Published:Updated:

திருத்தணிகாசலம் கடந்துவந்த பாதை!

திருத்தணிகாசலம்
பிரீமியம் ஸ்டோரி
திருத்தணிகாசலம்

ஹெச்.ஐ.வி... ஆண்மைக் குறைபாடு... வெண்புள்ளி... ஆட்டிசம்... கொரோனா...

திருத்தணிகாசலம் கடந்துவந்த பாதை!

ஹெச்.ஐ.வி... ஆண்மைக் குறைபாடு... வெண்புள்ளி... ஆட்டிசம்... கொரோனா...

Published:Updated:
திருத்தணிகாசலம்
பிரீமியம் ஸ்டோரி
திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்... இன்றைக்கு இந்தப் பெயர் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பிரபலம். ஏன், உலக அளவில் தமிழர்கள் வாழும் இடங்களி லெல்லாம் ஏகத்துக்கும் பிரபலம்.

கிட்டத்தட்ட ரசிகர் மன்றங்கள் வைக்கும் அளவுக்கு ஆங்காங்கே அவருக்கு ஆதரவு காட்ட ஆரம்பித்தனர் பலரும். எல்லாவற்றுக்கும் காரணம்... ‘கொரோனாவுக்கு என்னிடம் மருந்து இருக்கிறது’ என்று வீடியோக்களில் தோன்றி தொடர்ந்து கூறியதோடு, அரசாங்கமும் மருந்து கம்பெனிகளும் சேர்ந்துகொண்டு தன்னைச் செயல்படவிடாமல் தடுப்பதாகவும் புகார் படித்ததுதான். ‘ஒரு தமிழர், அதுவும் சித்த மருத்துவர், அவர் சொல்லும் மருந்தை எதிர்ப்பது ஏன்... அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்த்தால்தான் என்ன?’ என்றெல்லாம் ஆதரவு பெருகியது. இந்நிலையில்தான், ‘போலி மருத்துவர்’ என்று சொல்லி திருத்தணிகாசலத்தைக் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டனர். கூடவே, குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார். சரி, உண்மையிலேயே என்னதான் நடக்கிறது... குண்டர் சட்டம் பாயும் அளவுக்கு திருத்தணிகாசலம் செய்த குற்றங்கள் என்னென்ன... என்றெல்லாம் ஆராய முற்பட்டபோது அதிர்ச்சித் தகவல்களாகக் கிடைத்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூத்த சித்த மருத்துவர்களின் கோரிக்கை காரணமாக, இந்திய மருத்துவக் கழகம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் திருத்தணிகாசலம் மீது புகார் கொடுக்கப் படவே, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவரைக் கைது செய்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார். தொடர்ந்து, தேனியைச் சேர்ந்த குருநாதன் வெண்புள்ளி நோய் சிகிச்சைக்காகவும், மதுராந்தகத்தைச் சேர்ந்த சுரேஷ் பக்கவாதத்துக்காகவும் திருத்தணிகாசலத் திடம் சிகிச்சை பெற்று ஏமாற்றப் பட்டதாகப் புகார் கொடுத்தனர். திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருத்தணிகாசலம் கடந்துவந்த பாதை!

‘‘ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வகையான நோயை குணப்படுத்தும் சித்தர் எனத் தன்னை அறிவித்துக்கொண்டு வலம்வந்திருக்கிறார் திருத்தணிகாசலம். ஆரம்ப காலகட்டத்தில், ஹெச்.ஐ.வி நோய்க்குத் தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூறியிருக்கிறார். தொடர்ந்து, ஆண்மைக் குறைபாட்டு சிகிச்சைக்காக, தமிழ்நாடு முழுக்கச் சென்று லட்சங்களில் வருமானம் பார்த்திருக்கிறார். பின்னர், வெண்புள்ளி நோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி, சேனல்களில் தோன்றி விளம்பரம் செய்து பலரையும் ஏமாற்றியிருக்கிறார். உச்சபட்சமாக, ஆட்டிசத்துக்கு மருந்து இருப்பதாகக் கூறி, போலி மருந்துகளைக் கொடுத்து பல குழந்தைகளை உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளியிருக்கிறார். திருத்தணிகாசலம்மீது தமிழகம் முழுக்கப் பல காவல்நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படாமல் இருக்கின்றன’’ என்கிறார்கள் திருத்தணிகாசலத்தைப் பற்றி நன்கறிந்தவர்கள்.

திருத்தணிகாசலம்மீது புகார் கொடுத்த தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த குருநாதனிடம் பேசினோம். ‘‘வெண்புள்ளி நோய்க்கு மருந்து இருப்பதாக, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சேனல் ஒன்றில் திருத்தணிகாசலம் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து, மதுரை லாட்ஜ் ஒன்றில் அவரைச் சந்தித்தேன். 6,000 ரூபாய்க்கு மருந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டதும், எனக்கு வெண்புள்ளிகள் மேலும் பரவ ஆரம்பித்தன. அடுத்த மாதம் சந்தித்து முறையிட்டேன். மீண்டும் 6,000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஒன்பது வகையான கலர் கலர் மாத்திரைகள் கொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த மாத்திரைகளைச் சாப்பிட்டதும், என் உடல்நிலை மோசமானது. அவரிடம் கேட்டால், ‘அப்படித்தான் ஆகும். இரண்டு மாதங்களில் சரியாகிவிடும். வெளிநாட்டி லிருந்து மருந்து வந்திருக்கிறது, அதைத் தருகிறேன்’ என்று கூறி மீண்டும் என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு மருந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டதும் எனக்குக் கைகால்கள் வீக்கமடைந்து, எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. திருத்தணிகாசலத்தைச் சந்தித்து சண்டை போட்டேன். கூடவே, மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன்.

திருத்தணிகாசலம் கடந்துவந்த பாதை!

மதுரை திடீர்நகர் காவல்நிலையத்துக்குப் புகார் மாற்றப்பட்டது. என்னைக் காவல்நிலையத்தில் அமர வைத்துவிட்டு காவலர்கள் சிலர் திருத்தணிகாசலத்தை விசாரித்து வருவதாகக் கூறிச் சென்றனர். சில மணி நேரம் கழித்து வந்த காவலர்கள், ‘அவரிடம் அருணாசலப் பிரதேசத்தில் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் உள்ளது’ என்றவர்கள், ‘மீண்டும் அவரிடம் போய் சண்டை போட்டால் உன்னை உள்ளே வைத்துவிடுவோம்’ என்று மிரட்டி அனுப்பினர்.

அந்த நேரத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து வைத்திருப்பதாகப் பொய்யான தகவலைப் பரப்பிவந்தார் திருத்தணிகாசலம். இன்னும் எத்தனை பேரை ஏமாற்ற இருக்கிறாரோ என வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவரைக் கைது செய்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே, சென்னை காவல்துறைத் தலைவருக்குப் புகார் அனுப்பினேன். என்னைப்போல பலரும் அவர்மீது புகார்கள் கொடுக்கத் தயாராக உள்ளனர்’’ என்றார்.

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்த கருப்பஞ்சாவடிதான் திருத்தணிகாசலத்தின் சொந்த ஊர். அங்கு சென்று ஊர்மக்களிடம் பேசியபோது, ‘‘கடலூரிலுள்ள பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படித்தவர். 25 வருடங்களுக்கு முன்னர் குள்ளஞ்சாவடியில் சிறிய கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து சொட்டு நீலம், ஊதுவத்தி போன்றவற்றைத் தயாரித்து வீடு வீடாகச் சென்று விற்றுவந்தார். பிறகு, சித்த வைத்தியம் என்ற பெயரில் மருந்துகள் கொடுக்க ஆரம்பித்தார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் சிலர் அவரைத் தாக்கினார்கள். பிறகு அந்த இடத்தை காலி செய்துவிட்டார்.

