கார்/பைக்கில் லாங் டூர் போறீங்களா? இதையெல்லாம் கவனிங்க! #TourTips | Ready for long trip in your car/bike..? Caution for you!

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (23/08/2017)

கடைசி தொடர்பு:16:43 (23/08/2017)

கார்/பைக்கில் லாங் டூர் போறீங்களா? இதையெல்லாம் கவனிங்க! #TourTips

டூர் கிளம்புவது என்றாலே, என்ஜாய்மென்ட்தான். பஸ்ஸில், ரயிலில் பயணிப்பதைவிட கார்/பைக் டூர்கள் அலாதியானவை. ஆம்! சொந்தமாக டிரைவிங் செய்து டூர் போவது அலாதியானதுதான். ஆனால், அது ஆபத்தானதாக மாறிவிடாமல் இருக்க நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவை என்னென்ன... பார்க்கலாமா?

* காரில் உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ணினோமா... கியரைப் போட்டோமா... கிளம்பினோமா என்றில்லாமல், எப்போதும் கிளம்புவதற்கு முன் காரைச் சுற்றிச் சுற்றி சோதனைபோடுங்கள். வீல்களில் காற்று சரியாக இருக்கிறதா? கண்ணாடி ஒழுங்காக இருக்கிறதா? முக்கியமாக வைப்பர் தண்ணீர், பிளேட்டுகள் வேலைசெய்கின்றனவா? கார் பானெட்டில் எலிகள் ஏதும் வொயரைக் கடித்து சேட்டை செய்திருக்கின்றனவா? பிரேக் ஆயில், இன்ஜின் ஆயில், கூலன்ட் அளவு... என எல்லாவற்றையும் சோதனையிடுங்கள். இதெல்லாம் இல்லாமல் காரைக் கிளப்பிவிட்டு, நடுவழியில் திண்டாடாதீர்கள்.

* காரில் உட்கார்ந்ததும் சீட் பெல்ட்டைப் போட்டுவிட்டு, ஜி.பி.எஸ் செட் செய்துவிட்டு, ரியர்வியூ மிரரைச் சரிசெய்துவிட்டுத்தான் காரைக் கிளப்ப வேண்டும். சிலர் காரில் போய்க்கொண்டிருக்கும்போதே சீட் பெல்ட் போடுவது, கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்வது என, குரளி வித்தை காட்டுவார்கள். இது மிகவும் ஆபத்து. ஒரு விநாடி அலட்சியம்தான் பெரிய விபத்துக்குக் காரணமாக அமைந்துவிடும்.

* கார் டயர்களில் எப்போதும் ஒரே அளவிலான காற்றை மெயின்ட்டெயின் செய்யுங்கள். நைட்ரஜன் காற்று உள்ள டயர்களில் சாதா காற்று அடிக்கக் கூடாது. சந்தேகம் இருந்தால், காற்றை முழுவதுமாக ரிலீஸ் செய்துவிட்டு நைட்ரஜன் அடித்துவிட்டுக் கிளம்பலாம். காற்றை ரிலீஸ் செய்யும்போது உள்ளே ஆள் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், டயர்களில் விரிசல் விழ வாய்ப்புண்டு.

tour

* கார் நிற்கும்போதும் கதவைத் திறக்கும்போதும் ரியர்வியூ மிரரில் பார்த்துவிட்டுத்தான் கதவைத் திறக்க வேண்டும். பின்னால் இருப்பவர்களின் பவர் விண்டோவை லாக் செய்துவிடுங்கள். எப்போதும் நான்கு கதவுகளில் ‘கவனமாகத் திறக்கவும்’ என்று ஸ்டிக்கரை ஒட்டிவிட்டால் நல்லது. எப்போதும் நம் மூட் ஒரே மாதிரி இருக்காது. சில நேரங்களில் ஜாலி மூடில் நம்மையும் அறியாமல், சட்டெனக் கதவைத் திறந்துவிடுவோம். விளைவுகள் ரொம்ப விபரீதமாகிவிடும்.

* ஸ்டெப்னி டயரிலும் காற்றடிக்க மறக்காதீர்கள். பஞ்சரானால், ஸ்டெப்னி மாற்றத் தேவையான ஜாக்கி போன்ற உபகரணங்கள் இருக்கின்றனவா என்பதை செக் செய்துகொள்ளுங்கள். நீங்களே ஸ்டெப்னி மாற்றப் பழகிக்கொள்ளுங்கள். அது ரொம்ப ஈஸி.

* காரில் நீண்ட தூரம் பயணித்துவிட்டு, இன்ஜினை உடனே ஆஃப் செய்யாதீர்கள். சில நிமிடங்கள் ஐடிலிங்கில்விட்டு, பிறகு ஆஃப் செய்வதே இன்ஜினுக்கு நல்லது. கிளம்பும்போதும் அப்படித்தான். சாவியைப் போட்டதும் வண்டியைக் கிளப்பாதீர்கள். இது பைக்குக்கும் பொருந்தும்.

* பைக்கில் லாங் டூர் செல்பவர்கள், ஸ்பார்க் ப்ளெக், கிளட்ச் கேபிள், ஆக்ஸிலரேட்டர் கேபிள், டியூப்லெஸ் என்றால் சொல்யூஷன் டியூப், முதலுதவி கிட், ஸ்பேனர், ஸ்க்ரூ டிரைவர், கட்டிங் பிளேடு போன்ற கருவிகள் வைத்திருக்க வேண்டும்.

* கார் ஓட்டும்போது, அதிக சத்தத்தில் இரைச்சலை ஏற்படுத்தும்படி பாட்டுக் கேட்டுக்கொண்டே போகாதீர்கள். இது, பின்னால் வரும் வாகனங்களின் சமிக்ஞையைப் பாதிக்கும். மெல்லிய இசை; மென்மையான பயணம்.

* கார் ஸ்பீடோமீட்டருக்கு வலதுபுறம் இருப்பது இன்ஜின் தெர்மோமீட்டர். இதில் முள் சிவப்பு நிறத்தைத் தொட்டால், யோசிக்கவே வேண்டாம்... சட்டென காரை நிறுத்தி ஓய்வெடுங்கள். கூலன்ட் ஓவர் ஹீட் ஆகிவிட்டது என அர்த்தம். இன்ஜின் சீஸ் ஆவது இப்படியும்தான்.

* குளிர்ப்பிரதேசங்களுக்கு பைக்கில் செல்பவர்கள் - ரைடிங் ஜாக்கெட், ஸ்வெட்டர், ஷூ, சாக்லேட், குளிர்பானங்கள் போன்றவற்றை, எப்போதும் கைவசம் வைத்திருங்கள். 

tour

* மலைச் சாலைகளில் பயணிக்கும்போது, நிறையபேர் முக்கியமான ஒரு தவறைச் செய்வார்கள். சரிவான சாலைகளில் இறங்கும்போது பெட்ரோல் சேமிக்கிறேன் பேர்வழியில் நியூட்ரலில் ‘சர்’ என இறங்குவார்கள். இது மிகவும் ஆபத்தான விஷயம். இதில் வாகனம் உங்களைவிட்டு அவுட் ஆஃப் கன்ட்ரோலில் போய்விடும் என்பதுதான் உண்மை. ஏனென்றால், நியூட்ரலில் பிரேக்குகள் 60 சதவிகிதம்தான் வேலை செய்யும் என்பதை மறக்காதீர்கள். 

* கீலெஸ் என்ட்ரி, பட்டன் ஸ்டார்ட் உள்ள கார்களின் சாவி எப்போதுமே உங்கள் கன்ட்ரோலில் இருக்கட்டும். டிக்கியில் கார் சாவியைத் தெரியாமல் வைத்துவிட்டு, கதவுகள் லாக் ஆகி, கதவை உடைத்த சம்பவங்கள் நிறைய உண்டு. 

* காட்டுப் பாதையில் பயணிப்பது த்ரில்லிங்கான விஷயம். விலங்குகள் நடமாடும் பகுதியில் அதிகபட்ச டெசிபலில் ஹார்ன் அடித்து விலங்குகளை மிரட்டாதீர்கள். மிரண்டுபோன விலங்குகள், நீங்கள் சென்ற பிறகு வேறு வாகனங்களைப் பதம்பார்க்கும். 

tour

* ஹெல்மெட், உங்கள் தலைக்குச் சரியான அளவில் இருப்பது அவசியம். ஏனென்றால், அதிக வேகங்களில் நெடுஞ்சாலையில் செல்லும்போது, ‘தொள தொள’வென இருந்தால் காற்றுக்கு ஆடி உங்கள் பார்வையை மறைக்கும். ரொம்பவும் ஃபிட்டாக இருந்தால் மூச்சு விடச் சிரமமாக இருக்கும். இரண்டுமே ஆபத்துதான்.

* மடியில் கனம் இருந்தால், வழியில் பயம் இருக்கும்தான். அதற்காக சுத்தமாக பணமே இல்லாமல் கிளம்பாதீர்கள். ஏ.டி.எம் கார்டு இருப்பது பாதுகாப்பு. ஆனால், கையில் கொஞ்சம்போல பணம் வைத்திருப்பது நல்லது.

* நெடுஞ்சாலையில் ‘ஸ்பீட் பிளைண்ட்னெஸ்’ என்றொரு விஷயம் உள்ளது. அதாவது, நீங்கள் 120 கி.மீ வேகத்தில் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் மூளைக்கு இந்த வேகம் பழகிவிடும். நீங்கள் குறைவான வேகத்தில்தான் போய்க்கொண்டிருப்பதாக நினைப்பீர்கள். இதுதான் `ஸ்பீட் பிளைண்ட்னெஸ்'. திடீரென பிரேக் பிடிக்கும்போதோ, ஓவர்டேக்கிங்கின்போதோ விபத்துகள் ஏற்படுவது இதனால்தான். எனவே, அடிக்கடி ஸ்பீடோமீட்டரை செக் செய்துகொண்டே இருங்கள். 

* ஸ்டெப்னி மாட்டுவது, ஸ்பார்க் ப்ளெக் மாட்டுவது, பஞ்சர் போடுவது, காரில் பிரேக் ஆயில் மாற்றுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பயணம்; உங்கள் பாதுகாப்பு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்