Published:Updated:

கடும் தட்டுப்பாட்டில் கபசுரக்குடிநீர்: விற்பனையைத் தடுக்கும் காவல்துறை - பின்னணியில் ஃபார்மா மாஃபியா?!

கபசுரக்குடிநீர்
கபசுரக்குடிநீர்

இத்தகைய அசாதாரண சூழல்களில், ஒரு மருந்தைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வுசெய்ய ஒரு குழு அமைக்கப்படுவது வழக்கம். இன்று வரை அது நடக்கவில்லை. முதல்வருக்கு நெருக்கமான வட்டத்திலுள்ள ஒரு குரூப்தான், கபசுரக்குடிநீர் சிகிச்சைக்கு முட்டுக்கட்டை போடுவதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் உச்சத்தில் இருந்த நேரம். தமிழக அரசும் எத்தனையோ விதமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அப்போதுதான் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தும் சக்தி, நிலவேம்புக் கசாயத்துக்கு இருக்கிறது என்று சித்த மருத்துவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய பரிந்துரையை ஏற்று அதைக் குடித்தவர்கள், குணமும் பெற்றார்கள். ஆனால், அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து சித்த மருத்துவர்கள் இதன் மகிமையை விரிவாக விளக்கினார்கள். அதன்பின்புதான், அரசே நிலவேம்புக் கசாயத்தை இதற்கான மருந்தாக அறிவித்தது. இலவசமாகவும் கொடுத்தது. எல்லோரும் பருகினர்; பகிர்ந்தனர். ஒரு வழியாக கட்டுக்குள் வந்தது டெங்கு.

 நிலவேம்புக் குடிநீர்
நிலவேம்புக் குடிநீர்

இப்போது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, கபசுரக்குடிநீரைப் பயன்படுத்தலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். பிரதமர் மோடி கூட கடந்த வாரம் தனது உரையில் கபசுரக்குடிநீர் பற்றி பேசினார். ஆனால் தமிழக அரசு, இப்போதும் இதைப்பற்றி எந்த வித ரியாக்ஷனும் காட்டாமல் மௌனம் காத்து வருகிறது. கபசுரக்குடிநீரைப் பருகினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், கொரோனா வைரஸ் தாக்காது என்பதை சில ஆதாரங்களுடன் முதல்வர் அலுவலக அதிகாரிகளிடம் சித்த மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். வரும்முன் காக்க உதவுவதோடு, கொரோனா தாக்கியவர்களுக்கும் இதைத் தரலாம் என்றும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக சித்தமருத்துவர்கள் தயாரித்துள்ள விரிவான ஆய்வு அறிக்கை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பார்வைக்கும் சென்றுள்ளது. இத்தகைய அசாதாரண சூழல்களில் ஒரு மருந்தைப் பயன் படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படுவது வழக்கம். இன்று வரை அது நடக்கவில்லை. முதல்வருக்கு நெருக்கமான வட்டத்திலுள்ள ஒரு குரூப்தான், கபசுரக்குடிநீர் சிகிச்சைக்கு முட்டுக்கட்டை போடுவதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.

அந்த 15 மூலிகைகள்!
கபசுரக்குடிநீர் சூரணத்தில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், சிறுகஞ்சொரி வேர், அக்கிரகாரம், முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதொடை, கற்பூர வள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு ஆகிய 15 மூலிகைகள் உள்ளன.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதற்கு ஆதரவாக இருந்த நிலையில், துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் எதிராக இருப்பதால்தான் இந்தக் கோப்பு முடக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவுகின்றன. கடந்த வாரம் பிரதமர் மோடி, தன்னுடைய உரையிலேயே இதைப்பற்றிக் குறிப்பிட்டதற்கு மத்திய அரசின் ஆயுஷ் துறையின் ஆராய்ச்சியாளர்கள் செய்த பரிந்துரைதான் காரணமாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஓரிரு நாள்களில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு வெளியாகுமென்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியிருக்கிறது. இதற்கிடையில், பிரதமரின் உரையில் கபசுரக்குடிநீர் இடம் பெற்ற பின்பு, இதைத்தேடுவோரின் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் அண்ணா நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட முக்கிய ஏரியாக்களில் இருக்கும் சித்த மருத்துவக்கடைகளில் மக்கள் கூட்டம் குவியத்தொடங்கியுள்ளது.

பீலா ராஜேஷ்- விஜயபாஸ்கர்
பீலா ராஜேஷ்- விஜயபாஸ்கர்

சென்னை அண்ணா நகர் ஆர்ச் அருகே தமிழக அரசின் சித்தா ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்குதான், சித்தா, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ படிப்புக்கான கல்லூரிகள் இயங்குகின்றன. அண்ணா நகர் ஏரியாவில் சித்தா மருந்துகள் விற்பனை செய்யும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்தக் கடைகளின் வாசல்களில் மக்கள் நீண்ட க்யூவில் நின்று கபசுரக்குடிநீர் சூரணத்தை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 30-ம் தேதி காலை அந்தக் கடைகளுக்கு வந்த போலீஸார், ‘கபசுரக்குடிநீர் சூரணம் விற்கக்கூடாது என்பது அரசு உத்தரவு. கடையை இழுத்து மூடுங்கள்’ என்று விரட்டியுள்ளனர். அண்ணா நகர் துணை கமிஷனர், உதவி கமிஷனர் என்று பெரும் பட்டாளமே அணிவகுத்து வந்து கடையை மூடச்சொல்லியிருக்கின்றனர். அதற்கு மறுத்த கடைக்காரர்கள், போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நிலவேம்பு எவ்வளவு முக்கியக் காரணமாக இருந்தது என்பதையும், சித்தா மருந்துக்கடைகள் பெரும் லாபமின்றி மக்களுக்கு அவற்றை விற்றது பற்றியும் கடைக்காரர்கள் தரப்பில் விளக்கியுள்ளனர். அவர்களின் வாதத்தை போலீஸ் அதிகாரிகள் ஏற்கவேயில்லை. கபசுரக்குடிநீர் விற்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும், அரசின் பெயரைப் பயன்படுத்தி நிலாவின் பெயரைக் கொண்ட ஐஏஎஸ் அதிகாரிதான் இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கபசுரக்குடிநீரை விற்கவிடாமல் அதிகாரிகள் தடுப்பதன் பின்னணியில் அலோபதி மருந்து நிறுவனங்களின் மாஃபியாக்கள் இருப்பதாகவும் சித்தா மருந்துக் கடைக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்ணா நகரில் சித்தா மருந்துக்கடைகளை மூடச்சொல்லி போலீஸார் மிரட்டிய விஷயம், சித்த மருத்துவ பிரபல மருத்துவர்கள் மூலமாக முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கும் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குணசேகரன்
குணசேகரன்

சித்தா மருந்துக்கடைக்காரர்கள் சார்பில் போலீஸ் அதிகாரிகளிடம் பேசிய சஞ்சீவி பார்மாவின் உரிமையாளர் குணசேகரனிடம் இதுபற்றி நாம் கேட்டபோது, ‘‘இதுதொடர்பாக உயர்அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கிறோம். இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்றார். தன் கடையில் கடந்த ஓராண்டில் மட்டும் ஒன்றரை லட்சம் நிலவேம்புக் கசாய பாக்கெட்டுகள் விற்றிருப்பதாகக் கூறும் குணசேகரன், நிலவேம்புக் கசாயம் குடித்த நபர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் என்பதால், அவர்களை கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்பில்லை என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார். நிலவேம்பு போலவே பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கபசுரக்குடிநீரிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமிருக்கிறது என்று வாதிடுகின்றனர் சித்தா மருந்துக்கடைக்காரர்கள். கபசுரக்குடிநீர் சூரண பாக்கெட்டுகள் 10 ஆயிரம் வேண்டுமென்று கத்தார் நாட்டிலிருந்து குணசேகரனுக்கு ஆர்டர் வந்துள்ளது. இருப்பினும் நம் மக்களுக்கு முன்னுரிமை அளித்து, இங்கேயே இந்த பாக்கெட்டுகளை விற்பனைசெய்து வருவதாகக் கூறும் குணசேகரன், ஒரு நபருக்கு ஒரு பாக்கெட் வீதமாக விற்பனை செய்துவருகிறார்.

பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், இந்த சூரணத்துக்கான மூலப்பொருள்கள் கிடைப்பதே தட்டுப்பாடாக இருக்கிறது. அதேபோன்று இந்தச் சூரணத்தை விற்பதற்கான கன்டெய்னர் தயாரிக்கும் கம்பெனிகள், லேபிள் அச்சடிக்கும் பிரஸ்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதால், இதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டுமென்று கோருகின்றனர் சித்தா மருந்துக்கடைக்காரர்கள்.

காவல்துறை அதிகாரிகளுக்கு கபசுரக் குடிநீர்
காவல்துறை அதிகாரிகளுக்கு கபசுரக் குடிநீர்

பி.ஹெச்டி. முடித்த பயோ கெமிஸ்ட்ரி விஞ்ஞானியான டாக்டர் எம்.எஸ்.ராமசாமி, கடந்த 15 வருடங்களாக இயற்கையான மூலிகைகளில் இருந்து சித்த மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவர் நம்மிடம் கூறுகையில், ‘‘கபசுரக்குடிநீரில் இருக்கக்கூடிய தாவர மூலக்கூறுகள், வைரஸை அழிக்கக்கூடிய தனித்துவமுடையவை. அதில் உள்ள பல்வேறு தாவரக்கூறுகள் ஒரே நேரத்தில் வைரஸின் மீது தாக்குதல் நடத்தும்போது, மனித உடலின் உட்புற திசுக்களுக்கும் வைரஸுக்கும் இடையே சுவர் போல ஒரு தடுப்பை கபசுரக்குடிநீரில் உள்ள தாவர வேதி மூலக்கூறுகள் உருவாக்கிவிடுகின்றன. அதுமட்டுமல்ல... வைரஸ் பல மடங்குகளாகப் பெருகுவதையும் இவை கட்டுப்படுத்துகின்றன. கபசுரக்குடிநீரில் இடம்பெற்றிருக்கும் 15 மூலிகைகளில் முக்கியமாக சீந்தல், நிலவேம்பு, ஆடாதொடை, முள்ளிவேர், அக்கிரகாரம், சிறுகஞ்சொரி, கோஷ்டம் ஆகிய தாவர மூலக்கூறுகள் வைரஸுக்கு எதிராகச் செயல்படுகின்றன. இதுதொடர்பாக நம் விஞ்ஞானிகள் அனுப்பியுள்ள மருத்துவ ஆராய்ச்சி விவரங்களை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகப் பரிசீலித்துவருகிறார்கள். கூடிய விரைவில் உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் ஓ.கே சொல்வார்கள்’’ என்கிறார்.

அரசின் கட்டுப்பாட்டில் தனியார் மருத்துவமனைகள்... ஜெகனின் அதிரடி தமிழகத்துக்கும் தேவையா?

கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர் நடராஜன் கூறுகிறார்... ‘‘கொரோனாவிற்கு நேரடியான மருந்து இது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், பின்விளைவுகள் இல்லாததும், ஏற்கெனவே பயன்பாட்டில் இருப்பதும்தான் கபசுரக்குடிநீர் மருந்து. இதன்மூலம் நோய் வரும்முன் காக்கலாம். நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கலாம். நம் உடலில் வாதம், பித்தம், கபம்.. என்று மூன்று வகைகளாக நோய்களைப் பிரித்துள்ளனர். தும்மல், மூக்கு ஒழுகுதல், இருமல், மூச்சு இரைப்பு, தொண்டைக்கட்டு... போன்றவை கபத்துக்கான அறிகுறிகளாக உள்ளன. அவற்றைச் சரிசெய்யும் மூலிகைகள் இதில் இருப்பதால்தான் இதை கபசுரக்குடிநீர் என்கிறோம். மாநில அரசின் சித்த ஆராய்ச்சி மருத்துவர்கள்கூட இதன் மருத்துவக் குணங்களையும், அவை தயாரிக்கத் தேவையான பட்ஜெட் பற்றியும் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள்’’ என்றார்.

ராமசாமி
ராமசாமி

சீனாவில் கொரோனா இவ்வளவு விரைவாகவும் குறுகிய வட்டத்திலும் கட்டுப்படுத்தப்பட்டதற்கு, ஆங்கில மருந்து மற்றும் சீனாவின் பாரம்பர்ய மருந்து இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தியதுதான் காரணமென்று அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க, நம்முடைய பாரம்பர்ய மருத்துவத்தை ஆராய்பவர்கள், சித்த மருத்துவர்கள் சொல்லும் விஷயத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனே பரிசீலிப்பது அவசியம். அதற்கு குறுக்குசால் ஓட்டுபவர்களைக் கண்டித்து தண்டிப்பதும் அதைவிட அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு