் அலையைத் திக்கித் திணறிச் சமாளித்த இந்தியாவுக்கு இந்த இரண்டாம் அலை மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்தியாவில் 1,80,000-ஐ தாண்டியிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசியை நம்பி இருக்கின்றனர்.

ஆனால், கோவிஷீல்டு, கோவேக்ஸின் என இரண்டு தடுப்பூசிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும், பல்வேறு மருந்து நிறுவனங்களின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டு அவரச பயன்பாட்டுக்கு வந்துள்ள போதிலும், பல மாநிலங்களில் கடுமையான தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏற்கெனவே, பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு மக்களை மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கோவிஷீல்டு - கோவாக்ஸின்
கோவிஷீல்டு - கோவாக்ஸின்

தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கு மத்தியில், உள்நாட்டுத் தடுப்பு மருந்தான கோவிஷீல்டு மருந்தின் விலை தற்போது 250-லிருந்து ரூ.600 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பு மருந்துக்கு, அதன் உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ள ஹைதராபாத் மாநகரிலேயே கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹைதராபாத் மாநகரில் மட்டும் 100 தனியார் மற்றும் 130 அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் பெரும்பாலான மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறி மக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

ஹைதராபாத்தில் நிலவும் தடுப்பு மருந்து தட்டுப்பாட்டை பயன்படுத்தி, வெளிநாட்டுத் தயாரிப்பான `ரெம்டெசிவிர்' மருந்தை சிலர் கள்ளச்சந்தையில் பதுக்கி வைத்து 35,000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளின் வெளியில் நின்றுகொண்டு சிலர் தடுப்பு மருந்துகளை பிளாக்கில் விற்று வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஹைதராபாத் காவல் ஆணையர் தலைமையில் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்

அதில், நேற்று முன்தினம் ஹைதராபாத் நகரில் பல மருந்தகங்களில் `ரெம்டெசிவிர்' மற்றும் `கோவிஃபோர்' (covifor) தடுப்பு மருந்துகள் வாடிக்கையாளர்களுக்கு 20,000-லிருந்து 40,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. மருந்துகளை அதிக விலை வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்த கடைகளுக்கு போலீஸார் சீல் வைத்தனர். அதைத் தொடர்ந்து, நேற்றும் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஹைதராபாத்தில் பல இடங்களில் `ரெம்டெசிவிர்' தடுப்பு மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் மற்றும் முகவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை போலீஸார் விசாரித்ததில், ஹைதராபாத்தில் இயங்கி வரும் பிரபல மருந்து விநியோக நிறுவனமான ஹெட்டெரோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஊழியர்கள் இரண்டு பேர் இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது.

தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் பலர், தடுப்பூசி தட்டுப்பாட்டால் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படியானவர்களை இவர்கள் அணுகி, `2-வது டோஸ் கண்டிப்பாகப் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், ஹைதராபாத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்குத் தடுப்பு மருந்து கிடைக்காது. கொரோனா உயிரிழப்புகளும் இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே நல்லது' என்று அச்சுறுத்தி, எவ்வளவு விலை என்றாலும் மக்களை வாங்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளி, அதிக லாபம் வைத்து விற்பனை செய்து வந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

Bharat Biotech (File Pic)
Bharat Biotech (File Pic)
AP Photo/Mahesh Kumar A.

இந்தியாவுக்கே தடுப்பூசி விநியோகித்து வரும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் உற்பத்தி ஆலை அமைந்துள்ள ஹைதராபாத்திலேயே கோவாக்ஸின் தடுப்பு மருந்து கையிருப்பு இல்லை என்பது ஹைதராபாத் வாழ் மக்கள் அனைவரையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

வரும் நாள்களில் தடுப்பூசி தட்டுப்பாட்டைத் தவிர்க்க அந்நிறுவனம் தடுப்பு மருந்துகளை வழங்கி உதவ வேண்டும் என்ற கோரிக்கையினையும் மக்கள் முன்வைத்து வருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு