Published:Updated:

என்னஞ்சல்

என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

என்னஞ்சல்

என்னஞ்சல்

என்னஞ்சல்

Published:Updated:
என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

ன்பில்லாத புறணியாளருக்கு,

`அவர் என்கிட்ட இப்படித்தான் சொன்னாரு’, ‘அப்போவே நெனச்சேன், இது இப்படித்தான் முடியும்னு’, ‘அவங்க ரெண்டு பேரும் ஒரே வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைக்கும்போதே நெனச்சேன்’ - ஏளனம் நிரப்பிய வார்த்தைகளால் புறணி பேசும்  (ஆ)சாமிகளே,  எப்படி முடியுது இப்படியெல்லாம்? ஒருத்தனோ, ஒருத்தியோ சில பல வருஷம் மோட்டிவேஷன் பாடல்கள்ல வரும் அளவுக்கு கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குன பெரும்பெயர்களை யெல்லாம் உங்கள் பொழுதுபோக்குக்கும், வக்கிரத்துக்கும் தீனி போட்டு, binge watching செய்யும் அழிவுக்காரர்களல்லவா நீங்கள்?

என்னஞ்சல்

கும்பிபாகம், கம்பிபாகம் என எந்த தண்டனையும் உங்களுக்குக் கிடைக்காது. ஏனென்றால் அந்தப் புறணிக்கான பாவத்தை ஏற்கெனவே ஒரு பெரிய கும்பல் பங்குபோட்டுக்கொண்டிருக்கும். புறணிக்கு இரையான அந்த ஜீவனுக்குத்தான், தூக்கமின்மை என்ற தண்டனை கிடைத்திருக்கும். கல்லூரி மாணவியோ, பேராசிரியையோ, காய்கறி விற்பவரோ, அலுவலகம் செல்லும் பெண்ணோ, காவல்துறையோ, பிஹெச்.டியோ, புறணியைப் பொறுத்தவரைக்கும் ஃபிக்ஸ்டு ரேட்தான். சலுகையெல்லாம் கிடையாது. `அப்டியா, இந்த விசயத்த யாரு உங்களுக்குச் சொன்னது?’ என்று எப்படி வளைத்துக் கேட்டாலும், புறணிக்காகவே பிரியாணி செய்ய நீங்கள் தேர்ந்தெடுத்த ஆளைக் குறித்துப் பேசுவதற்காக, எந்த எல்லைக்கும் போய் அவிழ்த்துவிடும் கற்பனைத் தேரோட்டிகள் நீங்கள். 

“ஃப்ரெண்ட்ஸ்னா..?” - இந்த விநோதமான கேள்வி எங்கெங்கு காணினும் புழக்கத்தில் இருக்கிற ஒன்றுதான். “ஃப்ரெண்ட்ஸ்னா...  ஃப்ரெண்ட்ஸ்னா, ஃப்ரெண்ட்ஸ்தான்டான்னு கத்தணும் போல இருக்கு”  என்று கெளதம் மேனன் குரலில், அவரது படத்தில் ஒரு டயலாக்கை வைத்துவிட்டால், ஆறுதலுக்காக அதையே வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ள என்னைப்போன்றே கடுப்பில் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது.

 நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்து போராடி, பிறகு மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் அனிதாவை யாரும் மறந்திருக்க முடியாது. நீட் வேண்டுமா, வேண்டாமா என்னும் விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, அறிவு பளிச்சிடும் அனிதாவின் அந்தக் கண்கள் எல்லோருடைய மனசாட்சியையும் துளைத்துக்கொண்டிருந்த நேரமது. எம்.பி.பி.எஸ் படிச்சே ஆகணுமா? ஏன் இன்னொரு முறை நீட் எழுதக்கூடாதா? - இப்படிப் பல கேள்விகளால், சமூக வலைதளங்களிலும், டிவி விவாதங்களிலும் அனிதாவின் வாழ்க்கையை போஸ்ட்மார்ட்டம் செய்துகொண்டி ருந்தார்கள் பலர்.

இப்படிப் பல கேள்விகளையும், அப்போது புறப்பட்ட புறணிகளையும் கொஞ்சம் எடுத்துப் பார்த்தால் புறம் பேசுவதும், விஷம் கொடுத்துக் கொல்வதும் ஒன்று என உங்களுக்குப் புரியலாம். சென்னைப் பெருநகர உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அவர். மகனுக்காக அந்தப்பக்கம் சிஏ படிப்புக்கான வாய்ப்பையும், இந்தப் பக்கம் சட்டப்படிப்புக்குப் பெயர்போன கல்லூரியில் வாய்ப்பையும் ஒரே நேரத்தில் ரிசர்வ் செய்து வைத்துக்கொண்ட வழக்கறிஞர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: `அனிதாவின் தாய் சிறு வயதில் தற்கொலை செய்து இறந்திருக்கிறார். அவரும் அதையே செய்திருக்கிறார்.’ புறணியன்ஸ் வெறுமனே, கதை திரிப்பதில்லை, மன நல ஆலோசகர்களாக, ஜோசியம் கூறுபவர்களாக, கமலஹாசனைவிட அதிக அவதாரங்கள் எடுக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அப்போதுதான் அறிய முடிந்தது. ‘ஒரு மனுஷன் எவ்ளோ கசப்பைத்தான்யா மனசுக்குள்ள வெச்சுக்க முடியும்?’ மோடுக்குப் போன நாள் அது.

பள்ளி, கல்லூரி, குடும்பம் என எல்லா இடங்களிலும் போராடி, தோற்றும் வென்றும் தனது கனவு அலுவலகத்தில் நுழைந்திருக்கிறார்கள் அந்தப் பெண்கள். பூமியில் விழுந்த வேகத்தில் குட்டி விலங்குகள் நடக்கத் தொடங்குவதைப் போலத்தான் அவர்களும். தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, நிரூபிக்க, அப்பாவைப் பெருமைப்படுத்த, தங்கையைப் படிக்கவைக்க, தன் கனவு நனவாகும் அந்தத் தருணத்தை அணைத்துக்கொள்ளவென அவர்களின் பிரயத்தனங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் கனம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? அந்தப் பெண் உங்களுக்கு மேலே உங்களைத் தாண்டி ஒருபடி ஏறுவதையோ, பாராட்டப்படுவதையோ ஏற்கமுடியாமல் போகும்போது, அவளின் ஒழுக்கம் குறித்த பேச்சு உங்களுக்கு ஆயுதமாகிறது. ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களைத் தோற்கடிக்க, பெண்களே வைத்திருக்கும் ஆயுதமும்கூட இதுதான்.

மூன்று அல்லது நான்கு உடைகளை மட்டும் சொத்தாக வைத்துக்கொண்டு நாளெல்லாம் நின்று வேலை பார்க்கும் இளவயதுப் பெண்ணை, தேர்வில் தோற்ற பதின்வயதுப் பிள்ளைகளை, துணையற்றுத் தன் குழந்தைகளை வளர்ப்பவர்களை, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் பெண்ணை, குழந்தை இல்லாமல் சமூகம் கொடுக்கும் அழுத்தத்தால் புழுங்கிக் கொண்டிருப்பவர்களை, நண்பர்களாக நீடிக்க விரும்பாமல் பிரிந்துவிட்ட சிறந்த நண்பர்களை என இன்னும் பல இத்யாதியானவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... விஷமமாக, நேரம் கடத்துவதற்காக, வாய்க்குள் எதையாவது போட்டு மெல்வதற்காக நீங்கள் அவர்களுக்குப் பின்னால் பேசிய புறணிகளின் கோரவலிக் கதைகளை அவர்கள் உங்களுக்குச் சொல்லக்கூடும்.

மற்றவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட, யூகித்த, திரித்த கதைகளைப் பிறரிடம் பேசி முடித்துவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது, உங்களுக்கும்கூட அதுவே நடந்திருக்கும். யாருக்கோ நீங்கள் செய்த அநீதியின் வெம்மை உங்களையும்கூடக் கருக்கிவிடக்கூடும். உங்களுக்காகவும் அனுதாபங்கள்தான். நாம் சமூக விலங்குகள். சரித்துத்தள்ளும் புறணி விலங்கிலிருந்து வெளிவராமல், நீங்கள் உங்களையும், வேறு எவரையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது. நம்மைப் பற்றி யார் பேசிக்கொண்டி ருக்கிறார்களோ என்னும் பயத்திலிருந்தும்...

- நம்பியவர்களாலேயே வன்மப் புறம்பேசப்பட்டு,

மன உளைச்சலுக்கு உள்ளாகி மாத்திரைகள் உட்கொள்ளும்

நான்

ஓவியம்: ஸ்யாம்