பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

காலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு...

காலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு...
பிரீமியம் ஸ்டோரி
News
காலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு...

காலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு...

‘இதயம்’ முரளி காதலெல்லாம் இன்றைக்குச் சுத்த ஹம்பக் ஆகிவிட்டது. பழைய படங்களில் ‘காதல்ங்கிறது...’ என்று ஹீரோ டயலாக் பேச ஆரம்பித்தால் பகபகவெனச் சிரித்துவிடுகிறது இன்றைய இணைய தலைமுறை. தாடி, தண்ணி, இரவெல்லாம் தலையணையைக் கண்ணீரில் நனைப்பது என்றெல்லாம் லவ் ஃபெயிலியரை கண்ணீரும் கம்பலையுமாகக் கடப்பதில்லை இவர்கள். சொல்லப்போனால், `பிரேக் அப்’புக்குப் பிறகு ஒரு ரோடு ட்ரிப் அடித்து, தங்களுக்குத் தாங்களே ரெஃப்ரஷ் பட்டன் தட்டிக்கொள்கிறார்கள். காதல் மனதிலிருந்து மூளைக்கு இடம் பெயர்ந்துவிட்டதா? உணர்வுகள், இன்டலெக்சுவல் பரிணாமம் அடைந்துவிட்டனவா? இருபதுகளில் இருக்கிறவர்களிடமே கேட்டோம். ‘`நோ ஊர், பேர் என்றால் வீ ஆர் ரெடி’’ என்றவர்கள், மில்லினியல் காதல் பற்றி இதயம் திறந்தார்கள்.

காலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு...

‘` ‘நோ’ன்னாலும் நோ பிராப்ளம்!’’

‘`ஒரு பொண்ணைப் பிடிச்சுட்டா அவ பெயர் தெரிஞ்சுக்கிறதுக்கே நாக்குத் தள்ளிப்போற அத்தியாயங்கள் எல்லாம் எங்க வாழ்க்கையில் கிடையவே கிடையாது. இருக்கவே இருக்கு சோஷியல் மீடியா. அவ பிறந்தநாள் தேதியில் இருந்து நேத்து போன அவுட்டிங்வரை எல்லாமே தெரிஞ்சுக்கலாம். ‘ஹாய்’ சொல்லி சாட்டிங்கில் நட்பை வளர்ப்போம். அதுக்கடுத்து வாட்ஸ் அப்பில் ஒரு புரபோஸ் மெசேஜ். பணக்காரப் பசங்க ஈவன்ட் டீம் மூலமா சர்ப்ரைஸ் புரபோஸல், ஃப்ளாஷ் மாப் புரபோஸல்லாம்கூட பண்றாங்க. பொண்ணுகிட்ட இருந்து `ஓகே’ன்னு ரிப்ளை வந்தா, காதலில் விழுவோம். இல்லைன்னா, நோ பிராப்ளம். அந்தப் பொண்ணுக்கு நம்மகிட்ட எதுவோ பிடிக்கலைன்னு புரிஞ்சுட்டு ஒதுங்கிடுவோம். ‘அவ இல்லைன்னா நான் இல்லை’ அழுகாச்சியெல்லாம் எங்க தலைமுறைக் காதலில் கிடையாது’’ என்கிறது சென்னைப் பசங்களின் காதல் அகராதி.  திருச்சி, தஞ்சாவூர் மாதிரி இரண்டாம் கட்ட நகரங்களில் இருக்கிற பசங்களிடம் பேசினால், ‘`லவ்வைச் சொல்றதுக்கு பயப்படுறது, சொன்னதுக்கு அப்புறமும் கூச்சம், தயக்கம் எல்லாம் இன்னமும்  இங்கே கொஞ்சம் கொஞ்சம் இருக்கு. மத்தபடி, நாங்களும் சோஷியல் மீடியாவை பொறுப்பா காதலுக்குப் பயன்படுத்துறோம்” என்கிறார்கள் தம்ஸ் அப் காட்டி. 

‘`சரி, ஒரு பையன் தன்னுடைய காதலைச் சொல்லியாச்சு. நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?’’ என்றோம் சில கேர்ள்ஸிடம்.   

``ஒரு பையன் ஸ்மார்ட்டா இருக்கான், நல்ல ஃப்ரெண்டா இருக்கான். அதுக்காக, அவன் ‘லவ் யூ’ சொன்னா `ஓகே’ சொல்லலாம்னு நாங்க நினைக்கிறதில்ல. ரெண்டு பேருக்கும் கருத்து ஒத்துப்போகணும். அல்லது, மாறுபட்ட கருத்து இருந்தாலும் எங்களால ஒத்துப்போக முடியுதான்னு பார்ப்போம். ஏன்னா, காதல் என்ற பெயர்ல எங்க சுதந்திரத்தை, சுயத்தை அடகுவெச்சிடக் கூடாதுன்னு நினைக்கிறோம்’’ என்றவர்கள், ‘`புரபோஸ் செய்றவனின் படிப்பு, வேலையைப் பற்றிக் கேட்போம். ஆனா, சம்பளத்தைப் பற்றிக் கேட்க மாட்டோம். அது ஓர் ஆணோட பர்சனல். தவிர, அது மாறக்கூடிய விஷயமும்தானே’’ என்கிறார்கள் படுமெச்சூர்டாக.

காலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு...‘`பசங்க மாறிட்டுவர்றாங்க!”

பெண்ணே முன்வந்து ஓர் ஆணிடம் தன் காதலைச் சொன்னால், ‘இவ கேரக்டர் எப்படி..?’ என்று சந்தேகிக்கிற ஆண்களின் பார்வை இந்தத் தலைமுறையில் மாறியிருக்கிறது. காதலில், இன்னும் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் ஆண்களின் பார்வை மெச்சூர்டாகியிருக்கிறது? ஒன், டூ, த்ரீ என்று அடுக்குகிறார்கள் கேர்ள்ஸ்.

‘`ஒருவேளை நாங்க லவ்வை ஏத்துக்கலைன்னா தங்களை வருத்திக்கிட்டு, ‘பொண்ணுங்க நோன்னு சொன்னா யெஸ்னு அர்த்தம்’னு உளறிக்கொட்டி  எங்களையும் வெறுப்பேத்துறது எல்லாம் இப்போ இல்லை. இந்த டிரஸ் போடக் கூடாது, சோஷியல் மீடியாவில் போட்டோ போடக் கூடாது, பாய் ஃப்ரெண்ட்ஸ் இருக்கக் கூடாதுன்னு இந்த ‘கூடாது’ கண்டிஷன்ஸ் எல்லாம் போடாத அளவுக்கு, பசங்க மெச்சூர்டு ஆகியிருக்காங்க. ‘நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு’ன்னு சொல்றாங்க. எங்க மேற்படிப்பு, வேலை மாதிரியான இலக்குகளுக்கு மதிப்பளிக்கிறாங்க. இன்னொரு பக்கம், எங்க லவ்வை பசங்க ரிஜெக்ட் பண்ணினால் நாங்களும் எங்களை வருத்திக்கிறது இல்லை. அவங்களுக்குச் சரிப்பட்டு வராத ஏதோ ஒண்ணு நம்மகிட்ட இருக்கலாம்னு லைட்டாதான் எடுத்துப்போம். அதுக்காகத் தன்னம்பிக்கைக் குறைவா எல்லாம் நாங்க  ஃபீல் பண்றதில்ல’’ என்கிறார்கள். ஆக, இந்தத் தலைமுறையின் ஒன் சைடு லவ் தோல்வியுற நேர்ந்தால், தேவைக்கும் அதிகமான துன்பம் எடுத்துக்கொள்வதில்லை... #வெரிஃபைடு!

‘`பிரேக் அப் ஃபார்மட்!”

``இருவரும் காதலித்து பிறகு ஏதோ ஒரு காரணத்துக்காகப் பிரிய வேண்டி வந்தால்..?!’’

‘`பெயின் இருக்கும்தானே?! `பிரேக் அப்’புக்கு அப்புறம் சில மாசங்கள் லைட்டா தாடி, கொஞ்சம் அப்செட், ஃப்ரெண்ட்ஸோட டிரிங்க்ஸ், ஃபேஸ்புக்கில் ‘ஃபீலிங் டிப்ரஸ்டு’ போஸ்ட்டுகள், ஸ்டேட்டஸில் ரூமி தத்துவங்கள்னு இதய இ.சி.ஜி ரிப்போர்ட்டில் சில நாள்களுக்குக் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கும்தான். நாள் முழுக்க அழற பையன்களும் இருக்காங்க. ஆனாலும், அதிலிருந்து வெளிவந்துடுவோம்’’ - இவையெல்லாம் பசங்களோட பிரேக் அப் டைரிக் குறிப்பு. ‘`ஆனா, பொண்ணுங்க நாங்க இந்த விஷயத்துல பெருசா மாறலைன்னு தோணுது. குறைந்தபட்சம் எங்களுக்கு  நெருக்கமானவங்ககிட்டயாவது அழுவது, நினைவுகளை மீட்டெடுத்து வாழ்வது, மன அழுத்தம் என அந்தப் பரிதவிப்பு அடங்க, கொஞ்சம் காலம் தேவைப்படுது’’ என்கிறார்கள் கேர்ள்ஸ்.

``லஸ்ட்?!’’

‘`லவ் ஓகே... உங்க லஸ்ட் எப்படி?’’ - கேட்டோம்.

‘`லவ்னா, லஸ்ட்டும் இருக்கும்தானே? ஆனா, இந்த அன்புக்கு இவர் தகுதியானவரான்னு எடைபார்க்க எங்களுக்குத் தெரியும். எங்களைப் பார்த்துக்கவும் எங்களுக்குத் தெரியும்’’ என்கிறார்கள் கேர்ள்ஸ். ‘`அஹெம்’’ என்கிறார்கள் பாய்ஸ்.

‘`லவ்வை ஏத்துக்கலைன்னா ஆசிட் வீசுறது, கத்தியால குத்துறது...’’ என்று நாம் முடிக்கும் முன் வருகிறது பதில், ‘`அது வன்முறை, வெறிங்க... அதுக்குக் காதல்னு பெயர் சொல்றதே தப்பு’’ என்கிறார்கள் கோபத்துடன்.  

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இன்றைய தலைமுறையினரின் காதலில் உருக்கத்தின் சதவிகிதம் குறைந்திருந்தாலும், யதார்த்தம் எக்கச்சக்கமாக இருக்கிறது. லவ் யூ கைஸ்!

ஆ.சாந்தி கணேஷ்

காலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு...

சோஷியல் மீடியா வில்லன்!

‘’லெ
ட்டர் போட்டு லவ் பண்ணின காலத்துல, கோபம் வந்தா அதை லெட்டர் வாங்கி எழுதுறதுக்குள்ள தணிஞ்சிடும். எங்க காலத்துல கையிலேயே ஒரு ஆயுதம் இருக்கு... கோபத்தை `பட்’டுனு ஒரு மெசேஜா போட்டுடுறோம். கடும் கோபம்னா, ‘பிளாக்’. இதனால, எங்களுக்கு சோஷியல் மீடியா எந்தளவுக்குத் தூது போகுதோ அதே அளவுக்கு வில்லன் வேலையும் பார்த்துடுது. ஒரு பிரச்னைன்னா நேரடியா பேசிக்கிறதை விட்டுட்டு ஃபேஸ்புக்கில் போஸ்ட், வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்னு பிரிவை எல்லாருக்கும் தெரிய வெச்சிடறோம். அதுக்கு அப்புறம் வாய்ச்சொற்கள் சமாதானம் செல்லுபடியாகிறதில்லை. இந்த ‘டெக்ஸ்ட்’ காதல் மனசுக்குள்ள வேகமா ஈகோவை வளர்த்து, காதலை வெளியேத்திடுது’’ என்கிறார்கள் வாக்குமூலமாக.

தப்பெல்லாம் தப்பே இல்லை!

கா
மம் கலக்காத காதல் என்று போற்றிப் பார்த்திருக்கிறோம். காதல் துளியும் இல்லாத காமம் என்றொரு கான்செப்ட் தோன்றியிருக்கிறது. ஃப்ளிங் (fling), நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்டு (no strings attached), ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் என்று அதற்குப் பெயர்கள் பல சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த மூன்றிலுமே காதல் இல்லை; தினமும் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்ற க்ரஷ்கூட இல்லை. செக்ஸ் மட்டுமே ஒரே எதிர்பார்ப்பு. ஸ்நாப்சாட், டிண்டர் போன்ற ஆப்கள், ‘காதல் வேண்டாம், சேட்டிங் மட்டும்’ என்று பலரை இணைக்கின்றன. ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’ என்பது, இன்னும் அதிர்ச்சி. ஒரு ரெஸ்ட்டாரென்ட்டின் ஒரு தளத்தில் ஆண்கள், பெண்கள் என இருப்பார்கள். ஓர் இரவு உறவுக்கானவர்களை அங்கே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மேலும், பல பிரபல ஸ்டார் ஹோட்டல்களில் ‘திருமணமாகாத தம்பதிகளுக்கு வெல்கம்’ என்ற வாசகத்துடனேயே ரூம் சர்வீஸ்கள் வழங்கப்படுகின்றன.