Published:Updated:

``தங்கத்தில் கிறிஸ்துமஸ் குடில்!’ -அசத்திய ஆம்பூர் நகைத் தொழிலாளி

``தங்கத்தில் கிறிஸ்துமஸ் குடில்!’ -அசத்திய ஆம்பூர் நகைத் தொழிலாளி
``தங்கத்தில் கிறிஸ்துமஸ் குடில்!’ -அசத்திய ஆம்பூர் நகைத் தொழிலாளி

ஆம்பூரைச் சேர்ந்த நகைத் தொழிலாளி தங்கத்தில் மிகச்சிறிய அளவில் கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பைத் தத்ரூபமாக விளக்கும் வகையில் அந்தக் ‘குடில்’ உருவாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் சி.எஸ்.தேவன் (53). நகைத் தொழிலாளியான இவர், மிட்டூர் இந்தியன் வங்கி கிளையில் தங்க நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வருகிறார். சுமார் 35 ஆண்டுகளாக நகைத் தொழிலில் இருக்கும் தேவன், தங்கத்தில் மிக மிகச் சிறிய அளவிலான பொருட்களை உருவாக்கும் திறமையுடையவர். ஆம்பூர் ஷராப் பஜாரில் கடை வைத்திருக்கிறார். காலை முதல் மாலை வரை வங்கிப் பணியை கவனிக்கிறார். அதன் பிறகு கடைக்குச் சென்று நள்ளிரவு வரை நகைத் தொழிலை ஆர்வமுடன் செய்து வருகிறார். கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம் தங்கத்தில் சிறிய அளவில் பல்வேறு மாதிரி பொருட்களை திறம்பட உருவாக்கி வருகிறார். 

ஏற்கனவே, ‘அனைத்து மாநிலங்களையும் துல்லியமாக பிரித்துக் காண்பிக்க கூடிய வகையில் தங்கத்தில் மிகச்சிறிய அளவில் இந்திய வரைபடத்தை உருவாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி தங்கத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை மாதிரி, திருக்குறள் சுவடி, மகாத்மா காந்தி, அப்துல்கலாம், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்கள், இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-2 ராக்கெட், கிரிக்கெட் மைதானம், தங்கச் செருப்பு, தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தில் சூரிய மின்சக்தி சாதனங்களுடன் கட்டப்படும் பசுமை வீடு போன்ற மாதிரிகளை மிகச்சிறிய அளவில் மில்லி கிராம் தங்கத்தில் நுணுக்கமாக உருவாக்கியிருக்கிறார்.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மிகச்சிறிய அளவில் கிறிஸ்துமஸ் குடிலை 3 கிராம் 700 மில்லி தங்கத்தில் உருவாக்கியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை தத்ரூபமாகத் தங்கத்தில் வடிவமைத்து வெள்ளித் தட்டில் பதித்துள்ளார். இந்த கிறிஸ்துமஸ் குடிலை ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் சென்று பார்த்து ரசித்தனர். ‘சுமார் 12 மணி நேர இடைவிடாத தொடர் முயற்சியால் கிறிஸ்துமஸ் குடிலை உருவாக்கியதாக’ நகைத் தொழிலாளி தேவன் தெரிவித்துள்ளார். ‘இவரின் சாதனைகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் கவனித்திற்கு கொண்டு சென்று விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.