அலசல்
சமூகம்
Published:Updated:

செயல்படாத லிஃப்ட்... ஓட்டுநர் இல்லாத ஆம்புலன்ஸ்...

சேலம் இ.எஸ்.ஐ மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
News
சேலம் இ.எஸ்.ஐ மருத்துவமனை

சேலம் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் அவலம்!

கொரோனா காலத்தில், மாநில அரசு மருத்துவ மனைகளின் சேவைகள் மகத்தானவை. ஆனால், சேலத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் மருத்துவ வசதிக்காக உருவாக்கப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனையில், உயிர்க்காக்கும் உபகரணங்கள் இல்லை என்று அதன் பயனீட்டாளர்கள் குமுறுகின்றனர்.

சேலம் இரும்பாலை ரோட்டில் பால்பண்ணை அருகே மூன்று மாடிக் கட்டடத்தில் செயல்படுகிறது இ.எஸ்.ஐ மருத்துவமனை. இதன் தரை தளத்தில் புறநோயாளிகளும், முதல் தளத்தில் ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அலுவலகமும், இரண்டாவது தளத்தில் பெண்கள் வார்டும், மூன்றாவது தளத்தில் ஆண்கள் வார்டும் இயங்குகின்றன.

இதன் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசினார் இந்த மருத்துவமனையின் பயனீட்டாளர் சம்பத். “நான் 70 வயதைக் கடந்த மாற்றுத்திறனாளி. மாதம்தோறும் இங்கு சிகிச்சைக்காகச் செல்கிறேன். ஆறு வருடங்களாக இங்கு உள்ள இரண்டு லிஃப்ட்களும் வேலை செய்யவில்லை. இதனால், என்னைப் போன்ற வயதானவர்கள் மூன்றாவது தளத்தில் உள்ள ஆண்கள் வார்டுக்குச் செல்ல மிகவும் சிரமப்படுகிறோம்.

சம்பத் - சுரேஷ்குமார்
சம்பத் - சுரேஷ்குமார்

மருத்துவமனையில் இரண்டு டெலிபோன்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வேலை செய்யவில்லை. மற்றொரு போனுக்குப் பேசினால் யாரும் ரெஸ்பான்ஸ் செய்வதில்லை. ரிசீவரைத் தூக்கிக் கீழே வைத்துவிடுகிறார்கள்.

இந்த மருத்துவமனையில் ஆயுர்வேத டாக்டராக ஹரிணி என்பவர் இருந்தார். அவர் கடந்த வருடம் மாறுதலாகிவிட்டார். இதுவரை புதிய ஆயுர்வேத டாக்டர் நியமிக்கப்படவில்லை. இ.எஸ்.ஐ இயக்குநர் அலுவலகம் வரை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

சேலம் மாவட்ட சி.ஐ.டி.யு தொழிற்சங்கத் தின் இணைச் செயலாளர் சுரேஷ்குமார், இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் செய்ய வேண்டிய சேவைகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “இந்தியாவில் 1948-ம் வருடம் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் உருவாக்கப்பட்டு, இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தனி ஒரு கழகமாக இது செயல்படுகிறது. இந்தத் திட்டத்தில் இந்தியாவில் 3.60 கோடி தொழிலாளிகளும், 12.8 லட்சம் முதலாளிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். மாதம்தோறும் முதலாளிகளிடம் 4.75 சதவிகிதம், தொழிலாளிகளிடம் 1.75 சதவிகிதம் என 6.50 சதவிகிதம் தொகை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து இ.எஸ்.ஐ-க்கு சென்றது. ஆனால், மோடி அரசாங்கம் கடந்த 2019, ஜூலை 1-ம் தேதி முதல் முதலாளிகளிடம் 3.25 சதவிகிதம், தொழிலாளிகளிடம் 0.75 சதவிகிதம் என நான்கு சதவிகிதமாக தொகையைக் குறைத்துவிட்டது.

சேலம் இ.எஸ்.ஐ மருத்துவமனை
சேலம் இ.எஸ்.ஐ மருத்துவமனை

இந்தியா முழுவதும் 154 இ.எஸ்.ஐ மருத்துவ மனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை கொடுக்க முடியாதபட்சத்தில் பட்டியலில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்வார்கள். அந்தத் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கவேண்டிய தொகையை இ.எஸ்.ஐ வழங்காமல் பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. அதனால் இ.எஸ்.ஐ மருத்துவமனை பரிந்துரை செய்யும் நபர்களுக்கு, தனியார் மருத்துவமனைகள் உரிய சிகிச்சை கொடுப்பதில்லை.

நிதிப் பற்றாக்குறையால் இ.எஸ்.ஐ மருத்துவ மனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் பல ஆண்டுகளாக நியமிக்கப் படவில்லை. சேலம் இ.எஸ்.ஐ மருத்துவ மனையில் ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் இருக்கிறது. அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஓய்வுபெற்று ஒரு வருடமாகி விட்டது. இன்னும் ஓட்டுநர் நியமிக்கப்படவில்லை. இப்படி நாடு முழுவதும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன” என்றார்.

சேலம் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கண்காணிப் பாளரும் மருத்துவருமான நளினியிடம் பேசினோம். “இந்த மருத்துவமனையில் 2005-ம் ஆண்டு ஒரு லிஃப்ட்டும், 2011-ம் ஆண்டு மற்றொரு லிஃப்ட்டும் பழுதடைந்துவிட்டன. தற்போது ஒரு லிஃப்ட் சரிசெய்யப்பட்டு மின்வாரிய பொறியாளரின் தகுதிச் சான்றுக்காகக் காத்திருக்கிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வுபெற்றார். இன்னும் புதிய ஓட்டுநர் நியமிக்கவில்லை. ஆயுர்வேத மருத்துவர் இல்லை. இதையெல்லாம் இயக்குநர் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலிடம் கேட்டதற்கு, “மத்திய அரசு, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளுக்கு ஏராளமான நிதி வழங்குகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து இ.எஸ்.ஐ மருத்துவமனைகளும் ஸ்டார் அந்தஸ்து பெற்று மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இல்லை, லிஃப்ட் வேலை செய்யவில்லை எனச் சொல்வதுகுறித்து செக் செய்கிறேன்” என்றார்.