Published:Updated:

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!
மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

பிரீமியம் ஸ்டோரி
மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

முதியவர்களை மட்டுமே மூட்டுவலி பாதிக்கும் என்கிற நிலைமை மாறி, இளம் வயதினரையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. `ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கத்திலிருந்து தடம் மாறியதன் விளைவாகப் பல்வேறு வழிகளில் மூட்டுவலி வருகிறது’ என்கின்றனர் மருத்துவர்கள். பரம்பரை, நோய்த்தொற்று போன்றவையும் இதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. மூட்டுவலி வருவதற்கான காரணங்கள், தீர்வுகள், வராமல் தடுக்கும் வழிகள் என எல்லாவற்றையும் விரிவாக விளக்குகிறார் எலும்பியல் மருத்துவர் நரேஷ் குமார்.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!
மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

இரண்டு எலும்புகள் இணையும் இடம் ‘மூட்டு’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய மூட்டுகள் தொடங்கி சிறிய மூட்டுகள்வரையிலான கலவையே மனித உடல். ஒரு மனிதனின் உடலில் 206 எலும்புகள் காணப்படும். ஆனால், மூட்டுகளின் எண்ணிக்கை 360. தோள்பட்டை, முழங்கால், மணிக்கட்டு, இடுப்பு ஆகியவை பெரிய மூட்டுகள் (Large Joints); கைகால் விரல்களில் இருப்பவை சிறிய மூட்டுகள் (Small Joints); தண்டுவடத்தில் காணப்படுபவை தண்டுவட மூட்டுகள் (Spinal Joints). 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

மூட்டுவலிக்கான பிரதான காரணங்கள் மூட்டுத் தேய்மானம் மற்றும் முடக்குவாதம். இந்த இரண்டு பிரச்னைகளுக்குமான சிகிச்சைகள் பெரும்பாலும் ஒரே வகையைச் சேர்ந்தவையே. மூட்டுத் தேய்மானம் ஏற்படும் நிலை ‘ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்’ (Osteoarthritis) எனப்படுகிறது. மூட்டுகள் இயல்பாக இயங்க, இரண்டு எலும்புகளுக்கு நடுவே, `ஜவ்வு’ (Cartilage) போன்ற அமைப்பு இருக்கும். இந்த ஜவ்வுதான் இரண்டு எலும்புகளும் உராயாமல், ‘சஸ்பென்ஷன்’ (Suspension) போலச் செயலாற்றும். ஜவ்வில் நெகிழ்வுத் தன்மை இருக்கும்வரை நடக்கும்போதும், எடையைத் தூக்கும்போதும் உடலின் பளு எல்லாப் பகுதிகளையும் சமமாக அழுத்தும். பொதுவாக, ஜவ்வின் அடர்த்தி 10 மி.லி மீட்டர் அளவு இருக்கும். வயதாகும்போது ஜவ்வு தேய்ந்து அதன் அடர்த்தி குறைவதால், மூட்டுவலி ஏற்படும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

வாழ்க்கைமுறை மாற்றமும் மூட்டுவலி வருவதற்கு முக்கியக் காரணம். இன்றைக்கு நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. வாகனங்களில் பயணம் செய்து அலுவலகம் செல்பவர்கள், அங்கே நாற்காலியில் உட்கார்ந்தபடியே வேலைசெய்கிறார்கள். சிலருக்கு மட்டுமே நின்றுகொண்டே வேலைபார்க்கும் சூழல். இதேநிலை தொடர்ந்தால், அவர்களின் மூட்டுகளில் பளு அதிகரித்து, தசைகள் பலவீனமடையும். இதனால் இரண்டு ஆண்டுகளில் மூட்டுகளில் வீக்கமும், மூட்டுகள் இயங்கும்போது சத்தமும் ஏற்படலாம். இது ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் ஏற்படுவதற்கான முக்கியக் காரணம்.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

மூட்டுத் தேய்மானத்துக்கான முதல் சிகிச்சை தசைகளின் வலிமையை அதிகரிப்பது. குறிப்பாக தோள்பட்டை, இடுப்பு மற்றும் தொடைப்பகுதி தசைகளின் வலிமையை மீட்டெடுக்க இயன்முறை மருத்துவர்கள் (Physiotherapists) சில உடற்பயிற்சிகளைப் பயிற்றுவிப்பார்கள். சில வாரங்கள் மட்டும் மருத்துவமனைக்குச் சென்று இயன்முறை மருத்துவரின் கண்காணிப்பில் அந்த உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நன்கு பழகியதும் வீட்டிலிருந்தபடி உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இவற்றை முறையாகச் செய்தால், வலி குறைந்து இயல்புநிலைக்குத் திரும்பலாம்.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

உடலில் கிருமி, நோய்த்தொற்று ஏற்படும்போது அவற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள, உடல் தானாகவே `ஆன்டிபாடிகளை’ (Antibodies) உருவாக்கிக்கொள்ளும். இந்தச் செயல்பாடு மாறும்பட்சத்தில், உடலிலுள்ள செல்களுக்கு எதிராக ஆன்டிபாடிகள் செயல்படும். இதனால் செல்கள் சிதைவதில் ஆரம்பித்து தைராய்டு சுரப்பி, சிறுநீரகம் என ஒவ்வோர் உறுப்பிலுமுள்ள செல்களுக்கும் எதிரான பணிகள் நடக்கும். மூட்டுகளின் உள்ளேயிருக்கும் செல்களுக்கு எதிராக ஆன்டிபாடி உற்பத்தியாவதே முடக்குவாதம் (Rheumatoid Arthritis). வயதானநிலையில் சிலருக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு மாறுவதாலும், பரம்பரையாகவும்கூட இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

முடக்குவாதத்தின்போது சிறிய மூட்டுகளே அதிகம் பாதிக்கப்படும். அடிக்கடி மூட்டு வீங்குவது, காலையில் எழுந்ததும், விரல்களை மடக்க முடியாத அளவுக்கு இறுக்கமாக இருப்பது போன்றவை இதன் அறிகுறிகள். ஆண்களைவிடப் பெண்களையே அதிகம் பாதிக்கும் இந்தப் பிரச்னை, குறிப்பாக 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிறது. பெற்றோரில் ஒருவருக்கு முடக்குவாதம் இருந்தால்கூட அவர்களின் பிள்ளைகளுக்கு வர வாய்ப்பிருக்கிறது. எனவே, முடக்குவாதம் உள்ளவர்களின் பிள்ளைகள் குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. `ஆர்ஏ ஃபேக்டர்’ (RA Factor), `ஆன்டி சிசிபி ஆன்டிபாடீஸ்’ (Anti CCP  Antibodies) போன்ற பரிசோதனைகள் முடக்குவாதத்தை ஆரம்பநிலையிலேயே கண்டறிய உதவும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்காலத்தில் மூட்டுவலி அதிகமாக இருக்கும். எனவே, அவர்கள் ஏ.சி அறையில் தூங்குவதோ, குளிர்ந்த நீரில் குளிப்பதோ கூடாது. உடலைக் குளிர்ச்சியாக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உணவில் இஞ்சி, பூண்டு, மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அசைவ உணவுகள் சாப்பிட்டால் மூட்டுவலி தீவிரமாகும் என்பதால், அவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் உடற்பயிற்சிகளைச் செய்வது, மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கும். உணவுக் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றம் செய்தும் சிலருக்கு வலி குறையாது. அத்தகைய சூழலில் வலி நிவாரணிகள், ஆன்டிபாடிகளின் உற்பத்தியைக் குறைக்கும் மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

முடக்குவாதம் தீவிரமானால், மூட்டு எலும்புகள் ஒன்றோடொன்று நேரடியாக உராயத் தொடங்கும். கால் வில்போல வளைந்துவிடும். நோயாளியை நிற்கவைத்த நிலையில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தால், இதைக் கண்டறியலாம். இத்தகைய சூழலில் மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சிகள் பலன் தராது. இயல்பாக நடப்பதில் சிரமம் ஏற்படும். கை விரல்கள் ஒரு பக்கமாக வளைந்திருக்கும். இந்த நிலையில் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு தரும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

முடக்குவாதத்தால் கால் மூட்டு பாதிக்கப்பட்டால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (Knee Replacement Surgery) செய்யப்படும்.  வளைந்திருக்கும் எலும்பை நேராக்கும்விதமாக குறிப்பிட்ட அளவு எலும்பு அகற்றப்படும். இரண்டு எலும்புகளுக்கும் நடுவே பாலி எத்திலீனால் ஆன செயற்கை ஜவ்வு பொருத்தப்படும். இடுப்பு மூட்டு வளைந்திருந்தால், அதை அகற்றிவிட்டு `செயற்கை இடுப்பு மூட்டு’ பொருத்தப்படும். விரல்களில் ஏற்படும் பாதிப்பைச் சரிசெய்ய ‘சாஃப்ட் டிஷ்யூ கான்ட்ராக்சர் ரிலீஸ்’ (Soft Tissue Contracture Release) என்ற அறுவை சிகிச்சை செய்யப்படும். இதன் மூலம் விரல்களில் இறுக்கமான ஜவ்வை இலகுவாக்கி, இயல்புக்குக் கொண்டுவர முடியும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

60 வயதில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு 80 வயதுவரை பிரச்னை இருக்காது. அதன் பிறகு அவர்களின் செயல்பாடுகள் மிகவும் குறைந்துவிடும் என்பதால், ஓர் அறுவை சிகிச்சையுடன் முடிந்துவிடும். ஆனால், 40 வயதில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டியிருக்கும். எனவே, 40 வயதில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் அதைத் தள்ளிப் போட வேண்டும். ஆனால்,             50 வயதுக்கு மேல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைக்கப்படும். 50 வயதுக்கும் குறைவானவர்களுக்கு வலியைக் குறைப்பதற்கான தற்காலிகச் சிகிச்சைகள் அளிக்கப்படும். அவர்கள் உடற்பயிற்சி செய்தால், வலி நன்றாகக் குறைந்துவிடும் என்பதால், அறுவை சிகிச்சை தேவைப்படாது. 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

சிலருக்கு வலி அதிகமாக இருந்தாலும், `மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வேண்டாம்’ என்பார்கள். அறுவை சிகிச்சை செய்தால் ஏதாவது பிரச்னை ஆகிவிடுமோ என்ற பயத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை. மூட்டுத் தேய்மானம் அதிகமாக இருந்தால், மூட்டுகளின் இயக்கத்துக்கு ஸ்டீராய்டு ஊசி போடப்படும். இது மூட்டு உராய்வதற்கு உதவிசெய்யும். இது தற்காலிகத் தீர்வு என்பதால், சுமார் ஓராண்டுவரை வலியில்லாமல் சமாளிக்கலாம். மீண்டும் வலி வந்தால், ஊசி போடலாம். ஆனால், நீண்ட காலம் இதைத் தொடர முடியாது; அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு தரும்.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

முதுகுத்தண்டிலிருக்கும் மூட்டுகள் தேய்மானம் அடைவது, `தண்டுவாதம்’ எனப்படுகிறது. ‘ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Ankylosing Spondylitis) எனப்படும் இந்தப் பிரச்னை ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. ஆண்களை அதிகம் பாதிப்பதற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சி இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. சிலர் உடல் எடையை இரு பக்கங்களிலும் சமமாக வைக்காமல், ஒரு பக்கமாக அதிக பாரம் கொடுத்து நிற்பார்கள். இன்னும் சிலர் நீண்டநேரம் உட்கார்ந்தபடியே வேலைசெய்வது, முதுகுத்தண்டுவடத்தை நேராக வைக்காமல் கூன் போட்டு உட்கார்ந்து பழகுவது ஆகிய பழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். இத்தகைய பழக்கங்கள் பல ஆண்டுகள் நீடித்தால், ஒரு பக்கமாக அதிக பாரம் ஏற்படும். இதனால் முதுகுத்தண்டுவடத்திலுள்ள இரண்டு எலும்புகளுக்கும் நடுவே ஜவ்வின் நெகிழ்வுத் தன்மை கடினமாகி, வலி ஏற்படும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

தசைகளை வலுப்படுத்தி, தண்டுவடத்தை நேராக்கி, கூன் விழாமல் நேராக நடக்க இயன்முறை உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றில் நிவாரணம் கிடைத்தால், உடற்பயிற்சியைத் தொடரலாம். சிலர் தொடக்கநிலையில் மருத்துவரை அணுகாமல், மருந்துக் கடைகளில் சுயமாக மாத்திரை வாங்கிச் சாப்பிடுவார்கள். வலி தீவிரமான பிறகே மருத்துவரிடம் செல்வார்கள். அப்போது முதுகுத்தண்டுவடத்தின் வடிவம் வளைந்திருக்கும். வளைந்த நிலையிலிருக்கும் தண்டுவடத்தை `ஃப்யூஷன் சர்ஜரி’ (Fusion Surgery) மூலம் நேராக்க முடியும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில உடற்பயிற்சிகளைத் தொடர வேண்டியிருக்கும்.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

தோள்பட்டை மூட்டு நிலையற்றது. அதனால் 180 டிகிரிவரை அசைய முடியும். தோள்பட்டையை அசைக்கவும், மேலே தூக்கவும் ஐந்து தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும். தசைகள் வலிமையாக இல்லையென்றால், தசைநார்கள் ரணமாகி அவற்றிலுள்ள ஜவ்வு கிழிந்துவிடும். இதனால் வயதாகும்போது தோள்பட்டையில் வலி ஏற்படும். விளையாட்டு வீரர்கள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதுண்டு.  கிழிந்த அந்தப் பகுதியில் சிறிய துளை மூலம் தையல் போட்டுச் சரிசெய்துவிடலாம். வயதானவர்களுக்குச் சேதமடைந்த பகுதியிலுள்ள தசையின் பளுவை ஆரோக்கியமான தசைகள் நிர்வகிக்கும் வகையில் உடற்பயிற்சிகள் கற்றுத் தரப்படும். இது வலிக்குத் தீர்வாக அமையவில்லையென்றால், சேதமடைந்த தசைப்பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு, ஆரோக்கியமாக இருக்கும் தசை எலும்புடன் சேர்த்துத் தையல் போடப்படும். இது, ‘ஆர்த்ரோஸ்கோப்பி ரொடேட்டர் கஃப் ரிப்பேர்’ (Arhroscopy Rotator Cuff Repair) என்று அழைக்கப்படுகிறது.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

கழுத்தில் வலி உண்டாக, ‘செர்விக்கல் ஸ்பாண்டிலோசிஸ்’ (Cervical Spondylosis) என்ற பிரச்னை காரணமாக இருக்கலாம். கணினியில் வேலை செய்பவர்கள் சாதாரணமாக இருக்கும்போது நேராக உட்கார்வார்கள். ஆனால், கணினி முன் அமர்ந்து வேலை செய்யும்போது கழுத்தை முன்னால் நீட்டி, திரையைப் பார்த்தபடி வேலை செய்வார்கள். தலையின் எடை சராசரியாக ஐந்து முதல் ஆறு கிலோவரை இருக்கும். தலையின் எடையை, கழுத்து தாங்கிக்கொள்கிறது என்பதால், தலையை நேராக வைத்தபடி வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் கழுத்தில் வலி ஏற்படாமலிருக்கும். ஆனால், தலையை நீட்டி உட்கார்ந்தபடி வேலை செய்யும்போது தலையின் எடை 12 கிலோவரை அதிகரிக்கலாம். இந்த எடை அதிகரிப்பை கழுத்து உள்ளிட்ட முதுகுத்தண்டுவடப் பகுதிதான் தாங்க வேண்டும். இதனால் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாவதை `செர்விக்கல் ஸ்பாண்டிலோசிஸ்’ என்கிறார்கள்.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது தலையை நெருக்கமாக வைப்பதாலும் ஸ்பாண்டிலோசிஸ் பாதிப்பு ஏற்படும். கழுத்தை முன்னால் நீட்டி வேலை செய்யும் நிலையை ‘டெக்ஸ்ட் நெக்’ (Text Neck) என்கின்றனர். கழுத்தை நீட்டி எழுத்துகளை `டைப்’ செய்துகொண்டே இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கிறது. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளம் வயதினரிடம் இந்தப் பிரச்னை அதிகம் காணப்படுகிறது. இந்தப் பிரச்னையால் முதலில் கழுத்து, முதுகின் மேல்பகுதி, தோள்பட்டை ஆகிய இடங்களில் வலி ஏற்படும். வலியை அலட்சியப்படுத்தினால், அது தீவிரமாகி செர்விக்கல் ஸ்பாண்டிலோசிஸாக மாறும்.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

முதுகுப் பகுதியில் அதாவது தண்டுவடம் முடியும் இடத்தில் உடலின் பின்பகுதியில் இருக்கும் எலும்பு தேய்மானம் அடையும்நிலை ‘லம்பார் ஸ்பாண்டிலோசிஸ்’ (Lumbar Spondylosis) எனப்படுகிறது. அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டே வேலை செய்பவர்கள், இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஓட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபடுவோர் முதுகை நேராக வைத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு வசதியாக இருக்கிறது என்பதற்காகக் கூன் போட்டபடி உட்கார்ந்திருப்பார்கள். கூன் போட்டு உட்கார்வதால் தலை, உடல், தோள் ஆகிய உடலின் மேற்பகுதி எடை முழுவதும் முதுகுப் பகுதியில் சேரும். இது, வலியாகத் தொடங்கி, காலப்போக்கில் ‘லம்பார் ஸ்பாண்டிலோசிஸா’க மாறும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

கால் எலும்புகள் சேரும் இடமான இடுப்புப் பகுதி எலும்பில் தேய்மானம் ஏற்படுவது நம் நாட்டில் மிகவும் குறைவு. ஐரோப்பா போன்ற நாடுகளில்தாம் இது அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கழிவறையில் குத்தவைத்து உட்கார்வது, தரையில் சம்மணமிட்டு அமர்வது, குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொள்வது போன்ற பழக்கங்கள் இருப்பதால், இடுப்பு எலும்புகள் உறுதியாக இருக்கும். அவற்றின் தேய்மானமும் குறைவாக இருக்கும். ஆனாலும், நாகரிக மாற்றத்தால் இந்தியாவிலும் பழக்க வழக்கங்கள் மாறிவருகின்றன. அதன் விளைவாக, இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலும் இடுப்பு எலும்பு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

வயதானால் எலும்பின் அடர்த்தி குறைந்துவிடும். கடினமாக இருக்கும் எலும்பு மிருதுவாகிவிடும். இதனால்தான் வயதானவர்கள் கீழே விழும்போது முதலில் இடுப்பு எலும்பு உடைகிறது. சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கும்கூட இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும். உடைந்த எலும்பை ஸ்க்ரூ போட்டு மீண்டும் பொருத்த முடியும். எலும்பு சேதமடைந்தவர்களுக்கு மீண்டும் பொருத்த முடியாவிட்டால், இடுப்பு மூட்டிலிருக்கும் பந்து போன்ற மூட்டை நீக்கிவிடுவார்கள். அதன் பிறகு அந்த இடத்தில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் செயற்கைப்பந்து மூட்டு பொருத்தப்படும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

இன்றைக்கு 30 வயதைத் தாண்டிய ஆண், பெண் இருவரையும் பாதிக்கும் ஒரு பிரச்னை எலும்புப் புரை (Osteoporosis). உடல்வலிதான் இதன் முக்கிய அறிகுறி. நாம் சாப்பிடும் உணவிலுள்ள கால்சியம், எலும்புகளில் படிவதுடன், ரத்தத்திலும் கலக்கும். உணவில் கால்சியம் சத்து குறைந்தால், எலும்பில் சென்று படியும் கால்சியத்தின் அளவு குறையும். ஆனால், எலும்பிலிருந்து ரத்தத்தில் கலக்கும் கால்சியம் மட்டும் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும். எலும்பு ஸ்பாஞ்ச்போல ஆகிவிடும். எலும்பில் கால்சியத்தின் அளவு குறையும்நிலையையே, `எலும்புப் புரை’ என்பார்கள். இளம் வயதில் ஆரோக்கியமான உணவு, உடல் இயக்கம், உடற்பயிற்சி எல்லாமே நன்றாக இருக்கும். இவை குறையும்போது எலும்புக்குச் செல்லும் கால்சியத்தின் அளவு குறையும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

எலும்பில் கால்சியம் படிய `வைட்டமின் டி’ மிக அவசியம். `வைட்டமின் டி’ கிடைக்க ஒரே ஆதாரம் சூரிய ஒளி. ஆனால், அலுவலக அறைகளில் வேலை பார்ப்பவர்கள், இரவுப் பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் குளிர்ப் பிரதேசங்களில் வசிப்போரின் மீது சூரிய ஒளி படுவது குறைந்துவிடும். இதனால், `வைட்டமின் டி’ குறைந்து உணவிலுள்ள கால்சியம் எலும்பில் படிவது தடைப்படும். இத்தகைய சூழலில் சீக்கிரமாக ஆஸ்டியோபோரோசிஸ் வந்துவிடும். எலும்பில் கால்சியம் படிய உடற்பயிற்சி ஒரு தூண்டுதலாக இருக்கும். எனவே நடைப்பயிற்சி, நீச்சல், யோகா போன்றவற்றைச் செய்ய வேண்டும். இவற்றைச் செய்தாலே ஆஸ்டியோபோரோசிஸ் வருவதைத் தடுத்துவிடலாம். வைட்டமின் டியைப் பெற காலையில்     6 முதல் 7 மணிக்குக் கிடைக்கும் சூரிய ஒளி உடலுக்கு ஏற்றது. வாரத்துக்கு மூன்று நாள்களாவது சுமார் 20 நிமிடங்கள் சூரிய ஒளி உடலின் மீது படுமாறு இருக்க வேண்டும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

பெண்கள் சராசரியாக 50 வயதில் மெனோபாஸ் நிலையை அடைவார்கள். ஆனால் 40, 45 வயதிலேயே மெனோபாஸ் நிலையை அடைந்தால், `ஈஸ்ட்ரோஜென்’ ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடும். இதனால் உடலில் கால்சியம் சேகரிக்க முடியாத நிலை ஏற்படும். மெனோபாஸ் நிலையை அடைந்தவர்களுக்கும், கர்ப்பப்பையை அகற்றியவர்களுக்கும் கால்சியம் சத்துக் குறைபாட்டைப் போக்க, மருத்துவர்கள் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். கால்சியம் மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொண்டாலும்கூட சிலருக்குக் குறைபாடுகள் நீங்காது. நாளடைவில் இது எலும்புப்புரை நோயாக மாற வாய்ப்பிருக்கிறது. 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

`எலும்புப்புரை ஏற்பட கால்சியம் குறைபாடு மட்டுமே காரணம்’ என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. கால்சியம் மட்டுமல்லாமல் மக்னீசியம், துத்தநாகம் போன்ற பிற சத்துகளும் குறைந்திருக்கும். இவற்றைச் சரிசெய்ய காய்கறிகள், பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். எலும்பிலுள்ள மஜ்ஜை, புரதத்தால் உருவானது. அதுதான் எலும்பின் கட்டமைப்புக்கு உதவுகிறது. அதன் மேல்தான் கால்சியம் படியும். இதற்கு இறைச்சி, காராமணி, பச்சைப் பயறு, கொண்டைக்கடலை போன்ற புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

காபி, டீ மற்றும் சில வகைக் குளிர்பானங்களில் கஃபைன் அதிகமாக இருக்கும். கஃபைன் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் எலும்பிலுள்ள கால்சியம் அரிக்கப்பட்டுவிடும். ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டு முடித்ததும் குளிர்பானம் அருந்தினால், உணவிலுள்ள கால்சியத்தை எலும்பில் படியவிடாமல் குளிர்பானத்திலுள்ள பாஸ்பரஸ் கிரகித்துக்கொள்ளும். இத்தகைய சூழலில் எலும்புப்புரை ஏற்பட்டால், அதை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. உணவு, உடற்பயிற்சியின் மூலம் அதை நிர்வகிக்க முடியும். எலும்பு அதன் வலிமையை மேலும் இழக்காமல் தடுக்க மாத்திரைகள் கொடுக்கப்படும். அது எலும்புப்புரையால் ஏற்படும் எலும்பு முறிவைத் தடுக்கும்.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

சிறு வயதிலேயே மூட்டுவலி வந்தால் அதை அலட்சியம் செய்யக் கூடாது. ஏனென்றால், அது எலும்புப் புற்றுநோயாகவும் இருக்கலாம். மருத்துவர் பரிந்துரையுடன் உடனடியாக எக்ஸ்-ரே பரிசோதனை செய்ய வேண்டும். பெரும்பாலான புற்றுநோய்கள் மூட்டுப் பகுதியைச் சுற்றியே வரும். எலும்புப் புற்றுநோயில் ‘பினைன் போன் ட்யூமர்’ (Benign Bone Tumor) ‘மெலிக்னன்ட் போன் ட்யூமர்’ (Malignant Bone Tumor) என இரண்டு வகைகள் உள்ளன. `பினைன் போன் ட்யூமர்’ என்பது புற்றுநோய் இல்லாத கட்டி. அது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவாது. ஒரே இடத்தில் மெதுவாக வளர்ந்துகொண்டேயிருக்கும். வலியை மட்டுமே கொடுக்கும். உயிருக்கு ஆபத்தில்லை. அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றிவிடலாம்.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

‘மெலிக்னன்ட் போன் ட்யூமர்’ என்பது பரவும் வகை புற்றுநோய். பாதிப்பு ஏற்பட்ட ஓராண்டிலேயே உடல் முழுவதும் பரவக்கூடியது. இதைத் தொடக்கநிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால், நவீன தொழில்நுட்ப உதவியுடன் சிகிச்சையளித்து, பாதிப்பைச் சரிசெய்துவிடலாம். கைகால்களைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஆனால், புற்றுநோய்க் கட்டிகளை அகற்றினாலும் மீண்டும் வர வாய்ப்பிருப்பதால், சிகிச்சைக்குப் பிறகும் கவனமாக இருக்க வேண்டும்.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

உடல் பருமன், மூட்டுவலிக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. உடல் எடை குறியீட்டு எண் `பிஎம்ஐ’ 25-க்குள் இருக்க வேண்டும். எடை அதிகமாக இருந்தால், மூட்டுகளில் அதிக பளு ஏற்பட்டு வலி எடுக்கத் தொடங்கும். இதனால் தசைகள் வலுவிழந்து, மூட்டுவலிக்கான சிக்கல்களை மேலும் அதிகப்படுத்தும். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கால் மூட்டுகள், முதுகு அதிகம் பாதிக்கப்படும். உடல் பருமனுக்கு தைராய்டு போன்ற நாளமில்லாச் சுரப்பிகள் பிரச்னையாக இருந்தால், அதை முதலில் சரிசெய்ய வேண்டும். உணவுப்பழக்கத்தால் மட்டுமே உடல் பருமன் ஏற்பட்டிருக்கிறது என்றால், ஆரோக்கிய உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவை பரிந்துரைக்கப்படும். இவற்றை நோயாளியால் பின்பற்ற முடியவில்லையென்றால், எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை (Bariatric Surgery) மட்டுமே தீர்வு. 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், காசநோய்க் கிருமிகள் எலும்பை பாதிக்கலாம். குறிப்பாக, தண்டுவடத்திலுள்ள எலும்புகள் அதிகம் பாதிக்கப்படும். காசநோய்க் கிருமிகள் தொடர்ந்து எலும்பை அரிப்பதால், ஒரு கட்டத்தில் ஓர் எலும்பிலிருந்து மற்றோர் எலும்புக்கு நோய் பரவுவது, சீழ்ப் பிடிப்பது, முதுகுத்தண்டுவடத்தில் அழுத்தம் போன்றவை ஏற்படும். இதனால் கைகால்களின் செயல்பாடுகள் குறையும். இந்தச் சூழலில் மாலை நேரத்தில் காய்ச்சல், அதிக வியர்வை, பசியின்மை, எடை குறைவது போன்ற அறிகுறிகள் இருந்தால் காசநோய்ப் பரிசோதனை செய்ய வேண்டும். எலும்பில் காசநோய் பாதித்தால், 9 முதல் 12 மாதங்கள்வரை சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். காசநோயால் தண்டுவட எலும்பு அரிக்கப்பட்டு, நிலைகுலைந்து போனால் அறுவை சிகிச்சை மூலம் சீழை அகற்றி, தண்டுவடத்தை மீண்டும் கட்டமைக்கலாம். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

மூட்டுவலி, இடுப்புவலிக்குப் போடப்படும் வலி நிவாரணக் களிம்புகள், ஜெல் ஆகியவற்றில் மென்தால் போன்ற சில பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவை சாதாரணமாக எரிச்சல் உணர்வை அளிக்கக்கூடியவை. மூட்டின் உள்ளே வலி இருக்கும்போது, அதன் மேற் பகுதியிலிருக்கும் சருமத்தில் களிம்பைத் தடவி எரிச்சல் உணர்வை ஏற்படுத்தினால், மூளை அதன் உணர்வை வெளியேயிருக்கும் வலிக்கு மாற்றிவிடும். இதனால் உள்ளேயிருக்கும் வலியை உணர முடியாது. எனவே, வலி எடுக்கும்போது என்றாவது ஒருநாள் மட்டும் வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த மருந்துகளை சருமத்தில் தடவும்போது சிறிது சிறிதாக உடலுக்குள் சென்று, ரத்தத்தில் கலக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், கர்ப்ப காலத்தில் வலி நிவாரணிகளைப் பெண்கள் பயன்படுத்தக் கூடாது. 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

கர்ப்ப காலத்தில் முதுகுப் பகுதியை நேராக வைத்துக்கொள்ள இடுப்புத் தசை மற்றும் வயிற்றுத் தசைகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் வயிற்றில் குழந்தையின் எடை, பனிக்குட நீர் ஆகியவற்றின் எடையும் சேர்ந்துகொள்ளும். இதனால் கர்ப்ப காலத்தின் 8, 9-வது மாதங்களில் பெண்கள் 8 முதல் 10 கிலோ எடைவரை அதிகரிப்பார்கள். அதனால், முதுகுத்தண்டுவடத்தில் பளு அதிகமாகி முதுகுவலி வரலாம். கர்ப்ப காலத்தில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள், யோகா போன்றவற்றின் மூலம் முதுகுவலியைத் தடுக்கலாம். பிரசவத்துக்குப் பிறகு போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளாமலேயே குழந்தைக்குத் தொடர்ந்து பாலூட்டினால் உடல் பலவீனமடையும். அதனால் உடல்வலி, மூட்டுவலி ஏற்படலாம். பிரசவத்துக்குப் பிறகு வரும் தைராய்டு, சர்க்கரைநோய், உடல் பருமன் ஆகியவற்றாலும்கூட மூட்டுவலி வரலாம்.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

புகைப்பழக்கம் உள்ளவர்களின் உடலுக்குள் நிக்கோட்டின் செல்வதால் ரத்தக்குழாய்களைக் குறுக்கிவிடும். இதனால் மூட்டுகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மூட்டுகளின் நடுவேயிருக்கும் ஜவ்வின் நெகிழ்வுத் தன்மை குறைந்துவிடும். குறிப்பாக முதுகுத்தண்டுவடத்திலுள்ள வட்டுகள் பாதிக்கப்படும். புகைப்பழக்கமும் முதுகுவலியும் ஒன்றோடொன்று நேரடியாகத் தொடர்புடையவை என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும், புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரலின் செயல்பாடு குறைவாக இருக்கும். சிறிது தூரம் நடந்தாலே அவர்களுக்கு மூச்சிரைக்கும் என்பதால், அவர்கள் நடப்பதைக் குறைத்துக்கொள்வார்கள். இதனால் மூட்டுவலி, தசை பலவீனமடைதல் ஏற்படும். 

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!
மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

வழவழப்பான தரையில் நடக்கும்போது தசைகளின் பணி மிகவும் குறைந்து தசைகள் பலவீனமாகும். சொரசொரப்பான தரையில் நடக்கும்போது பாதங்களில் இருக்கும் அழுத்தப் புள்ளிகள் (Pressure Points) தூண்டப்பட்டு, காலுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இதனால் தசைகளும் மூட்டுகளும் ஆரோக்கியமாக இருப்பதுடன் தேய்மானமும் ஏற்படாது. டைல்ஸ், மார்பிள் தரைகளில் நடந்தால், கால்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போகும். எனவே டைல்ஸ், மார்பிள் போட்ட வீடுகளில் செருப்பு அணிந்து நடப்பது நல்லது. அப்போதுதான் கால்களுக்கு உராய்வு கிடைக்கும். சிமென்ட் தரை போடப்பட்ட வீீடாக இருந்தால் வெறும் கால்களிலேயே நடக்கலாம்.

- ஜெனி ஃப்ரீடா

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு