வெளியிடப்பட்ட நேரம்: 21:41 (22/08/2017)

கடைசி தொடர்பு:09:13 (23/08/2017)

அமீர் மஹால் - சென்னையின் மையத்தில் வீற்றிருக்கும் ராஜ தர்பார்! #Chennai378

முப்பது வருடங்களுக்கு மேலாக சென்னையின் சந்துபொந்துகளை எல்லாம் சுற்றித் திரிந்த எனக்கு, சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் அமீர் மஹாலைத் தெரியாமல்போனது வெட்கத்துக்குரியது. வரலாற்றின் மீது பெரும் தேடலும் அதுகுறித்து பயணங்களுமாக இருக்கும் பலருக்கு, அரச குடும்ப மாளிகைகள் என்றவுடன் மைசூர் பேலஸ், தாஜ்மஹால், பத்மநாபா பேலஸ், திருமலை நாயக்கர் மண்டபம்தான் நினைவுக்கு வரும். சென்னையில் இப்படி ஓர் அரச மாளிகை இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? இன்னும் என்னைப்போல் எத்தனை பேர் அமீர் மஹால் பற்றி அறியாமல் இருக்கிறார்களோ என்ற எண்ணமே இதைப் பதிவிடத் தூண்டியது

அமீர் மஹால்

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கலாமா?

ஆற்காடு நவாப்கள், கலிபா உமர் இப்னு அல் கத்தாப் வழிவந்தவர்கள். 1692-ம் ஆண்டு முகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப்பால் கன்னட தென்னிந்தியப் பகுதிகளில் வரி வசூலிக்க நியமிக்கப்பட்டனர். 1749-ம் ஆண்டு முகம்மது அலி வாலாஜா என்பவர் ஆட்சிக்கு வந்தார். நவாப் அரசர்களில் இவருடைய காலமே `நவாப்களின் பொற்காலம்' என அழைக்கப்பட்டது. (சென்னையில் உள்ள வாலாஜா சாலைக்கான பெயருக்குப் பின் இவர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.) 13-வது  நவாப்பாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் காண், (1825 – 1855) தனக்குப் பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது ஆட்சி ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது.

சென்னையின் 1855-ம் ஆண்டில் சேப்பாக்கம் பகுதியிலிருந்த ஆற்காடு நவாப் மாளிகை மற்றும் அதைச் சுற்றி இருந்த பகுதிகளும், நவாப்புகளின் ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால் அப்போதைய டல்ஹௌசி சட்டத்தின்படி அரசுடைமை ஆக்கப்பட்டது. சேப்பாக்கம் ஸ்டேடியம், தற்போதைய பிரசிடென்சி கல்லூரியும் இதில் அடக்கம். அன்றைய பிரெஞ்சு அரசு, நவாபுகளிடமிருந்து சேப்பாக்கம் பகுதியைக் கைப்பற்றிய பிறகு அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுதான் ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால் இல்லம்.

1860-ம் ஆண்டில் நவாப் குடும்பத்தின் வாரிசுகள் அரசின் அறிவுரைப்படி தங்கள் குடும்பத்தோடு அமீர் மஹாலுக்குள் நுழைந்தனர்.  சுதந்திர இந்தியாவும் இவர்களது நவாப் பட்டத்தை அங்கீகரித்து, அரச குடும்பத்தினருக்கான ஓய்வுதியத்தை அளித்துவருகிறது. இவர்களில் நடப்பு கடைசி ஆற்காடு இளவரசரான முகம்மது அப்துல் அலி  ஆஸிம் ஜா, 1994-ம் ஆண்டு ஜுலை மாதம் பட்டத்துக்கு வந்தார்.

அமீர் மஹால்

அமீர் மஹாலின் அழகியத் தோற்றம்:

ஏறத்தாழ 150 ஆண்டுகளைத் தாண்டியும் கொஞ்சமும் மூப்பெய்தாமல் நிமிர்ந்த நிலையில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது அமீர் மஹால். நுழைவாயிலின் இருபுறங்களிலும் இரு கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களின் மேற்பகுதியில் `நகர கானா' எனப்படும் முரசு மண்டபம் உள்ளது. ஆனால், அங்கு முரசு ஒலித்து யாரும் கேட்டதில்லை.

மிகப்பெரிய கோட்டைச் சுவரைக் கடந்து சென்றால் தகுந்த கடவுச்சீட்டு (பரிந்துரைக் கடிதம்) இருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பொதுமக்களைச் சிறப்பு அனுமதியின் கீழ் அழைத்துச் செல்லும் கோம்பை அன்வர் என்பவரால் இந்த வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது. நீண்ட ஒரு சாலையின் வலது புறத்தில் அரசு வழங்கிய பீரங்கி வண்டிகள் மரப்பெட்டிகள் தாங்கி வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. ஓங்கி உயர்ந்த மாளிகை ஒன்று, உள்ளே நடுநாயகமாக வீற்றிருக்கிறது. முகப்பினைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் சிவப்புக் கம்பளம் நம்மை அரச மரியாதையோடு வரவேற்கிறது

இருபக்கங்களும் விருந்தினர்கள் அமர்வதற்கு ஏற்ப நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மஹாலின் ஒவ்வொரு பகுதியும் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது. அழகிய பீங்கான் பாத்திரங்கள், பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட திரைச்சீலைகள், வழிநெடுக மினுங்கும் அரேபிய தொங்கு விளக்குகள், சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள நவாப்களின் ஓவியங்கள், பட்டுநூலால் எழுதப்பட்டுள்ள இஸ்லாமிய இறை வசனங்கள்... இப்படி ஒரு குட்டி முகலாயப் பேரரசையே அங்கு காண முடிகிறது.

அமீர் மஹால்

மாளிகையின் நடுப்பகுதியில் இருக்கும் படிக்கட்டு வழியாக முதல் தளத்துக்குச் செல்லலாம். அங்கு மிகப்பெரிய அரண்மனை போன்ற வரவேற்பறை, நடுநாயகத்தில் நவாப்கள் அமரும் உயர்ந்த திண்ணை நாற்காலிகள், சிவப்பு நிறத்து பட்டுக்கம்பளத்தில் மிளிரும் தரைப் பகுதி என ராஜ தர்பார் நம் கண்களைக் கொள்ளையடித்துச் செல்கிறது.

அதற்குப் பின் பகுதியில் மிகப்பெரிய பொது விருந்து அறை, நடந்தேறிய ராஜ விருந்துகளுக்குச் சாட்சியாக வீற்றிருக்கிறது. இன்னும் பல ரகசிய அறைகளும் அமீர் மஹாலில் இருக்கின்றன. எனினும், அவை, விருந்தினர் பார்வைக்கு மறுக்கப்படுகின்றன. இப்போதும் அங்கு நவாப்களின் குடும்பம் வசித்துவருவதால், பொதுமக்கள் பார்வைக்கு விடப்படாமல் தடை செய்யப்பட்ட இடமாக அமீர் மஹால் செயல்படுகிறது.

உயரத்தில் பொருத்தப்பட்ட குறுவாள்களும், கத்திகளும், துப்பாக்கிகளும், தோட்டாக்களுடன் இணைக்கப்பட்ட துப்பாக்கிகளும் நவாப்களின் வாழ்வியலில் உள்ள போர்க்குணங்களைப் பறைசாற்றுகின்றன. அழகிய பல்லக்குகள், தூண்கள், பளிங்குத் தரைகள், மஹாலைச் சுற்றிய நடைபகுதிகள் என இந்தோ-சாராசெனிக் பாணியில் கட்டப்பட்டது. அமீர் மஹாலின் உட்பகுதியில் சிறிய கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைந்துள்ளது மஹாலின் மற்றொரு சிறப்பு.

பொதுமக்களின் பார்வைக்கு வரவேண்டும்:

சென்னையில் உள்ள மக்கள் தங்களுடைய பொழுதுபோக்கு இடங்களாக கடற்கரை, சினிமா, உயர்ரக ஷாப்பிங் மால்களையே சுற்றி வருகின்றனர். காந்தி மண்டபம், வள்ளுவர்கோட்டம் போன்று ஆற்காடு நவாப் இல்லமான அமீர் மஹால், மக்களின் பார்வைக்குத் திறக்கப்பட வேண்டும். அதன்பின் இருக்கும் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும், இஸ்லாமியர்களின் உணவு, உடை, வாழ்வியல், பழக்கவழக்கங்களையும் மக்கள் அறியும்படி அரசும், நவாப் வாரிசுதாரர்களும் ஒருங்கிணைப்பாகத் திட்டப்படுத்தி காட்சிப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்