சினிமா
Published:Updated:

அன்பெனும் அருமருந்து!

அன்பெனும் அருமருந்து!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பெனும் அருமருந்து!

அன்பெனும் அருமருந்து!

வாக்கருடன் நடந்துவந்தார் விஜய். அவர் காதல் மனைவி ஷில்பா, அவரைக் கரம்பற்றி அழைத்துவந்தார். ‘`நல்லா இருக்கோம் மேடம்’’ என்று புன்னகைத்த விஜய்யின் முகத்தில், வார்த்தைகளைத் தாண்டி சமீபத்தில் பொருத்தப்பட்ட செயற்கைக் கால்கள் தரும் வலி தெரிகிறது.

அன்பெனும் அருமருந்து!

விஜய், வாணியம்பாடியைச் சேர்ந்தவர். கடந்த பிப்ரவரி மாதம், பெங்களூருக்கு வேலை தேடிச் சென்ற இவர், நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்று, வீடு திரும்புவதற்காக பெங்களூரு டு காக்கிநாடா செல்லும் சேஷாத்திரி எக்ஸ்பிரஸுக்காகக் காத்திருக்கிறார். தனக்கு வேலைகிடைத்த சந்தோஷத்தை அம்மாவுக்கும், தான் காதலித்து வந்த கல்லூரித் தோழி ஷில்பாவுக்கும் சொல்லிவிட்டு, ரயில் வந்ததும் போனை அணைத்துவிட்டு அதில் ஏறுகிறார். கண்மூடித் திறக்கும் நேரத்தில் அவரது வலது கால் ரயிலின் படிக்கட்டுகளுக்குள் மாட்டிக்கொள்ள, அதை எடுப்பதற்காக  விஜய் முயற்சி செய்துகொண்டிருக்கும்போதே ரயில் நகர ஆரம்பித்துவிடுகிறது. படிக்கட்டுகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட விஜய்யின் வலது கால் இரண்டாக உடைந்து தொங்க, வெளியில் தொங்கிக்கொண்டிருந்த இடதுகால் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கி, நசுங்கி முட்டிக்குக் கீழே துண்டாகி விழுகிறது. ரயில், நடைமேடையை விட்டு நகர்ந்து வேகம் எடுக்க ஆரம்பித்ததும் கம்பியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த விஜய் தூக்கி வீசப்படுகிறார்.

தலையெல்லாம் கருங்கற்கள் குத்தி முகமெல்லாம் ரத்தம் வழிய விழுந்துகிடக்கிற விஜய்யைத் தூக்கிவிடக்கூட ஆளில்லாமல் குப்புறக்கிடந்திருக்கிறார். விபத்து நடந்தது பிற்பகல் நேரத்தில் என்பதால், ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததுதான் இதற்குக் காரணம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்றிருந்தவர்களும், ரத்தம் வழிய கைகளை நீட்டி உதவி கேட்ட விஜய்யை வீடியோதான் எடுத்திருக்கிறார் களே தவிர, உதவி செய்ய முன்வரவில்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை ரயில்வே போலீஸார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.  பெங்களூரில் முதற்கட்ட சிகிச்சை எடுத்துக்கொண்ட விஜய்யை அதன் பிறகு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

எந்தப் பெரிய துன்பத்துக்கும் மாமாருந்தொன்று இருக்கிறது உலகத்தில். அதன் பெயர் அன்பு. விஜய்க்கு அதன் பெயர் ஷில்பா. கால்கள் இழந்த தன் காதலனை, தன் குடும்பத்தையும் மீறி, வேலூர் மருத்துவமனையிலேயே வைத்துத் திருமணம் செய்துகொண்டார் ஷில்பா. அது அப்போது எல்லாப் பத்திரிகைகளிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பிறகு, விஜய்யின் உடைந்த இன்னொரு காலும் ரத்த ஓட்டம் இல்லாமல் செயலிழந்து போய்விட்டதால், அதையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிட்டார்கள் மருத்துவர்கள். சமீபத்தில் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட விஜய், அவற்றுடன் நடைப்பயிற்சி, மிதிவண்டிப் பயிற்சி என்று மெள்ள மெள்ள இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்.

ஆகிவிட்டன ஐந்து மாதங்கள். சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து விஜய் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ‘`இந்தக் கட்டைக் கால்கள் ரொம்ப கனமாக இருக்கிறதால் நடக்கிறதுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. ராஜஸ்தான்ல லைட் வெயிட் செயற்கைக் கால்கள் கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க; அதை வாங்கணும். எனக்கொரு வேலை தேட ஆரம்பிக்கணும். எங்கம்மா ரொம்பப் பாவம்ங்க. அப்பா ஒரு குடி நோயாளி. அம்மாதான் ரயில்ல டி-ஷர்ட்ஸ் வித்து, குடும்பத்தைக் காப்பாத்திட்டிருந்தாங்க. அவங்களை உட்காரவெச்சு சாப்பாடு போடணும்னு நினைச்சுதான் பெங்களூருக்கு வேலை தேடிப் போனேன். கடைசியில ரெண்டு காலும் போனதுதான் மிச்சம். எனக்கு இப்படியானதும், படிச்சுக்கிட்டிருக்கிற என் தம்பியும் ரயில்ல டி-ஷர்ட்ஸ் விற்க ஆரம்பிச்சுட்டான். காலையில் வியாபாரம், சாயங்காலம் காலேஜ்னு ஓடிக்கிட்டிருக்கான் பாவம். தங்கையொருத்தி ஸ்கூல் படிச்சிக் கிட்டிருக்கா. அம்மாவும் தம்பியும்தான் குடும்பத்தைக் காப்பாத்தப் போராடிக் கிட்டிருக்காங்க. நான் அவங்க ரெண்டு பேர் பாரத்தையும் இறக்கி வைக்கணும். தங்கச்சியைப் படிக்கவெச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். ஆனா, இப்போ வெளியூருக்கெல்லாம் போய் வேலை தேட முடியுமான்னு தெரியலை. அதுதான் மனசுக்கு பயமா இருக்கு. நான் படிச்ச கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரிக்கு ஓர் அரசு வேலையோ தனியார் வேலையோ கிடைச்சுட்டா போதும்... உழைச்சு உழைச்சு களைச்சுப்போன என் அம்மாவையும், என்னை நம்பி, பெத்தவங்களைக்கூட விட்டுட்டு வந்த என் மனைவியையும் நல்லபடியா பார்த்துப்பேன்’’ என்கிற விஜய்யின் கண்களில், எதிர்காலம் பற்றிய பயத்தில் கண்ணீர் குளம் கட்டுகிறது.

அன்பெனும் அருமருந்து!

பதறிப்போய் கணவரின் கண்களைத் துடைத்துவிட்ட ஷில்பா, ‘`விபத்து நடந்ததுக்கு அப்புறம், இவர் என் போனையே எடுக்கலை. நான் கால் பண்ணினா, கட் பண்ண ஆரம்பிச்சார். நான் விடாம தொடர்ந்து பண்ணிட்டே இருந்தேன். கடைசியா ஒரு நாள் போனை எடுத்து, `எனக்குக் கால் போயிடுச்சு, என்னால் உன்னைக் காப்பாத்த முடியுமான்னு தெரியலை. என்னை மறந்துடு’னு சொல்லிட்டார். எங்க லவ் பற்றி ஏற்கெனவே என் வீட்டுக்குத் தெரியும். விபத்துக்கு அப்புறம், இன்னும் பலமா எதிர்க்க ஆரம்பிச்சுட்டாங்க. வேற வழியில்லாமதான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். விஜய் நல்லபடியா இருந்து, வேற காரணம் சொல்லி, கல்யா ணத்துக்கு மறுத்திருந்தா, ‘சரி போ’னு ஒதுங்கியிருப்பேன். ஆனா, என் மேலே இருந்த அன்பில்தானே அப்படிச் சொன்னார்? நான் மட்டும் எப்படி அவரை விட்டுட்டுப் போவேன்? அதான், அவரைக் கட்டாயப் படுத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

இப்போ விஜய் நடக்க ஆரம்பிச்சதும் என் மனசு நிறைஞ்சு போச்சுக்கா. வாழ்க்கை மேலே நம்பிக்கை வந்துருச்சு. எங்க கல்யாணத்தை எதிர்த்த எங்க வீட்டினரும் இப்போ சமாதானமாகிட்டாங்க. என் அத்தை, எனக்கு இன்னோர் அம்மா. அவங்க உழைச்சு எங்களுக்குச் சோறு போட்டுக் கிட்டிருக்காங்க. காசில்லை, வேலை இல்லை... ஆனா, இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பை பலமா கொடுத்துக்குறோம். அதுவே, எல்லாம் சரியாயிடும் என்ற நம்பிக்கையைக் கொடுக்குது. நாங்க நல்லா இருப்போம்’’ என்கிறார் உதட்டில் விலகாத புன்னகையுடன்.

விஜய்யைப் பார்க்க வந்திருந்த நண்பர் நம்மிடம், ‘`விஜய்க்கு இப்படியானதும் அவர், ‘என்னை மாதிரி நிலையில் இருக்கிற ஒருத்தருக்கு என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணி வைப்பேனா?’னு எல்லாம் சொல்லி எவ்வளவோ மறுத்தும், தங்கச்சி (ஷில்பா) விடவில்லை. இவங்களோட அன்பைப் பார்த்து ஆனந்தப்படுறதா... சின்ன வயசில் இருக்கும் ரெண்டு பேரும் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளப் போறாங்கனு நினைச்சு வருத்தப்படுறதானு தெரியலை. அவங்களோட உண்மையான காதல் அவங்களை வாழவைக்கும்ங்க’’ என்றார் நெஞ்சம் நிறைந்து!

கதவுகள் திறக்கட்டும்!

ஆ.சாந்தி கணேஷ் - படங்கள்: ப.சரவணகுமார்