சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

என்னஞ்சல்

என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
News
என்னஞ்சல்

என்னஞ்சல்

என்னஞ்சல்

ன்பில்லாத ஆண் சமூகத்துக்கு,

காலம்காலமாக உங்களால் உதாசீனப்படுத்தப்பட்டுவரும் பெண்களின் குரலாய் இந்தக் கடிதம். நலம் விசாரித்தலே கடிதத்தின் தொடக்கமாக இருக்கும். உங்களை நலம் விசாரிக்க விரும்பவில்லை நான். எம்நலன் பற்றி அக்கறை கொள்ளாத நீங்கள் நலமாக இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?

உங்களுக்கு ஒரு கேள்வி. இதற்கான பதிலைச்சொல்ல நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. நொடிப்பொழுது போதும்.  உங்கள் வீட்டுப் பெண் கடைசியாக எப்போது அழுதார் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பெரும்பான்மை ஆண்களின் பதிலை என்னால் எளிதாக அனுமானிக்க முடியும்.

என்னஞ்சல்

‘இன்னிக்குக் காலையிலகூட...’

அழுத கணத்தைச் சட்டெனச் சொல்லும் உங்களால் அவர் கடைசியாக எப்போது சிரித்தார் என்ற கேள்விக்கு இப்படி நொடிப்பொழுதில் பதில் சொல்லிவிட முடியாது என்பதையும் நானறிவேன்.

‘அதுக்கு சிரிக்கவே தெரியாதே....’ இதுவே பலரின் பதிலாகவும் இருக்கக்கூடும்.

பெண்களை ‘அது, இது’ என அழைப்பதே ஆண்களின் வழக்கமாக இருக்கிறது. அது என்பது அஃறிணை என்று அறியாமல்(?) அன்பின் அதீதம் என அருஞ்சொற்பொருள் சொல்லும் ஆண்கள் அநேகம்பேர்.

சரி... நீங்கள் கடைசியாக எப்போது சிரித்தீர்கள்?

உங்களுக்கு என்ன, சிரிப்பதற்கான விஷயங்களுக்கா பஞ்சம்? தமிழிசையின் ஹேர் ஸ்டைல் முதல் டப்ஸ்மாஷ் சித்ரா ஆன்ட்டியின் தோற்றம் வரை பெண்களின் புறத்தோற்றம் ஒன்றுபோதுமே.... நீங்கள் விலாநோக விழுந்துவிழுந்து சிரிப்பதற்கு. பெண்ணும் அவளது தோற்றமும் உங்களுக்கெல்லாம் கேலிப்பொருளாய்த் தோன்றுவதற்கு நீங்கள் மட்டும் காரணமில்லை. பெண்களின் ‘பேராதரவை நம்பி’ படம் எடுக்கும் சினிமாக்காரர்களே முதல் குற்றவாளிகள். அவர்கள்தாம் பெண்களைப் பற்றிய சித்திரத்தை உங்கள் மண்டைக்குள் தப்பாக வரைந்த ‘பிரம்மாக்கள்’.

சினிமாவுக்கான ஸ்டோரி டிஸ்கஷனில் உட்காரும்போதே... அந்தக் கதை யாருக்கானது என்பதைத் தீர்மானிக்கும்போதே.... தொடங்கிவிடுகிறது சினிமாக்காரர்களின் பாரபட்சம். இது சீரியல்களுக்கும் பொருந்தும்.

அழுகாச்சி, ஆத்தா சென்டிமென்ட் ஏரியாக்கள் பெண்களுக்கானவை. சாகசம், த்ரில்லர், சஸ்பென்ஸ், காமெடி போன்றவை ஆண்களுக்கானவை. இது நியாயமா நியாயமாரே?

தமிழ்சினிமாவில் தொடர்ந்து பெண்களுக்குப் பெரும் அவமானத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள் - நகைச்சுவை என்கிற பெயரில். காமெடி செய்கிற பெண்களுக்கென சாமுத்ரிகா லட்சணங்கள் எல்லாம் வைத்திருக்கிறீர்கள்.

கறுப்பாக இருப்பது முதல் தகுதி. குண்டாக இருப்பது கூடுதல் தகுதி. அங்கமுத்து காலம் தொடங்கி அறந்தாங்கி நிஷா காலம் வரை இதுவே விதியாகத் தொடர்கிறது. இவை எல்லாவற்றையும்விடச் சிறப்புத் தகுதி ஒன்று உண்டு. நகைச்சுவை நடிகை என்று பெயர் வாங்க நினைக்கிற பெண்கள் தம்மைத் தாமே தாழ்த்திக்கொள்ள வேண்டும். தன் தோற்றம் முதல் குடும்பம் வரை செல்ஃப் டேமேஜுக்கு சிரித்தபடியே தயாராக வேண்டும். சக காமெடியன் முதல் ஹீரோ, வில்லன் வரை எல்லோரும் செய்கிற கிண்டல் கேலிகளையும் சிரித்தபடியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

என்னஞ்சல்‘ஹீரோயின் ஆகணும்ங்கிற ஆசையிலதான் நடிக்க வந்தேன். முதல் படத்துல நான் காமெடியனுக்கு ஜோடி. அந்தப் படத்துல நான் கொஞ்சம் குண்டா இருந்தேன். அடுத்தடுத்த படங்கள்ல ஹீரோயின் ஆகிடலாம்ங்கிற என் ஆசை இப்போ வரைக்கும் நிறைவேறலை. ‘உங்க ப்ளஸ்ஸே உங்க குண்டு உடம்புதான். நீங்க ஸ்க்ரீன்ல வந்தாலே ஜனங்களுக்குச் சிரிப்பு வரும்’னு சொல்லியே என்னைப் பழக்கிட்டாங்க. நானும் மனசைத் தேத்திக்கிட்டேன்...’’ ஒரு நகைச்சுவை நடிகையின் மனக்குமுறல் இது.

காலம்காலமாக ஸ்டாண்ட் அப் காமெடி ஆண்களின் வசம் இருந்தது. சமீபகாலமாக அதில் பெண் முகங்களைப் பார்க்கிறேன். அதற்காக மகிழ்ச்சியடைய முடியவில்லை. மாறாக,  கோபமும் எரிச்சலும். ஸ்டாண்ட் அப் காமெடியிலும் பெண்கள் தம்மைத் தாமே கேவலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை விதியாகவே வைத்திருக்கிறார்கள். கருவாச்சி, குண்டச்சி, பேய், பிசாசு, அண்டா குண்டா... எத்தனை அடைமொழிகள். அந்த அடைமொழிகளை இன்முகத்தோடு அந்தப் பெண்கள் ஏற்பது பெருங்கொடுமை. இப்படி அடைமொழிகள் கொடுக்கிற ஆண், அந்தப் பெண்ணைவிடவும் கறுப்பாகவும் பருமனாகவும் இருக்கலாம். ஆனால் அது பிரச்னையில்லை யாருக்கும். ஸ்டாண்ட் அப் காமெடியில் பங்கேற்கிற ஆண் பெண்களிலும், நடுவர்களிலும் பள்ளி ஆசிரியர்களும், கல்லூரிப் பேராசிரியர்களும் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.
 
சினிமாவிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் காமெடி என்கிற பெயரில் நீங்கள் செய்கிற அட்டூழியங்களை எப்போதாவது திரும்பிப் பார்த்திருக்கிறீர்களா? அவை ரசிக்க வைத்தனவா என்று உங்கள் வீட்டுப் பெண்களிடம் பேசியிருக்கிறீர்களா?

சட்டம் தவறென்கிற பலதார மணம் உங்களுக்கெல்லாம் நகைச்சுவை. ஏற்கெனவே மூன்று மனைவிகளோடு வாழ்கிற காமெடியன் நான்காவதாகச் செய்துகொள்கிற திருமணம் நகைச்சுவையின் உச்சமென நினைத்துக் கொள்கிறீர்கள். நல்லா இருக்கய்யா உங்க நகைச்சுவை... ஜில் ஜங் ஜக்!

குட்டி ரேவதி, புஷ்பா புருஷன் என்று பெண்களின் பெயர்களை வைத்து நகைச்சுவை என்கிற போர்வையில் பெண்களை இழிவுபடுத்துவீர்கள். பெண்ணின் அழகை மலினப்படுத்துகிற ‘ப்ப்ப்பா...’ என்கிற எக்ஸ்பிரஷனும், ‘நல்லாசிரியர்னா எப்படி இருக்கணும் தெரியுமா, நல்லா இருக்கணும்’, ‘உன் மூஞ்சியைக் குதிரைகூடப் பார்க்காது’ என்கிற வசனங்களும்கூடப் பெண்மையைக் கேவலப்படுத்தும் உங்கள் வக்கிரச் சிந்தனையின் வெளிப்பாடுகளே என்பதை உணர்வீர்களா?

பெண்களின் மேல் நீங்கள் வைக்கிற விதம்விதமான குற்றச்சாட்டுகளில் ஒன்று அவர்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை என்பது. ஆமாம்... ஏற்றுக்கொள்கிறோம். உங்கள் பார்வையில் நகைச்சுவை உணர்வற்ற ஜடமாக இருப்பதில் மகிழ்ச்சிதான்.

ஆண்களாகிய உங்களுக்கு அடுத்தவரைத் திட்டுவதற்கு மட்டுமல்ல சக ஆண்களைச் சிரிக்க வைப்பதற்கும் பெண்ணுடலே ஆயுதம். பெண் உறுப்புகளைச் சொல்லித் திட்டுவது உங்கள் ரௌத்திரத்தின் எல்லை என்றால் பெண்களின் தோற்றத்தை நகைச்சுவைப் பொருளாக்குவது வக்கிரத்தின் எல்லை. உங்கள் வீடுகளிலும் கறுப்பிகளும் குண்டச்சிகளும் இருப்பார்கள், உங்கள் காமெடியில் அவர்களும் காயப்படுவார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?

பெண்களாகிய எங்களுக்கு அந்த மாதிரியான காமெடி தெரியாதுதான். எந்தப் பெண்ணாவது ஆண்களை அது, இது என அஃறிணையில் அழைக்கிறார்களா?  ஆணுறுப்பின் பெயரைச் சொல்லித் திட்டுகிறார்களா? குண்டான, கறுப்பான, தொந்தியும் தொப்பையுமான, வழுக்கை விழுந்த ஆண்களை வைத்து நகைச்சுவை செய்கிறார்களா?

அதெல்லாம்தான் காமெடி என்றால் நகைச்சுவை உணர்வு அற்றவர்கள் என்கிற பட்டத்தை நாங்கள் பெருமையோடு ஏற்றுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

உங்கள் வீட்டுப் பெண்களில் ஒருத்தி