Published:Updated:

``இறுதி காரியமாவது செய்யுங்கள் !''- எம்.ஜி.ஆர் டிரைவர் மகன்களிடத்தில் கெஞ்சிய இன்ஸ்பெக்டர்

எம்.குமரேசன்
``இறுதி காரியமாவது செய்யுங்கள் !''- எம்.ஜி.ஆர் டிரைவர் மகன்களிடத்தில் கெஞ்சிய இன்ஸ்பெக்டர்
``இறுதி காரியமாவது செய்யுங்கள் !''- எம்.ஜி.ஆர் டிரைவர் மகன்களிடத்தில் கெஞ்சிய இன்ஸ்பெக்டர்

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (80) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இவர் கார் ஓட்டுநராக பணியாற்றியுள்ளார். பாஸ்கரனுக்கு 4 மகன்களும் ஒரு மகளும் உண்டு. மகன்களிடம் மாறி மாறி பாஸ்கரன் வசித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் தந்தையென்றும் பார்க்காமல் வயது முதிர்ந்த பாஸ்கரனை திருப்பத்தூர் கொண்டு சென்ற மகன்கள் வீரபத்திர முதலியார் பூங்காவில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர். சில நாள்களாகக் கொளுத்தும் வெயிலில் பட்டினியாக கிடந்து துடித்துள்ளார் பாஸ்கரன். அவரிடத்தில் விசாரித்தபோது 4 மகன்கள் இருப்பதாகவும் தன்னை யாரும் பராமரிப்பதில்லை என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தான் எம்.ஜி.ஆரிடம் கார் டிரைவராகப் பணியாற்றியதாகவும் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மகன்களுக்குத் தகவல் அளித்தும் யாரும் வந்து அவரைக் கூட்டிச் செல்ல வரவில்லை. 

இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்த பாஸ்கரனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். தொடர்ந்து, சென்னையில் வசித்த அவரின் மகன்களுக்குத் திருப்பத்தூர் டவுன் போலீஸார் தகவல் தெரிவித்தனர். பாஸ்கரனின் மகள் பெங்களூரில் வசித்து வருகிறார். அவருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இரு நாள்களில் வந்து உங்கள் தந்தையின் சடலத்தை பெற்றுக்கொள்ளுமாறு போலீஸ் தரப்பில் அவர்களிடத்தில் சொல்லப்பட்டது.  

ஆனால், `பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' என்பது போல, காவல்துறையிடத்தில், ` எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். நாங்கள் வர விரும்பவில்லை. திருமணம் செய்துவிட்ட பிறகு நாங்கள் தனியாகவே வசிக்கிறோம். அவரும் தனியாகத்தான் இருந்து வந்தார்' என்று அலட்சியமாகப் பதில் அளித்தனர். `தயவு செய்து தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய இறுதி காரியங்களையாவது செய்துவிட்டுப் போங்கள் ' என திருப்பத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் சீரஞ்சிவி அவர்களிடத்தில் கெஞ்சியும் பலன் இல்லை. எதற்கும் அசைந்து கொடுக்காத அவர்களோ, `நீங்களே புதைத்து விடுங்கள்' என்று அலட்சியமாகப் பதில் அளித்துள்ளனர். இதனால், மனம் கொதித்த இன்ஸ்பெக்டர் சீரஞ்சிவி, `நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்' என்று அவர்களை எச்சரித்தார். எனினும், தந்தையின் சடலத்தை வாங்க மகன்கள் முன்வரவில்லை. 

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தன் சொந்த செலவில் பாஸ்கரன் சடலத்துக்கு இறுதி காரியங்களை செய்து நேற்று  அடக்கம் செய்தார். இன்ஸ்பெக்டருக்கு சில துப்புரவுத் தொழிலாளர்களும் உதவி செய்தனர். கல் நெஞ்சக்கார மகன்களுக்கு போலீஸார் புத்தி புகட்ட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.