சில நாள்கள் கழித்து, ‘ஹெச்.ஐ.வி நோய்க்கு மருந்து கொடுக்கிறார்’ என்று இவரைப் பார்க்க வெளியூர்களிலிருந்து நோயாளிகள் நிறைய பேர் ஊருக்கு வர ஆரம்பித்தார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், நோயாளிகளையும் ஊருக்குள் வரக் கூடாது என்று சொன்னோம். அப்போது சென்னை சென்ற திருத்தணிகாசலம், பிறகு எப்போதாவது தான் ஊருக்கு வருவார். அவர் வீட்டில் யாரும் பரம்பரை வைத்தியர் கிடையாது. ஊரில் யாருடைய குழந்தைக்காவது குடலேற்றம் வந்துவிட்டால் அவரின் அம்மாதான் வயிற்றில் வழித்துவிடுவார். இப்போது அதுவும் இல்லை’’ என்றனர்.

திருத்தணிகாசலம் கடந்துவந்த பாதை!

திருத்தணிகாசலத்தின் சகோதரரும், தம்பிப்பேட்டை பாளையம் ஊராட்சி மன்றத் தலைவருமான குமரகுருவை அவரின் இல்லத்தில் சந்தித்தோம். ‘‘பரம்பரை வைத்தியருக்கான அரசுச் சான்றிதழை என் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் வாங்கியிருக்கிறோம். கொரோனா தொற்றால் எவ்வளவு தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் என் அண்ணனிடம் இருக்கும் மருந்து அதை குணப்படுத்திவிடும். என் அண்ணன் கொடுக்கும் கபசுரக் குடிநீரும் வாதசுரக் குடிநீரும் நன்றாக வேலை செய்கின்றன. அதையே அவர்கள் கொடுத்தால் வேலை செய்யவில்லை என்பதுதான் அவர்களின் கோபம்.

என் அண்ணனிடமிருந்து மருந்துகளைத் திருட சிலர் முயற்சி செய்தார்கள். அது முடியவில்லை. அடுத்து, `சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொடுக்கப் போகிறோம்’ என்று கூறி வாங்கிச் சென்றார்கள். அதன் பிறகு, என் அண்ணனிடம் நடத்தப்பட்ட சில பேச்சு வார்த்தைகளுக்கு அவர் உடன்படவில்லை. அதனால்தான் அண்ணன்மீது வழக்குமேல் வழக்கு போட்டிருக்கிறார்கள். அந்த குருநாதன் என்பவரைக்கூட, பணம் கொடுத்துத்தான் புகார் கொடுக்கவைத்திருப் பார்கள். அண்ணனைக் கைது செய்ததன் பின்னணியில் ஆங்கில மருத்துவர்களின் அரசியல் இருக்கிறது. பல கோடி ரூபாய் பணம் கைமாறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளையும் தாண்டி வேறு ஏதோ பெரிய சக்தி இருக்கிறது’’ என்றார்.

திருத்தணிகாசலத்தின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேசமயம் ஜனவரி மாதத்திலேயே அதாவது, கொரோனா பாதிப்பு இந்தியாவுக்குள் வருவதற்கு முன்பாகவே கபசுரக் குடிநீர், வாதசுரக் குடிநீர் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். மத்திய, மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து இதைப் பற்றியெல்லாம் வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது அரசாங்கமும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றைப் பரிந்துரைத்து, இலவசமாகவே கொடுத்துக்கொண்டிருக்கிறது.

அதற்காக, ஏற்கெனவே அவர் மீதிருக்கும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. குற்றங்கள் நிரூபிக்கப்படும் சூழலில் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்தப் புகார்களின் மீதெல்லாம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. கொரோனா காரணமாக அவர் வைரலாகிக் கொண்டிருக்கும் சூழலில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘என் மீதான நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஆங்கில மருந்து கம்பெனிகளின் சதிதான் காரணம்’ என்று அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டையும் வெறுமனே ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அரசாங்கம்தான் அனைத்தையும் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்த வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism