Published:Updated:

`இழப்பு குறையும்; உயிர்கள் காக்கப்படும்!'- ராமநாதபுரத்தில் தடையைத் தாண்டி வரும் மருத்துவக் கல்லூரி

சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க தாமதம் ஆனதால் பல உயிர்கள் பலியாகி உள்ளன. இங்கு மருத்துவக் கல்லூரி அமைவதன் மூலம் இனி அது தடுக்கப்படும். இதற்கு ஏதுவாக விரைவான போக்குவரத்து வசதியுடன் கூடிய இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க முன் வர வேண்டும்.

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ( உ.பாண்டி )

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் வாய்ப்பு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பணியை விரைவாக தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ரவிச்சந்திர ராமவன்னி
ரவிச்சந்திர ராமவன்னி
உ.பாண்டி

நீண்ட கடற்கரைப் பகுதியை மட்டுமல்லாது பரந்து விரிந்த நிலப்பரப்பையும் கொண்டது ராமநாதபுரம் மாவட்டம். தொழில் வளம், விவசாயம் போன்றவற்றில் பின்தங்கிய மாவட்டமாக இருந்துவருகிறது. மீனவர்கள், விவசாயக் கூலிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவையான உயர் மருத்துவ சிகிச்சைகளுக்குகூட மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையையும், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளையும் நம்பி இருக்கும் நிலையும் இருந்து வருகிறது. இதைத் தவிர்க்க ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கனவாக இருந்து வந்தது. கடந்த 2009-ம் ஆண்டில் ராமநாதபுரத்தில் அமைக்கப்பட இருந்த அரசு மருத்துவக் கல்லூரி அரசியல் தலையீடுகளால் சிவகங்கைக்குச் சென்றது. இந்த நிலையில், தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்களின் நீண்ட கால கனவான மருத்துவக் கல்லூரி நனவாகப் போவது குறித்து மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் தங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள். வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி (முன்னாள் மாவட்ட கவுன்சில் தலைவர்): ``மிகவும் பின் தங்கிய மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரத்தில் நிலவும் வறட்சி, மருத்துவ வசதி குறைபாடு, உயர் கல்வி நிறுவனங்கள் இல்லாமை போன்றவற்றால் அதிகாரிகள் கூட இங்கு பணியாற்ற வரத் தயங்குகின்றனர். இந்த நிலையில், வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ள மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் கடந்த சில ஆண்டுகளாக கல்வி வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், இங்கு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள மக்கள், மீனவர்கள் உரிய மருத்துவ வசதியைப் பெற மருத்துவக் கல்லூரி பணியை விரைவாக தொடங்க வேண்டும்'' என்றார்.

மருத்துவக் கல்லூரி - ஜெகதீசன்
மருத்துவக் கல்லூரி - ஜெகதீசன்
உ.பாண்டி

ஜெகதீசன் (ராமநாதபுரம் சேம்பர் ஆப் காமர்ஸின் தலைவர்): ``புகழ்பெற்ற ஆன்மிக தலங்கள் நிறைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்துவரும் மக்களுக்காக மட்டுமல்லாது, இங்கு வந்து செல்லும் லட்சக்கணக்கான யாத்திரைவாசிகள், சுற்றுலாப் பயணிகளுக்குப் பயன்படும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது. சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க தாமதம் ஆனதால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இங்கு மருத்துவக் கல்லூரி அமைவதன் மூலம் இனி அது தடுக்கப்படும். இதற்கு ஏதுவாக விரைவான போக்குவரத்து வசதியுடன் கூடிய இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க முன் வர வேண்டும். இதற்கென முயற்சி மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் அனுமதி அளித்த பிரதமர் மற்றும் முதல்வருக்கும் எங்கள் நன்றி'' என்றார்.

மருத்துவர் பெரியார் லெனின் (மாவட்ட மனநல மருத்துவர்) : ``விளிம்பு நிலை மக்கள் நிறைந்த ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் உயர் சிகிச்சைகளுக்காக மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளை நம்பியிருந்த அடிமட்ட மக்களின் சிரமங்கள் தீரும். இங்கு தலை, மூளை, நரம்பியல் தொடர்பான அறுவை சிகிச்சை வசதி உள்ளிட்ட பல்வேறு உயர் தர சிகிச்சைப் பிரிவுகள் அமைவதால் நேரமும், பொருளாதார இழப்பும் குறையும். இதன் மூலம் எண்ணற்ற உயிர்கள் காக்கப்படும்'' என்றார்.

பெரியார் லெனின்
பெரியார் லெனின்
உ.பாண்டி

என்.ஜே.போஸ் (மீனவர் சங்க மாநிலச் செயலாளர்): மீனவர்கள் நிறைந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைவதை பெரும் வரமாக கருதுகிறோம். ஏனெனில் பல ஆண்டுகளாக இலங்கை கடற்படை தாக்குதலுக்கு ஆளான மீனவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பட்ட தாமத்தினால் பல உயிர்களைப் பறிகொடுத்திருக்கிறோம்.

இயற்கை சீற்றங்களினால் கடலில் மூழ்கும் மீனவர்களின் உயிரும் இதுபோன்ற தாமதத்தால் பறிபோயிருக்கிறது. இதை தவிர்க்க இங்கு அமைய உள்ள மருத்துவக் கல்லூரி உதவும். அதற்கு பாடுபட்ட அனைவருக்கும் மீனவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.

என்.ஜே.போஸ்
என்.ஜே.போஸ்
உ.பாண்டி

காலதாமதமாக அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி அறிவிப்பை காலதாமதம் இன்றி செயல்படுத்த வேண்டும் என்பதே ராமநாதபுரம் மக்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.