Published:Updated:

இனி உடல்களைக் கூறுபோடும் பிரேதப் பரிசோதனை வேண்டாம்... வந்துவிட்டது மெய்நிகர் பிரேதப் பரிசோதனை! #VirtualAutopsy

வழக்கமாக கூறாய்வு பிரேதப் பரிசோதனை முறைக்கு குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் செலவாகும். ஆனால் மெய்நிகர் virtopsyக்கு அரை மணி நேரம் போதும்.

சமீபத்தில் ராஜ்ய சபாவில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், `இன்னும் ஆறு மாதங்களில் `மெய்நிகர்’ பிரேதப் பரிசோதனை (Virtual autopsy – சடலத்தைத் தொடாமல் செய்யப்படும் உடற்கூராய்வு) இந்தியாவில் தொடங்கப்படும்.

Virtual Autopsy
Virtual Autopsy
Pixabay

தெற்காசிய தீபகற்ப நாடுகளில் இதுவே முதல் முயற்சியாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரையில் மெய்நிகர் பிரேதப் பரிசோதனையில் உள்ள சாதக பாதக அம்சங்களை அலசுவோம்.

பிரேதப் பரிசோதனை என்றால் என்ன... அது எதற்காகச் செய்யப்படுகிறது?

இறந்துவிட்ட ஒருவரின் இறப்புக்கான சரியான காரணம் ( cause of death), இறந்து எவ்வளவு நேரம் ஆகியிருக்கிறது (time of death) , இறந்தவரின் வயது என்ன (age of deceased) முதலிய காரணங்களை அறிவதற்குச் செய்யப்படும் மருத்துவ பரிசோதனையை `பிரேதப் பரிசோதனை’ என்று அழைக்கிறோம். பெரும்பாலும் பிரேதப் பரிசோதனை சட்ட சிக்கல் உள்ள மரணங்களில் அதிகமாகச் செய்யப்படுகிறது. விபத்தின் மூலம் ஏற்படும் மரணங்கள், தற்கொலைகள், கொலைகள் , சந்தேகத்துக்கு இடமான மரணங்கள் போன்றவற்றில் காவல்துறை கோரிக்கையின் பேரில் கட்டாயமாக பிரேதப் பரிசோதனை செய்யப்படும். பிரேதப் பரிசோதனை செய்வதில் நிபுணர்களை Forensic Medicine Experts என்று அழைக்கிறோம். பிரேதப் பரிசோதனை செய்யப்படுவது Experitise out of all experts என்று அழைக்கப்படுகிறது. அதாவது மருத்துவப் பண்டிதத்துவங்களுக்கெல்லாம் தலையாயது இது.

Forensic
Forensic
Pixabay

ஆம்.. இறந்தவரின் உடல் எந்தநிலையில் இருந்தாலும் சரி. எத்தனை சதவிகிதம் எரிந்து சாம்பலாகி இருந்தாலும் சரி.. பாதி அழுகி நாற்றம் எடுத்தாலும் சரி.. அந்தச் சடலத்தைப் பரிசோதனை செய்து இறந்தவரின் அடையாளத்தைக் கண்டறிவது, இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிவது போன்றவற்றைச் செய்வது மிக மிகக் கடினமான வேலை. உயிருடன் இருப்பவரிடம் உங்களை யார் குத்தினார்... எந்தத் திசையில் இருந்து குத்தினார்.. எந்த ஆயுதம்கொண்டு குத்தினார்... யார் உங்களை பலமாகத் தலையில் தாக்கியது.. என்றெல்லாம் கேட்டால் உடனுக்குடன் பதில் கூறிவிடுவார். ஆனால் மூச்சுநின்றுபோன, வாய் பேசாத பிரேதத்திடம் மேற்சொன்ன எதையும் எதிர்பார்க்க முடியாதல்லவா... அந்தப் பிரதேத்திற்கு நடந்தவற்றைவைத்து அனைத்தையும் கண்டறிவதுதான் இந்த நிபுணர்களின் சிறப்பு. மருத்துவத்துறையின் உதவி தேவைப்படும் வழக்குகளில் எல்லாம் பிரேதப் பரிசோதனை மிக வலிமை வாய்ந்த சாட்சியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது . இது நிபுணர்களின் சாட்சியாக கணக்கில் கொள்ளப்படுகிறது. இதனால் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கிறது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கிறது. நவீன மருத்துவத்துறையின் மிக முக்கிய பொறுப்பு பிரேதப் பரிசோதனை செய்வது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரேதப் பரிசோதனையில் செய்யப்படுவது என்ன?

காவல் துறையிடமிருந்து பிரேதப் பரிசோதனை கோரிக்கை வைக்கப்பட்டதும் பிரேதம் பிணவறையில் வைத்து கூறாய்வுக்கு உட்படுத்தப்படும். மருத்துவர் அனைத்து உள்ளுறுப்புகளையும் கூறாய்வு செய்து பரிசோதனை செய்வார். தேவைப்படும் உறுப்புகளை வேதியியல் பரிசோதனைக்குச் சேகரிப்பார். ரத்த மாதிரி சேகரிக்கப்படும். கபால மண்டை ஓடு பிரிக்கப்பட்டு மூளை பரிசோதிக்கப்படும் நெஞ்சுக்கூட்டு எலும்பு கூறாய்வு செய்யப்பட்டு இதயம் மற்றும் நுரையீரல் பரிசோதிக்கப்படும். குடல்களில் ஆயுதம் நுழைந்த தடங்கள் ஆய்வு செய்யப்படும். தேவைப்படின் நீதிபதியின் உத்தரவின்பேரில் மொத்த கூறாய்வு நிகழ்வும் படம்பிடிக்கப்படும்.

Brain
Brain
Pixabay

இதன் மூலம் மருத்துவர் மரணத்திற்கான காரணத்தையும் மரணம் நிகழ்ந்த உத்தேச நேரத்தையும் கணக்கிட்டுச் சொல்வார். இது காவல்துறையினர் குற்றவாளியைக் கண்டறிய, துப்புத்துலக்க உதவும். பல சமயம் வழக்கின் ஓட்டத்தையே மாற்றி அமைக்கும் முடிவாக இருக்கும். பல தற்கொலை வழக்குகள் கொலை வழக்குகளாக மாற்றப்படும்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரேதப் பரிசோதனையை `மெய்நிகர் முறைப்படி’ செய்ய இயலுமா? மெய்நிகர் பிரேதப் பரிசோதனை என்றால் என்ன?

Virtual autopsy என்றும் Virtopsy என்றும் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மெய்நிகர் முறை சில வளர்ந்த நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. இந்த முறைப்படி நவீன மருத்துவ அறிவியலின் வியத்தகு கண்டுபிடிப்புகளான உடலை ஊடுருவிப் பார்க்கும் சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்களை உபயோகித்து உயிரிழந்த பிரேதத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் நம்மால் இறப்புக்கான காரணத்தை பிரேதத்தை தொடாமல் செய்ய முடியும். இந்தியா போன்ற பல்வேறு கலாசார மற்றும் மத நம்பிக்கைகள் கொண்ட நாடுகளில் , இறந்த உடலுக்கும் அதற்குரிய மரியாதை தரப்பட வேண்டும் என்ற கருத்து உண்டு.

CT Scan
CT Scan
Pixabay

யாரும் தங்கள் மனதுக்கு நெருக்கமானவர் பிணமான பிறகும்கூட கூறுபோடப்படுவதை விரும்புவதில்லை. இதனால் பிரேதத்திற்கு எதுவும் சேதம் விளைவிக்காதபடி பிரேதப் பரிசோதனை நடந்தால் அதை பெரும்பான்மை மக்கள் வரவேற்கவே செய்வார்கள். எனவே மெய்நிகர் பிரேதப் பரிசோதனை முறை இந்தியாவில் அதற்குரிய வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த virtual autopsy முறையில் உள்ள சாதகங்கள் யாவை?

virtopsy பிரேதப் பரிசோதனை மூலம் ஏற்கெனவே சொன்னதுபோல கத்தியின்றி ரத்தமின்றி ஏன் சத்தமின்றி ஒரு பிரேதத்தைப் பரிசோதனை செய்ய முடியும் . வழக்கப்படி செய்யப்படும் கூறாய்வு பிரேதப் பரிசோதனை முறைக்கு குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் செலவாகும். ஆனால் மெய்நிகர் virtopsyக்கு அரை மணி நேரம் போதும்.

Scanning
Scanning
Pixabay

மேலும் ஸ்கேனிங், ஸ்பெக்ட்ரோமெட்ரி போன்ற அதிநவீன கருவிகள் மூலம் செய்யப்படும் விர்ச்சாப்சியில் மிக நுண்ணிய Hairline fractureகளைக்கூட எளிதாகக் கண்டறிய முடியும். மேலும் ஆயுதம் எத்தனை ஆழத்திற்கு உடலினுள் சென்றிருக்கிறது... இறப்பை ஏற்படுத்திய முதன்மைக் காயம் எது... உடலுக்குள் ஏற்பட்ட ரத்தப்போக்கு எவ்வளவு, மூளையில் உள்ள ரத்தக்கசிவு எவ்வளவு, குடல் பகுதியில் நிரம்பி இருக்கும் வாயுவின் கொள்ளளவு போன்றவற்றை உடலைக் கீறாமலேயே கண்டுபிடிக்கலாம்.

2009 -ல் ஐரோப்பாவில் விர்ச்சுவல் அடாப்சி முறையில் இறந்து போன 22 நபர்களின் உடல்களை ஸ்கேன் செய்து அவர்களின் எலும்புகள் மற்றும் பற்களைக் கொண்டு வயதைக் கண்டறியச் சொன்னதில் 100 சதவிகிதம் பலன் கிடைத்திருக்கிறது. மேலும், அடுத்தவருக்கு எளிதில் பரவும் தன்மைகொண்ட தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், காற்றின் மூலம் பரவும் விஷங்களினால் ஆட்கொள்ளப்பட்டு இறந்தவர்களை, பிரேதப் பரிசோதனை செய்யும்போது பரிசோதனை செய்பவருக்கும் பாதிப்பு ஏற்படலாம். இத்தகைய நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுவதிலிருந்தும் விர்ச்சுவல் அடாப்சி பாதுகாப்பு அளிக்கிறது. இவையெல்லாம் விர்ச்சுவல் ஆடாப்சியின் சாதகங்கள்.

பாதகங்கள் என்னென்ன?

இந்தப் பரிசோதனை முறைக்கு அதிகம் செலவாகும். சிடி ஸ்கேன் மெஷின்மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின்,. ஸ்பெக்ட்ரோஸ்கோபி மெஷின் என்று குறைந்தபட்சம் ஐந்து கோடி ரூபாய் ஒரு மருத்துவமனைக்கு வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் இதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உண்டு. மேலும், இந்த முறையில் ஒரு உறுப்பை மருத்துவர் தொட்டுப் பார்த்து எடுக்கும் துல்லிய முடிவை எடுக்க முடியாது. காரணம் இதில் இதயத்தை நேராகப் பார்க்க முடியாது. ஸ்கேன் மூலம் 3டி இமேஜாகத் தான் பார்க்க முடியும்.

Testing
Testing
Pixabay

விஷம் அருந்தி இறக்கும்போது அதற்கென பிரத்யேக நிறத்தில் ரத்தம் மாறியிருக்கும். இதை நாம் நேரில் பார்க்காமல் கண்டறிவது கடினம். புகை சுவாசப்பாதையினுள் உள்ளே சென்று இறந்திருந்தால் சுவாசப்பாதை முழுவதும் கரி பூசப்பபட்டிருக்கும். அதைப் பாக்காதவரை கண்டறிய முடியாது. ரத்த நாளம் வழி கான்ட்ராஸ்ட் எனும் மை கொடுத்து நம்மால் தெளிவான ஸ்கேன்களை எடுக்க முடியாது. காரணம் பிரேதத்திற்கு ரத்த ஓட்டம் இருக்காது அல்லவா? பொதுவாக உயிருள்ள ஒருவருக்கு ஸ்கேன் செய்கையில் படத்தை இன்னும் தெளிவாகக் காட்ட கான்ட்ராஸ்ட் எனும் மை செலுத்தப்படும். இதை contrast enhanced CT என்பார்கள். இதை பிரேதத்தில் செய்ய முடியாது என்பது ஒரு பின்னடைவுதான்.

மேலும், இப்போது நடைமுறையில் இருக்கும் முறையில் பிரேதப் பரிசோதனையில் நிபுணத்துவம்பெற்ற மருத்துவர் மட்டும் இருந்தால், பிரேதப்பரிசோதனையை முடித்து விடலாம். ஆனால் இப்போது கண்டிப்பாக ஸ்கேன் தொழில்நுட்ம் தெரிந்த ரேடியாலஜிஸ்ட்களின் பங்கு அதிகம் தேவைப்படும். நமது நாட்டில் இப்போது அதிக ரேடியாலஜிஸ்ட்கள் இல்லை. ஏற்கெனவே கடுமையான பணிச்சுமையில் அவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் இந்த வேலையையும் சேர்த்துச் செய்து, நீதிமன்றங்களுக்கு அவர்கள் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டு அதனால் ஏற்படும் பணி பாதிப்புகளால் பொதுமக்கள் இன்னல்களுக்குள்ளாகும் சூழ்நிலை வரலாம். ரேடியாலஜிஸ்ட்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இந்தப் பிரச்னைகளைத் தடுக்க உதவும்.

`2 நிமிடப் பரிசோதனை; 50 ரூபாய் செலவு!' -பாம்பு கடியின் அடையாளம் கண்டறியும் கேரளாவின் புதிய கருவி
Research
Research
Pixabay

இத்தனை சாதக பாதகங்களையும் கருத்தில்கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் (Indian council for medical research) மற்றும் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் சேர்ந்து புதியதொரு பிரேதப் பரிசோதனை முடிவை நடைமுறைக்குக் கொண்டு வர உள்ளது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில் இது போன்ற எளிதான முறை தேவை என்றாலும் , நிதிச் சிக்கல் மற்றும் நடைமுறைப்படுத்துதலில் உள்ள சிக்கல்களைத் தாண்டி இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வது சவால்தான். வெற்றிபெற வாழ்த்துகள்.

மாற்றங்களை வரவேற்போம். மாற்றம் ஒன்றே மாறாதது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு