Published:Updated:

ஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி!

கார்த்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி!
ஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி!

ஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

டந்த நான்கு மாதங்களாக மலேசிய விமானநிலையத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஹசன். இப்போதைக்கு அவருடைய வீடு அதுதான். உலகின் அத்தனை தேசங்களும் கைவிட்டுவிட்ட ஒரு மனிதன். இனி பூமியில் தனக்கு இடமில்லை என,  செவ்வாய் (மார்ஸ்) செல்லவிருக்கும் அமெரிக்காவின் நாஸா குழுவில் தன்னையும் இணைக்க விண்ணப்பித்திருக்கிறார் இந்த `உலக அகதி.’

ஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி!

அதிகாரபூர்வக் கணக்குகளின் படி உலகெங்கும் உள்ள சிரிய அகதிகளின் எண்ணிக்கை 63 லட்சம். அதில், சிரிய அகதிகளின் எண்ணிக்கையை இவ்வளவுதான் என உத்தேசமாகச் சொல்லவும் முடியாது. கடலில் ஒதுங்கும் பிணங்களின் எண்ணிக்கையையும், மலைகளில் விலங்குகளுக்கு இரையாகும் எண்ணிக்கையையும் சர்வதேச நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

உலகெங்கும் இருக்கிற நாடற்றவர்களின் எண்ணிக்கை 7 கோடி. அவர்களில் ஒருவர்தான் `ஹசன் அல் கொண்டார்.’

சிரியாவைச் சேர்ந்தவர். ஐக்கிய அரபு நாட்டில் 2006-ம் ஆண்டு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் வேலைக்காகச் சென்றார். 2011-ல் சிரியாவில் யுத்தம் தொடங்கியது. ஹசனை ராணுவத்தில் சேரச் சொன்னது சிரிய அரசாங்கம். மறுத்தார் ஹசன். விசாவை ரத்து செய்தது சிரிய தூதரகம். 2016 வரை ஐக்கிய அரபு நாடுகளிலேயே சட்டவிரோதமாகத் தங்கியிருந்தார், 2016-ல் கைது செய்யப்பட்டார். 2017 வரை விசாரணை நடக்க, அதே ஆண்டில் மலேசியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். 

ஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி!

மலேசியாவுக்குள் மட்டும்தான் சிரிய குடிமகன்கள் எளிதில் செல்ல முடியும். ஆனால், மலேசியாவிலேயே அகதியாக வாழ முடியாது என்பதால், ஈகுவடாருக்குச் செல்ல முயற்சி செய்தார். அந்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. கம்போடியாவுக்குச் சென்ற ஹசனை அந்நாட்டு அரசு மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பியது. தஞ்சம் புக இடமின்றி ஐநாவை அணுகியும்் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கனடாவுக்கு விண்ணப்பித்தார். 24 மாதங்கள் ஆகும் என்கிறார்கள்.
நாடற்ற மனிதனான ஹசன், செல்ல இடமின்றி, கடைசியில் மலேசிய விமான நிலையத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய 37வது பிறந்தநாளை மலேசிய விமான நிலையத்திலேயே கொண்டாடியிருக்கிறார் ஹசன்!

#mystory_hassan , #syrian_stuck_at_airport போன்ற ஹேஷ்டேக்குகளில் தன்னைப்பற்றிய நிலைத்தகவல்களை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார் ஹஸன். 

ஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி!

ஒரே உணவை மூன்று வேளையும் உண்பது; அங்கிருக்கும் நாற்காலியில் படுத்துறங்குவது என ஹஸனின் வாழ்க்கை வித்தியாசமானது. இத்தனை துன்பங்களையும் அனுபவங்களையும் நகைச்சுவை கலந்து எழுதுகிறார். கிகி சேலஞ்ச் தொடங்கி கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் வரை ஹஸன் பேசாத விஷயங்களே இல்லை. அவருடைய பதிவுகளுக்கு உலகெங்கும் ரசிகர்கள்அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள்!

“2011-ம் ஆண்டிலிருந்து எங்களுக்கு இந்த நிலை தொடர்கிறது. இனவெறி எங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. எங்களுக்கு இருப்பது மூன்று வழிகள்தான். எங்களை நாங்களே சட்டவிரோதமாகக் கடத்திக் கொண்டு வெளியேற வேண்டும் அல்லது மெடிட்டரேனியன் கடலில் மூழ்கிச் சாக வேண்டும் அல்லது மலைகளில் பல மாதங்கள் நடக்க வேண்டும். இவற்றை யெல்லாம் கடந்து நாங்கள் உயிரோடு இருப்போமாயின், எங்கேனும் தஞ்சம் புக எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.  யாரோ எங்கள் நாட்டில் புரியும் போருக்கு, நாங்கள் இரையாகிக்கொண்டிருக்கிறோம்’’ என்று உலக அகதிகளுக்காகத் தொடர்ந்து ஒலிக்கிறது ஹசனின் குரல். 

ஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி!

பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டால், ஹஸன் மலேசிய விமான நிலையத்திலும் இருக்க முடியாத நிலை. தன் அம்மாவுக்கு இப்போதும் ஹஸன் நம்பிக்கை வார்த்தைகளைத் தன் மொபைல் மூலம் அளித்துக்கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன், ஹஸனின் கிராமமான அல் ஸ்வீடாவில் 200 நபர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள் ISIS பயங்கரவாதிகள். அதில் அவரின் நண்பர்களும் அடக்கம். நிகழவிருந்த அவர் சகோதரரின் திருமணம், இந்தக் கொலைகளால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

ஹசனைப் போன்ற அகதிகள் கேட்பது வாழ்வதற்கான ஒரு நிலத்தைத்தான். சக மனிதனுக்கு அந்த உரிமையைக்கூடத் தர மறுத்துக்கொண்டிருக்கிறது உலகை ஆளும் அரசுகள்... என்றால் இந்த உலகம் யாருக்கானது?

கார்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு