Published:Updated:

நிரந்தரக் கருத்தடை செய்யும் பெண்கள் 75.3% ஆண்கள் எவ்வளவு தெரியுமா? - அதிர்ச்சியும் அலசலும்

``கர்ப்பம் என்பது முழுக்க முழுக்க பெண்ணுக்கான விஷயம் என்றே பார்க்கப்பட்டு வரும்வரையில், இந்த நிலை மாறாது"

கருத்தடை சாதனம் உபயோகிப்பதில் பாலின பேதம்
கருத்தடை சாதனம் உபயோகிப்பதில் பாலின பேதம்

கடந்த வருட தேசிய சுகாதார புள்ளிவிவரத்தின்படி, தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 65,000 கருக்கலைப்புகள் நடக்கின்றன என்பது கண்டறியப்பட்டது. இது, பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பின் எண்ணிக்கை மட்டுமே.

கருத்தடை சாதனம்
கருத்தடை சாதனம்
freepik

பதிவு செய்யாமல், பாதுகாப்பற்ற முறையில் செய்துகொள்ளப்படும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை இதைவிடப் பன்மடங்கு அதிகம் என்பது செயற்பாட்டாளர்களின் கூற்று.

'கட்மேக்சர்' என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றின் ஆய்வில், 2015-ம் ஆண்டு மட்டும், அதாவது அந்த ஒரு வருடத்தில் மட்டும் தமிழகத்தில் ஏறத்தாழ 7 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடந்திருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த வருடங்களில் இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரித்திருக்கவே செய்யும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கருத்தடை சாதனங்கள்
கருத்தடை சாதனங்கள்

இப்படிப் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்துகொள்பவர்களில் பெரும்பகுதியினர் அதற்காக முன்வைக்கும் காரணம், `நான் இந்தக் கர்ப்பத்தை எதிர்பார்க்கவில்லை, மனதளவிலோ உடலளவிலோ இதற்கு நான் தயாராக இல்லை, திட்டமிடப்படாத கர்ப்பமான இதை கலைத்துக்கொள்கிறேன்' என்பதுதான். பாதுகாப்பாக, அதாவது பதிவு செய்து கருக்கலைப்பு செய்து கொள்பவர்களுமேகூட இந்தக் காரணத்தை அதிகமாக முன்வைப்பது உண்டு.

ஆக, திட்டமிடப்படாத கரு உருவாதலை தவிர்த்தாலே, கருக்கலைப்புகளைத் தவிர்த்துவிடலாம். இந்தக் கருத்தின் ஆழத்தை உணர்ந்து, அதை நிறைவேற்ற அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அப்படியான ஒன்றுதான், கருத்தடை சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு.

கருத்தடை சாதனங்கள்
கருத்தடை சாதனங்கள்

பல வருடங்களாகவே மேற்கொள்ளப்படும் இப்படியான விழிப்புணர்வு முயற்சிகள், நிதர்சனத்தில் எந்தளவுக்கான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிந்துகொள்ள `Reproductive Health Supplies Coalition' என்ற தன்னார்வ அமைப்பு சமீபத்தில் ஆய்வொன்றை மேற்கொண்டது. 69 நாடுகளில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், `FP2020 (ஃபேமிலி ப்ளானிங் 2020)' என்ற தலைப்பின் கீழ் சில தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில் முக்கியமானவை இதோ...

இந்தியாவில் 40.2 சதவிகிதம் இந்தியப் பெண்கள் நவீன கருத்தடை சாதனம் உபயோகிக்கின்றனர். இது எண்ணிக்கையில் தோராயமாக 13.7 கோடி பெண்களைக் குறிக்கும்.
கருத்தடை சாதனங்கள் உபயோகத்துக்காக, 2018-19-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 31 கோடி ரூபாய் வரையில் செலவு செய்யப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவில் 2018-19-ல் ஒன்றரைக்கோடி பேர் அதிகமாகக் கருத்தடை சாதனங்களை உபயோகிக்கின்றனர்.
நவீன கருத்தடை சாதனங்கள் உபயோகித்ததால், 2019-ம் ஆண்டில் மட்டும் 5.3 கோடி திட்டமிடப்படாத கரு உருவாதல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் தோராயமாக 18 லட்சம் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளும் 22,000 பிரசவ நேர இறப்புகளும் தவிர்க்கப்பட்டுள்ளன.
Family Planning
Family Planning
Vikatan Infographics

இந்த ஆய்வு முடிவு குறித்தும், நவீன கருத்தடை சாதனங்கள் உபயோகம் குறித்தும், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளைத் தடுக்க செயல்படும் செயற்பாட்டாளரும் மகப்பேறு மருத்துவருமான சுபஶ்ரீயிடம் பேசினோம்.

``பாதுகாப்பற்ற முறையில் நிகழும் கருக்கலைப்புகளைத் தடுக்க நாங்கள் முன்வைக்கும் முதலும் முக்கியமுமான விஷயம், கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதுதான். அந்த வகையில், இந்த ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும், இந்த விழிப்புணர்வு இன்னும் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்றவர், நவீன கருத்தடை சாதனங்கள் குறித்துப் பட்டியலிட்டார்.

  • ஆணுறை,

  • மாத்திரைகள்,

  • கருத்தடைக்கான ஊசிகள்

  • கான்ட்ராசெப்டிவ் ரிங்

  • காப்பர் டி

  • டியூபெக்டமி

  • வாசெக்டமி

என நவீன கருத்தடை சாதனங்கள், சிகிச்சைகள் பல இருக்கின்றன.

கருத்தடை சாதனம்
கருத்தடை சாதனம்
freepik
கருத்தடை சாதனம் பயன்படுத்துவதற்கு முன் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்!

எல்லோருக்கும் எல்லாக் கருத்தடை முறைகளும் பொருந்திவிடாது. உதாரணமாக, சிலருக்கு காப்பர் டியை உடல் ஏற்றுக்கொள்ளும், மாத்திரைகளை ஏற்றுக்கொள்ளாது. சிலருக்கு இவை இரண்டும் இல்லாமல் வேறேதேனும் கருத்தடை சாதனம்தான் பொருந்தும். ஆக, கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது கட்டாயம். தற்காலிகக் கருத்தடையோ, நிரந்தரக் கருத்தடையோ... எதுவாகினும் உபயோகிக்கும் முன் தேவை கவனம்.

கருத்தடை சாதனம்
கருத்தடை சாதனம்
freepik

நிரந்தரக் கருத்தடைகளைப் பொறுத்தவரையில், ஆண்களைவிடப் பெண்களே அதிகமாகக் கருத்தடை அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆனால், ஆணுக்கான அறுவைசிகிச்சைதான் மிகமிக எளிமையான ஒன்று.

சொல்லப்போனால், சிகிச்சைக்கு அடுத்த நாளே ஆண்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம். என்றாலும், ஆண்கள் இதற்கு முன்வராது, பெண்களையே கருத்தடை அறுவைசிகிச்சைக்கு நிர்பந்திப்பது வருத்தமான விஷயம்.

மேற்சொன்ன ஆய்விலும்கூட 40.2 சதவிகிதப் பெண்கள் கருத்தடை சாதனங்கள் உபயோகித்துள்ளார்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர, ஆண்கள் எந்தளவுக்கு உபயோகப்படுத்தியுள்ளனர் என்பது குறித்த விரிவான விவரம் இல்லை. கருக்கலைப்புக்கு எதிரான எங்கள் போராட்டத்தின் வழியாக, நாங்கள் முன்வைக்க விரும்பும் முக்கிய விஷயம், `ஆண்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.'

மகப்பேறு மருத்துவர் சுபஶ்ரீ
மகப்பேறு மருத்துவர் சுபஶ்ரீ

நிரந்தர கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்துவதில், பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்பதற்கு, குழந்தைப் பெறுதல் மீதான சமூக பார்வை மிக முக்கியமான காரணம். திருமண உறவுகளைப் பொறுத்தவரையில் நிரந்தர கருத்தடை என்றில்லை, தற்காலிக கருத்தடை உபயோகத்தில்கூட பெண்கள்தான் அதிகளவில் இருக்கின்றனர்.

எல்லாத்துக்கும் அடிப்படையாக இருப்பது, மனித மனங்களின் பாலின பேதம்தான்!
மருத்துவர் சுபஶ்ரீ

இந்த நிலைகளுக்கு முக்கிய காரணம், `கரு உருவாதல் பெண்ணுக்கான விஷயம், நமக்கும் அதற்கும் தொடர்பில்லை' என்ற ஆண்களின் எண்ணம். சொல்லப்போனால், பெண்களும்கூட சில நேரங்களில் அப்படித்தான் நினைக்கின்றனர்.

Vikatan
`திட்டமிடப்படாத கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும்' எனக்கூறி மகப்பேறு மருத்துவகளை நாடும் பெண்களில் பெரும்பாலானோர், உறவின்போதே கணவனிடம் `பாதுகாப்பாக உறவு வைத்துக்கொள்ளலாம்' என அறிவுறுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆண்களே, அதை நிராகரித்து இருக்கிறார்கள். இது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை!
மருத்துவர் சுபஶ்ரீ
கருத்தடை சாதன் உபயோகிப்பதில் பாலின பேதம்
கருத்தடை சாதன் உபயோகிப்பதில் பாலின பேதம்
கர்ப்பம் என்பது முழுக்க முழுக்க பெண்ணுக்கான விஷயம் என்றே பார்க்கப்பட்டு வரும் வரையில், இந்த நிலை மாறாது.

மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில்கூட, கர்ப்பத்தை தள்ளிப்போடுவது குறித்த விழிப்புணர்வு முழுக்க முழுக்க பெண்ணுக்கே தரப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகு, குடும்பக் கட்டுப்பாடு குறித்த ஆலோசனைகளும் சம்பந்தப்பட்ட தாய்க்குத்தான் தரப்படுகிறதே தவிர, தந்தைக்குத் தரப்படுவது இல்லை. ஆக எல்லாத்துக்கும் அடிப்படையாக இருப்பது, மனித மனங்களின் பாலின பேதம்! அது சரியானால்தான், நிலைமை மாறும்" என்றார் அவர்.