Published:Updated:

புதுக்கோட்டை: பிறந்த உடனே பச்சிளங்குழந்தைக்கு குடல் அறுவைசிகிச்சை... அரசு மருத்துவர்கள் அசத்தல்!

புதுக்கோட்டை மருத்துவமனை
புதுக்கோட்டை மருத்துவமனை

அதிகப்படியான பனிக்குட நீரால் எந்த நேரத்திலும் குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் இருந்ததால், அதிகப்படியான நீரை சிகிச்சை மூலம் இரண்டு முறை நீக்கினர். பனிக்குட நீர் இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து, சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சித்திக் - ரஷியா தம்பதி. ரஷியாவுக்கு கர்ப்பகால ஸ்கேன் பரிசோதனை செய்தபோது, கருவின் சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினம் (Duodenum) வளர்ச்சியின்றி சுருங்கியிருந்துள்ளது. பனிக்குட நீர் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டதையடுத்து, புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரஷியாவைப் பரிசோதித்த ராணியார் மருத்துவமனையின் மகப்பேறு தலைமை மருத்துவர் அமுதா, பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர் ஆகியோர் கருவில் உள்ள குழந்தைக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டின் தீவிரம் குறித்து பரிசோதனை செய்தனர்.

புதுக்கோட்டை: பிறந்த உடனே பச்சிளங்குழந்தைக்கு குடல் அறுவைசிகிச்சை... அரசு மருத்துவர்கள் அசத்தல்!

மேலும், அதிகப்படியான பனிக்குட நீரால் எந்த நேரத்திலும் குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் இருந்ததால், அதிகப்படியான நீரை சிகிச்சை மூலம் இரண்டு முறை நீக்கினர். இதனால், பனிக்குட நீர் இயல்பு நிலைக்குத் திரும்பியது. மேலும், அம்னியோசென்டிசிஸ் (Amniocentesis) என்ற பனிக்குட நீர் பரிசோதனையும் செய்தனர்.

இதையடுத்து, நிறைமாதத்தில் சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் வயிறு வீக்கம் இருந்ததையடுத்து, பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அப்போது குழந்தைக்குச் செய்யப்பட்ட பரிசோதனையில் சிறுகுடல் சுருங்கி இருப்பதும், இரைப்பை அதிக வீக்கத்துடனும் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து குழந்தைகள் அறுவைசிகிச்சை மருத்துவர் பலசுப்பிரமணியம் மற்றும் மயக்கவியல் மருத்துவர் டேனியல் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், குழந்தையின் சிறுகுடலின் முதல் பகுதியில் இருந்த அடைப்பை அறுவை சிகிச்சை செய்து சரிசெய்தனர். அறுவைசிகிச்சைக்குப் பிறகு குழந்தை வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது. மூச்சுத்திணறல் சரியான பிறகு படிப்படியாகச் செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைக்கு நேரடியாகத் தாய்ப்பாலும் கொடுப்பட்டது. மூன்று வார தீவிர சிகிச்சைக்குப் பிறகு பச்சிளங்குழந்தையை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரி முதல்வர் பூவதி
கல்லூரி முதல்வர் பூவதி

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி கூறும்போது, ``மகப்பேறு, மயக்கவியல், குழந்தைகள் மருத்துவர்கள் குழுவின் கூட்டு முயற்சியால் பச்சிளங்குழந்தைக்கு குடல் அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர். குழந்தை தற்போது பூரண நலமுடன் உள்ளது. தனியார் மருத்துவமனையில் ரூ. 2 லட்சம் வரையிலும் செலவாகக்கூடிய இந்த சிகிச்சை, ராணியார் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு