Published:Updated:

மண வாழ்க்கை மந்திரங்கள்!

காதல் திருமணமாகட்டும், பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட திருமணமாகட்டும்.

திருமண உறவு புதிய வாழ்க்கையின் தொடக்கம்; வாழ்க்கைப்  பயணத்தின் நீட்சி; இறுதிவரை நீடிக்கக் கூடிய பந்தம். குறிப்பாக, முதல் ஆண்டு மணவாழ்க்கை சரியாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே சிறக்கும் என்பார்கள். முதலாண்டு திருமண வாழ்க்கை என்பது வாழ்வில் அதுவரை சந்தித்திராத முற்றிலும் புதிய அனுபவங்கள் அடங்கிய ஆண்டாக அமைந்துவிடும். அதிகபட்ச மகிழ்ச்சி, அளப்பரிய அன்பு, மிகுந்த உற்சாகம், நெருடல், துக்கம், சண்டை, கோபம்  எனப் பல கலவையான அனுபவங்களை உள்ளடக்கியது. இன்றைக்கும் திருமணமானவர்கள் யாரிடம் கேட்டாலும், அதுகுறித்துச் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கும். 

மண வாழ்க்கை மந்திரங்கள்!

புதுமணத் தம்பதிகள் எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்வார்கள்? முதலாமாண்டு திருமண வாழ்க்கை சிறக்க எவற்றையெல்லாம் செய்ய வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்திடம் கேட்டோம்.

“காதல் திருமணமாகட்டும், பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட திருமணமாகட்டும்... துணையுடன் சரியான புரிந்துகொள்ளுதலுடன் நடந்துகொள்வது பெரிய சவால்தான். ஏற்கெனவே அறிமுகம் இருந்தாலும், சேர்ந்து வாழும் சூழலில்தான் அவர்களின் உண்மையான குணநலன்கள் தெரியவரும். வெவ்வேறு சூழலில் வளர்ந்த இருவரிடமும் நம்பிக்கை, விருப்புவெறுப்புகள், ஆளுமைப் பண்பு என குணங்கள் மாறுபடும். இருவருமே ஒன்றிப் போவார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இப்படிப்பட்ட வேறுபாடுகளோடுதான் ஆணும் பெண்ணும் திருமண வாழ்க்கையில் நுழைகின்றனர். வேறுபாடுகள் இயல்பானவைதாம்... ஆனால், சரியான புரிந்துகொள்ளல் இல்லையென்றால், இருவருக்கிடையேயான அன்பை இந்த வேறுபாடுகள் அசைத்துப் பார்த்துவிடும். இப்படி மாறுபட்ட எண்ணங்களையுடைய இருவரும் எப்படி ஒரு புள்ளியில் இணைந்து பயணிப்பது? இதுதான் அடிப்படையான பிரச்னை. இதை எப்படி எதிர்கொள்வது?

எதிர்பார்ப்புகள் எதிராகவும் போகலாம்!

திருமணத்துக்கு முன்பு தனக்கு வரும் துணை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால், அது பெரும்பாலானவர்களுக்கு அப்படியே அமைவதில்லை என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைச் சாமர்த்தியமாக மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். எவரிடமும் நிறை குறை இருக்கும். இரு தரப்பிலும் உள்ள பலம், பலவீனங்களை அறிந்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டே, வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.

‘பட்ஜெட் வாழ்க்கை’யில் கவனம்...

திருமண வாழ்வில் பெரிய இடைவெளியை உண்டாக்கக்கூடியது பொருளாதாரப் பிரச்னையே. பணவரவுக்கேற்ப நிதியை நிர்வகித்தல் என்பது  வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிப்படை. வருமானம் மற்றும் செலவுகளைப் பற்றி துணைவருடன் மனம்விட்டுப் பேசுங்கள். அது தம்பதியிடையே நம்பிக்கையை வலுப்படுத்தும். உங்களின் இப்போதைய நிதி நிலைமை, மாதாந்திர செலவுகள், முதலீடுகள் பற்றிய நிதி சார்ந்த இலக்குகளையும், அதை அடைவதற்கான திட்டங்களையும் துணையிடம் ஆலோசியுங்கள். கடன் இருந்தால், அதை அடைக்கவும், பின்னர் சேமிக்கவும் திட்டமிடுங்கள். வாய்ப்பிருந்தால் திருமணத்துக்கு முன்பே இருவரும் உங்கள் வரவு, செலவுகளைக் கணக்கிட்டு ஒரு பட்ஜெட் போட்டுவிடலாம். இதனால் தேவையில்லாத மன அழுத்தம் தவிர்க்கப்படும்; வாழ்க்கையை சீராக நடத்த நல்ல அடித்தளம் உருவாகும்.

துணையைப் புரிந்து கொள்ளுங்கள்


பெண்கள் திருமணமாகி புது இடத்துக்கு, புது சூழலுக்கு வருகின்றனர். அந்தச் சூழலுக்கு தன்னைப் பழக்கிக் கொள்ளச் சில காலம் தேவைப்படும். அந்தக் காலகட்டத்தில் கணவரும் குடும்பத்தினரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அதேபோலத் தன் வீட்டுக்கு வருவது ஒரு புதுப் பெண், அவளைப் புரிந்து கொள்ள முயல்வது நம்முடைய கடமை என்பதைக் கணவரும், அவருடைய வீட்டினரும் உணர வேண்டும். தம்பதியும் ஒருவர்மீது மற்றொருவர் அக்கறையும் கவனமும் எடுத்துக்கொள்ள வேண்டும்,

நம்பிக்கைதான் அடிப்படை


முதலில் திருமண வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அதுவே அடிப்படை. இருவருக்கும் வாழ்க்கைக்கும் அவசியம் என்கிற தெளிவு வர வேண்டும். பொருளாதாரத் தேவைக்கோ, வேறு எதற்காகவோ துணையை மட்டும் நம்பி இல்லை என்பதற்காகத் துணைக்கு உரிய மரியாதை தராமல் நடத்தக் கூடாது. அதேபோல சுதந்திரம் என்ற பெயரில் குடும்பத்துக்கும் திருமண வாழ்க்கைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. அரிதாகச் சிலருக்கு, `துணை நம்மைக் கைவிட்டு விடுவாரோ’ என்கிற நம்பிக்கையின்மை பிரச்னை வரலாம். அது தேவையற்ற சந்தேகம், பயம் உள்ளிட்டவற்றை உண்டாக்கி, மனதில் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, தேவையில்லாத அச்சம் தவிர்த்தல் வேண்டும் அல்லது அச்சம் சரியா என்று மனநல நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்கலாம்.

எதுவும் சாதாரண பிரச்னை இல்லை!


ஒருவருக்குச் சாதாரணமாகப்படும் ஒரு விஷயம். மற்றொருவருக்குப் பெரிய பிரச்னையாகத் தெரியலாம். உதாரணத்துக்கு... காலையில் தாமதமாக எழுவது, வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்ற விஷயங்கள் கூடத் துணையை அதிக கோபத்துக்குள்ளாக்கலாம். அதைச் சிலர் நேரடியாகச் சொல்லிவிடலாம் அல்லது வேறு வகையில் கோபமாக வெளிப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, அவர் எதிர்பார்க்கும் விஷயத்தை அவரின் நடவடிக்கை யிலிருந்தே  அறிந்துகொண்டு, அது நல்லதாகப்பட்டால் உங்களை மாற்றிக்கொள்வது பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும். முக்கியமாக, உங்கள் தூங்கும் பழக்கம், வேலை முடிந்து வீடுவருதல் போன்ற வழக்கமான நடவடிக்கை களில் இருவருக்கும் ஏற்றாற்போல அமைத்துக்கொள்ளலாம்.

ஒப்பந்தம் கைகொடுக்கும்!

ஒவ்வொருவருக்குமான விருப்பு, வெறுப்புகள் வேறுபடும். அதைப் புரிந்துகொள்ள துணையுடன் மனம் விட்டுப் பேசினாலே அவற்றைத் தெரிந்துகொள்ளலாம். சிலர் ‘விட்டுக் கொடுக்கிறேன்’ என்ற பெயரில் சுயவிருப்பு, வெறுப்பு அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிடுவார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அது கடுமையான மன உளைச்சலுக்கு வழிவகுக்கும். வெறுப்புகளைத் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தி, தெரியப்படுத்த வேண்டும். அவற்றில் எது முடியும் எது முடியாது என்பதையும் பேசி ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்.

புகார்களைத் தவிருங்கள்


இருவரின் திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கையை அப்படியே பகிர வேண்டிய அவசியம் இல்லை.   தற்போதைய அது வாழ்க்கையைப் பாதிக்கலாம். பழைய வாழ்க்கை முடிந்ததாகவே இருக்கட்டும். புதிய வாழ்க்கையில் சரியாக வாழ முற்படுங்கள்.

பாலின சமத்துவம் வேண்டும்


இந்தத் தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் பிரச்னை பாலின சமத்துவமின்மை. இது மணமக்கள் வாழ்க்கையில் நிச்சயம் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ‘என் அம்மா இப்படித்தான் இருந்தார், மனைவியும் அதுபோலத்தான் இருக்க வேண்டும்’ என்கிற எண்ணம் நடைமுறைக்கு உதவாது. இருவரும் சமமானவர்கள். இருவருக்குமான பொறுப்புகள் மாறுபடுமே தவிர, ஒருவர் கட்டளையிட மற்றொருவர் பின்பற்ற வேண்டும் என்கிற ஆதிக்க எண்ணம் தவறானது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கிற எண்ணம் அறவே கூடாது.  யாரும் யாருக்கும் அடிமையில்லை.  கடமைகளைப் பிரித்துக்கொண்டு அதைச் சரியாகச் செய்வதே ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கு அவசியம்.

உறவோடு ஒன்றியிருங்கள்


திருமண வாழ்க்கை என்பது இரண்டு மனங்களின் சங்கமம் மட்டுமல்ல; இரு குடும்பத்தினரின் இணைப்பும் ஆகும். இரு வீட்டாரின் உறவுகளையும் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த உறவைப் பற்றியும் புகார் சொல்லிக்கொண்டே இருக்கக் கூடாது. அதேபோல கணவன் மனைவி பிரச்னையை மூன்றாவது நபரிடம் ஆலோசனை கேட்கலாம். ஆனால், அந்த நபர் நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்துவிட வேண்டும்.

தாம்பத்தியம் பற்றி பேசத் தயங்காதீர்கள்


திருமணத்தின் அடிப்படையே தாம்பத்திய உறவுதான். உறவில்லா திருமணம் அர்த்தமற்றது. எனவே, தாம்பத்திய உறவைப் பற்றி பேசுவது திருமண உறவுக்கு அவசியம். பாலினத் தேவையைப்  புரிந்துகொள்ள இயலாவிட்டால், அது வேறு தவறான வழிக்கு இட்டுச் செல்லும். துணைவரிடம் நேர்மையாக மனம்விட்டுப் பேசினால்தான், அவர்களுடைய பாலியல் தேவைகளை, ஆசைகளை, எதிர்பார்ப்புகளை அறிந்துகொண்டு, அதன்படி நடக்க இயலும். இந்த உரையாடல்களைத் தேவைப்படும்போது நடத்துவது, ஆரோக்கியமான காதல் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்தே நிறுவ உதவும்.

சுயத்தை இழக்காதீர்கள்


திருமண வாழ்வில் நுழைந்ததாலேயே, லட்சியத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து படிக்கப் போகிறீர்களா,  வேலைக்குச் செல்லப் போகிறீர்களா என்கிற விருப்பத்தைப் பரஸ்பரம் தெரியப்படுத்திவிடுவது நல்லது. திருமணத்துக்குப் பிறகு ஒருவருக்கொருவர் எந்த வகையில் துணை நிற்க முடியும் என்பதைத் திருமணத்துக்கு முன்பே பேசிவிடுவதும் நல்லது. திருமணமாகி விட்டால் மணமக்கள் தங்களின் நண்பர்கள் வட்டத்தையோ, பொழுதுபோக்கையோ அடியோடு விட்டுவிட வேண்டும் என அவசியமில்லை. நட்பு வட்டம் மற்றும் பண விஷயங்களில் ஒளிவு மறைவின்றி இருவரும் இருத்தல் வேண்டும். இல்லையென்றால் ஒருவர்மீது ஒருவர் தேவையற்ற சந்தேகம் கொள்ள வழிவகுக்கும்.

போலியான வாக்குறுதிகள் வேண்டாம்!


வாழ்வின் வெற்றியே கொடுத்துப் பெறுவதுதான். அதாவது விட்டுக் கொடுத்து வாழ்வது. இதில் விட்டுக்கொடுப்பது என்பது சமமாக இருக்க வேண்டும். கணவனிடம் சிகரெட் பிடித்தல், மதுப் பழக்கம் போன்ற பழக்கங்கள் இருந்து, அதைத் திருமணத்துக்குப் பிறகு கைவிடுவதாக வாக்குறுதி கொடுப்பார். அது அவரால் முடியாமல் போனாலும் பிரச்னை உண்டாகும். எனவே, ஒருவர் தன்னுடைய பழக்கவழக்கங்களை அடியோடு மாற்றிவிட முடியாத நிலையில், அதுபற்றி வாக்குறுதி கொடுக்காமல் இருக்கலாம்.

மணவாழ்க்கை என்பது இரு மாடுகள் பூட்டிய வண்டியைப்போலத்தான். இருவரின் ஒத்துழைப்பும் இருந்தால்தான் வாழ்க்கைப் பயணம் சாத்தியப்படும். ஒருவரிடம் மட்டுமே பிரச்னை என்றாலும், பயணம் தொடர்வது பெரும் சிக்கல்தான் என்பதை நினைவில் நிறுத்தி வாழ முற்படுங்கள். வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள்!

ஜி.லட்சுமணன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு