Published:Updated:

"என் உயிர் கைத்தறி தொழிலோடுதான் முடியவேண்டும்!" - கலங்கும் கரூர் கைத்தறி நெசவாளர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"என் உயிர் கைத்தறி தொழிலோடுதான் முடியவேண்டும்!" - கலங்கும் கரூர் கைத்தறி நெசவாளர்!
"என் உயிர் கைத்தறி தொழிலோடுதான் முடியவேண்டும்!" - கலங்கும் கரூர் கைத்தறி நெசவாளர்!

"விநாயகர், காந்தி, திருவள்ளுவர், சீரடி சாய்பாபா, எம்.ஜி.ஆர்., சரஸ்வதி, மேரி மாதா, நந்தி எனப் பல உருவங்களை கைத்தறிமூலம் நெய்து, அதை தமிழ்நாடு முழுக்க எடுத்துச்சென்று மக்கள் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தினேன். ஆனால், அதையும் யாரும் பெரியளவில் ஆதரிக்கவில்லை. இருந்தாலும், நான் மனதை தளரவிடவில்லை."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 "அந்த மனுசன்தான் காகாசு வருமானம் இல்லாத இந்தக் கருமாயம் புடிச்சத் தொழிலை கட்டிக்கிட்டு அழுவுறார். நாலு பிள்ளைகளுக்கு திருமணம் பண்ணிவைக்க வழியில்ல. மூணுவேளை சோத்துக்கும் உத்தரவாதம் இல்லை. ஆனா, கடனவுடன வாங்கி எல்லாரும் கைகழுவிய கைத்தறி தொழிலை விடாம, காப்பாத்தியே தீருவேனு நிக்குற இவரப் போய் போட்டோ எடுக்க வந்திருக்கீங்களே... அட போங்க தம்பி" என்றபடியே பெரும் சத்தத்துடன் கதவடைக்கிறார், கரூர் கைத்தறி நெசவாளர் ஒருவரின் மனைவி. எதற்காக இந்தக் கதவடைப்பு? கைத்தறிக்காகவே உயிர் வாழ்கிறார். அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அதனால்தான் குடும்பத்தினர் அனைவரும் அவர்மீது வெறுப்பில் இருக்கிறார்கள். 

கரூர் வெங்கமேடு சோழன் நகரைச் சேர்ந்தவர், சின்னுசாமி. 72 வயதை நெருங்கிவிட்ட இவரது சிந்தனை, செயல், தொழில், சாப்பாடு, உணர்வு என எல்லாமே நெசவாகவே இருக்கிறது. கூரை வேயப்பட்ட இடத்தை ஒரு பகுதி வீடாகவும், மறு பகுதியைத் தனது நெசவுத் தொழிலுக்கான கூடாரமாகவும் பயன்படுத்தும் சின்னுசாமியைச் சந்தித்துப் பேசினோம்.

"சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அங்கமாக இருந்த கைத்தறி நெசவுத் தொழில், இன்று அழியும் நிலையில் இருக்கிறது. 2000-ம் ஆண்டுவரை நன்றாகத்தான் இருந்தது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 40,000 கைத்தறி நெசவாளர்களும், 60,000 பேர் மறைமுகமாகவும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பவர்லூம் என்கிற விசைத்தறி அறிமுகமானதும், கைத்தறி தொழில் நசியத் தொடங்கிவிட்டது. பவர்லூம் மூலம் நெய்யப்படும் துணிகள் கைத்தறி அளவுக்கு இல்லை என்று சொல்கிறார்களேயொழிய, பவர்லூம் நெசவை மட்டுமே வளர்க்கிறார்கள். என் மனைவியும் கடன்வாங்கி என்னையும் பவர்லூம் நெசவு செய்யச் சொல்கிறார். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. சொந்தமாகக் கைத்தறி தொழில் செய்த பலர், வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். ஆங்காங்கே தொடங்கப்பட்ட பவர்லூம் கம்பெனிகளுக்கும் பலர் வேலைக்குச் சென்றதால், கைத்தறி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. இப்போது கரூர் மாவட்டத்தில் 500 பேர் மட்டுமே கைத்தறி ஓட்டுகின்றனர். ஆனால், நான் பவர்லூம் வந்தாலும் கைத்தறி தொழிலை அழியவிடக்கூடாது என்று முயன்றுவருகிறேன். 

28.06.2006 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கைத்தறி முத்திரையை அறிமுகப்படுத்தினார். இதனால்,'கைத்தறிக்கு புதுவாழ்வு கிடைக்கும்' என்று எண்ணினேன். ஆனால், கைத்தறிக்கு வாழ்வு கிடைக்கவில்லை. ஆனாலும், விடாமல் கைத்தறிமூலம் துணிகளில் புதுமை புகுத்தத் தொடங்கினேன். விநாயகர், காந்தி, திருவள்ளுவர், சீரடி சாய்பாபா, எம்.ஜி.ஆர்., சரஸ்வதி, மேரி மாதா, நந்தி எனப் பல உருவங்களைக் கைத்தறிமூலம் நெய்து, அதைத் தமிழ்நாடு முழுக்க எடுத்துச்சென்று மக்கள் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தினேன். ஆனால், அதையும் யாரும் பெரியளவில் ஆதரிக்கவில்லை. இருந்தாலும், நான் மனதைத் தளரவிடவில்லை.

2009-ம் ஆண்டு கைத்தறி மூலம் விநாயகர் உருவத்தை அமைத்து போயஸ் கார்டனுக்கு அனுப்பினேன். அங்கிருந்து எனக்குப் போன் செய்த ஒரு பெண்மணி, 'நீங்க அனுப்பிய கைத்தறிமூலம் நெய்யப்பட்ட விநாயகர் உருவம் நல்லா இருந்துச்சுனு அம்மா சொல்ல சொன்னாங்க'னு என்று தெரிவித்தார். அதேபோல், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், உதயசூரியன், கும்பகலசம் ஆகிய உருவங்களைக் கைத்தறி மூலம் அமைத்து அனுப்பினேன். அதைப் பார்த்து உத்தரவு ஒன்றைப் போட்டார். ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் மாலைகளை அணிவிக்காமல் கைத்தறி துண்டுகளை அணிவிக்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு. ஆனால், அதை அரசு ஊழியர்கள் கடைப்பிடிக்கவில்லை. அதேபோல், எம்.எல்.ஏ நட்ராஜுக்கும் வெற்றி நமதே, இரட்டை இலை என்ற எழுத்துகளைப் பதித்த 100 துண்டுகளை அனுப்பிவைத்தேன். அதற்குரிய பணத்தைவிட அதிக தொகையை அனுப்பிய அவர், 'கைத்தறி தொழில் வளர்ச்சி பற்றி சட்டமன்றத்தில் பேசுறேன்' என்று சொன்னார். அதுபோல் அமைச்சர்கள் சிலருக்கும் இரட்டை இலை சின்னம் நெய்யப்பட்ட துண்டுகளை அனுப்பி வைத்தேன். அவர்களிடம், 'இதன்மூலம் கைத்தறி தொழிலை வளர்க்கலாம்' என்று ஆலோசனை வழங்கினேன். ஆனால், அவர்கள் யாரும் இதைக் கண்டுகொள்ள விரும்பவில்லை. அதுபோல் பிரதமர் மோடிக்கும் அனுப்பிவைத்தேன்.

இதுகுறித்து பேசிய பிரதமர் அலுவலக அதிகாரி சந்திரேஷ் சோனா, 'பிரதமர் பார்வைக்கு நீங்கள் அனுப்பியதைக் கொண்டு செல்கிறோம்' என்றார். ஆனாலும், அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதன்பிறகு, உயிர்மெய் எழுத்துகள் 30ஐ நெய்து, தமிழக கவர்னருக்கு அனுப்பிவைத்தேன். அங்கிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. இதுபோல் பலருக்கும் அவருடைய பெயர்களைக் கொண்டு நெய்த கைத்தறி துணிகளை அனுப்பிவைத்தேன். ஆனால், அனைத்திலும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், நான் 10 லட்சம் வரை கடன் வாங்கி, கடனாளியானேன். தற்போது என்னால் அதற்கு வட்டிகூடக் கட்ட முடியாமல் சிரமப்படுகிறேன். கைத்தறி தொழிலை விடவில்லை என்பதால், என் மனைவியும், என் பிள்ளைகளும் என்னிடம் பேசுவதுகூட இல்லை. அடுத்த முயற்சியாக, கைத்தறி நெசவு மூலம் 1330 குறள்களையும் அமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கேன். அதை மத்திய, மாநில அரசுகளின் பார்வைகளுக்கு அனுப்பிவைக்க இருக்கிறேன். கின்னஸுக்கும் அனுப்பலாம் என்று இருக்கிறேன். என் உடம்பிலிருந்து உயிர் பிரிவதற்குள் கைத்தறி தொழிலுக்கு எப்படியும் உயிரூட்ட வைப்பேன். எனது சாவு கைத்தறி தொழிலோடுதான் முடிய வேண்டும்" என்கிறார் சற்றே அழுத்தமாக.

கைத்தறிக்கு வாழ்வளிக்க அரசு முன்வர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு