Published:Updated:

புதுக்கோட்டை: ரத்த வாந்தி எடுத்த பச்சிளங்குழந்தை... காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

ரத்த வாந்தி எடுத்த பச்சிளங்குழந்தை
ரத்த வாந்தி எடுத்த பச்சிளங்குழந்தை

இரண்டு நாள்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் சுவாசம் மற்றும் உப்பு சத்து இயல்பு நிலைக்கு வந்தது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமு - ரம்யா தம்பதிக்கு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஜனவரி 16-ம் தேதி 2.7 கிலோ எடையுள்ள அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த இரண்டு நாள் கழித்து, திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளது குழந்தை. அதோடு மலமும் ரத்தம் கலந்து வந்துள்ளது. இந்த நிலையில்தான், மூச்சுவிடவே சிரமப்பட்டுக்கொண்டிருந்த அந்தக் குழந்தையை பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை கொடுத்தனர். 2 நாள்கள் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 25 நாள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு, இப்போது நலமுடன் உள்ளது.

குழந்தை
குழந்தை

இதுபற்றி மருத்துவக்கல்லூரி டீன் பூபதியிடம் பேசினோம். "குழந்தையை பரிசோதித்தபோது குழந்தையின் நுரையீரலிலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு, ரத்த வாந்தி எடுத்துள்ளது தெரியவந்தது. அதோடு, குழந்தையின் சிறுநீரகம் செயலிழந்து உப்பு சத்து மிக அதிகமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மூச்சுவிடவே சிரமப்பட்ட அந்தக் குழந்தைக்கு வென்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதோடு நுரையீரல் ரத்தக் கசிவை சரிசெய்யக் குழந்தைக்கு 5 முறை ரத்த சிவப்பணுக்கள், ரத்த தட்டணுக்கள் மற்றும் ப்ளாஸ்மா செலுத்தப்பட்டது.

பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர், சிறுநீரக சிறப்பு மருத்துவர் சரவணக்குமார், குழந்தைகள் மருத்துவர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவக்குழுவால் குழந்தையின் வயிற்றில் குழாய் செலுத்தப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு நாள்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகு, குழந்தையின் சுவாசம் மற்றும் உப்பு சத்து இயல்பு நிலைக்கு வந்தது. செயற்கை சுவாசம் படிப்படியாக நீக்கப்பட்டு, குழந்தைக்குத் தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது.

கிருமித் தொற்றுக்கான ஆன்டிபயாடிக் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினரின் தொடர் சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை நலமுடன் உள்ளது. குழந்தையைக் காப்பாற்றப் போராடிய மருத்துவர்கள், செவிலியர்களின் பணி பாராட்டுக்குரியது" என்றார்.

பச்சிளங்குழந்தையின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த மருத்துவர்களுக்கு, குழந்தையின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு