வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (23/08/2017)

கடைசி தொடர்பு:12:05 (24/08/2017)

கீர்த்தி சுரேஷ் ரியாக்‌ஷன் பின்னால் இம்புட்டு விஷயமா? - இது மெடிக்கல் மீம்ஸ்!

'மீம் கிரியேட்டர்ஸ்னா யாருப்பா?' என்ற கேள்விக்கு 'இன்ஜினீயர்ஸ்' என்ற ஒரு வார்த்தையிலேயே பதில் சொல்லிவிடலாம். அந்தளவுக்கு மீம் கிரியேட்டர்ஸ் ஏரியாவில் இன்ஜினீயர்களின் ராஜ்ஜியம்தான். இந்த கோதாவில் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸூம் சேர்ந்தால் எப்படி இருக்கும்? இதற்கு விடை சொல்கிறது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜின் Mmc memes :-p ஃபேஸ்புக் பக்கம். மற்ற காலேஜ் பக்கங்களில் இருக்கும் காலேஜ் கிண்டல், ஹாஸ்டல் லொள்ளு, வம்புதும்பு ஆகியவற்றோடு கடினமான மருத்துவ பாடங்களையும் மீம்களாக மாற்றி அசத்தி வருகின்றனர் இந்த மாணவர்கள். "யாருப்பா இந்த அட்மின்... எனக்கே பாக்கணும் போல இருக்கே!" எனத் தொடர்புகொண்டால், உடனே சாட்டிங்கிற்கு ஆஜராகினர் அட்மின்ஸ்.

முதலில் பேசிய நன்மாறன், "மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல ஃபைனல் இயர் ஸ்டூடண்ட் நான். முதல்ல எங்க காலேஜ் சீனியர் தயாநிதிதான் இந்த யோசனை கொடுத்தார். அவர்தான் நம்ம காலேஜ்க்கு ஒரு மீம் பேஜ் இருந்தா நல்லா இருக்குமேன்னு தொடங்கி வச்சார். அவர் போனதுக்கு அப்புறம் பேஜ் எங்க கன்ட்ரோல்க்கு வந்தது. எல்லா காலேஜ் மீம் பேஜ்லயும் இருக்குற மாதிரி, நாங்களும் காலேஜ் கலாட்டாக்கள், மருத்துவ மாணவர்களோட கஷ்ட நஷ்டங்கள்னு தொடர்ந்து மீம் போட்டுட்டு இருந்தோம். அப்போதான் திடீர்னு ஒரு யோசனை வந்தது. மீம் டெம்ப்ளேட்ஸ்குள்ள, மெடிக்கல் சப்ஜெக்ட்டையும் சேர்த்தா என்ன?" என நிறுத்த கார்த்திக் தொடர்ந்தார்.

"கல்லூரி தேர்வுகளுக்குப் படிச்சிட்டு இருக்கும்போது திடீர்னு, இதை ஏன் ஒரு மீமா போடக்கூடாதுன்னு பல தடவை யோசிச்சிருக்கோம். அப்படி யோசிச்சதுதான் இந்த மெடிக்கல் மீம்ஸ் எல்லாம். கல்லூரி வகுப்புகள், நண்பர்களுடன் பேசும்போது, தேர்வுக்கு படிக்கும்போது என எப்போ வேணாலும் மீம்ஸ் ஐடியாஸ் கிடைக்கும். அதை உடனே மொபைல்லயே மீமாக்கிடுவோம். இதை இன்னும் ஒருபடி மேல கொண்டுபோய் மெடிக்கல் கான்செப்ட் வச்சு, மீம் போட்டிகள் வச்சோம். அதுல வந்த நிறைய மீம்ஸ பலரும் உடனே ஷேர் பண்ணாங்க" என தம்ப்ஸ் அப் காட்டுகிறார் கார்த்திக்.

"ஒரு சில மீம்களை மருத்துவ மாணவர்கள் மட்டும்தான் புரிஞ்சுக்க முடியும். ஆனால், நிறைய மீம்களை ப்ளஸ் டூ படிக்குற மாணவர்களே கூட புரிஞ்சுக்க முடியும். ஏன்னா மீம் என்ன கான்செப்ட்ன்னு புரிஞ்சா போதும். பாடம் தானா புரியும். முதல்ல நாங்க இப்டி மீம்ஸ் போடுறோம்னே எங்க காலேஜ்ல தெரியாது. இப்போதான் நண்பர்கள்லாம் பாராட்டுறாங்க" என கண் சிமிட்ட, சில ஜாலி கேலி மெடிக்கல் மீம்ஸ்க்கு விளக்கம் கேட்டோம். அந்த மீமும், அதற்கு அவர்கள் அளித்த விளக்கமும் இங்கே...

medical memes

பாக்டீரியாவில் கிராம் பாசிட்டிவ் மற்றும் கிராம் நெகட்டிவ் என இரண்டு பாக்டீரியாக்கள் இருக்கின்றன. வான்கோமைசின் என்பது ஒரு ஆன்டி பயாட்டிக். இந்த வான்கோமைசின் என்பது கிராம் பாசிட்டிவ் பாக்டீரியாக்களை மட்டும்தான் தாக்கும். அதுக்குதான் இந்த மீம்.

medical memes

நமது தோலை ஒருவர் தொடுகிறார் என்றால் அந்த உணர்வை, மூளைக்கு கொண்டு செல்லும் நரம்புகள்தான் Afferent. இதனை மூளை உணர்ந்தவுடன் உடனே பதில் கட்டளைகளை அனுப்பும். உதாரணமாக கையில் பூச்சி கடித்தால், உடனே கையை உதறு எனக் கைகளுக்கு கட்டளையிடும். இந்த கட்டளையைக் கொண்டுவந்து சேர்ப்பது Efferent.

medical memes

நியூரான் என்பது நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு. இதற்கு முன்னர் பார்த்த அதே Afferent-தான் இங்கேயும். அந்த Afferent ஆனது மூன்று நியூரான்களாக பிரிந்து மூளையின் ஒவ்வொரு பகுதியைச் சென்று சேரும். அதில் இரண்டாம் வரிசை நியூரான்கள், சமிக்கைகளை தலாமஸ்க்கு எடுத்துச்செல்லும். அதுதான் இந்த மீம் கான்செப்ட்.

medical funny memes

நம்முடைய குடலில் எப்போதுமே இயற்கையாக சில பாக்டீரியாக்கள் இருக்கும். இவை நன்மை செய்யும் இ-கோலை பாக்டீரியாக்கள். இதுபோக தீமை செய்யும், நோய் ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாக்களும் இருக்கும். இந்த தீய பாக்டீரியாக்களை அழிப்பதற்காக பிராட் ஸ்பெக்ட்ரம் ஆன்டிபயாடிக் மருந்துகளை அளிக்கும்போது, அவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் சேர்த்து கொன்றுவிடும். இதற்கான மீம்தான் மேலே இருப்பது.

medical funny memes

கொனேரியோ என்பது ஒரு பாலியல் நோய். அதை உருவாக்கும் பாக்டீரியாதான் நெய்சீரியா கொனேரியோ. அதை படிக்காதவன் டெம்ப்ளேட்டில் வைத்து செய்ததுதான் இந்த மீம்.

medical funny memes

இந்த மீம் பார்த்ததுமே கொஞ்சம் புரிந்துவிடும். நம் உடலுக்குள் வெளியில் இருந்து நுழையும் விஷயங்களை ஆண்டிஜன் என்போம். அதை எதிர்த்து சண்டையிடுவதற்காக நம் உடலுக்குள் இருப்பவை ஆண்டிபாடிகள். ஆட்டோ இம்யூன் டிசீஸ் எனப்படும் இந்த நோய்களில் நம் உடலில் இருக்கும் ஆண்டிபாடிகளே, நம் திசுக்களை கொன்றுவிடும். 

funny medical memes

அப்பென்டிக்ஸ் என்பது குடல்வால் எனப்படும். குடலில் இருக்கும் இந்த பகுதிக்கு எந்த பணியுமே கிடையாது. எப்போதும் சும்மாவே இருக்கும். இத்தனைக்கும் இந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம், நரம்பு மண்டல இணைப்பு என அத்தனையும் இருக்கும். அதற்குத்தான் இந்த மீம். சமீபத்தில்தான் இதற்கு சில பணிகள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனாலும் கூட இன்னும் தெளிவாக இல்லை. 

மெடிக்கல் மீம்ஸ்

இதுவும் கொஞ்சம் ஈசியான மீம்தான். நம்முடைய மூளையைச் சுற்றிலும் மூளை தண்டுவடத் திரவம் இருக்கும். இதன்பணி நம் மூளையை அதிர்ச்சிகளில் இருந்து பாதுகாப்பதுதான். இந்த திரவத்தின் அளவு அதிகமானால், ஏற்படும் குறைபாடுதான் Hydrocephalus.

medical memes

இது சும்மா ஜாலிக்காக போட்ட மீம். Systemic lupus  erythematosis என ஒரு நோய் இருக்கிறது. அந்த நோய் வந்தால் உருவாகும் ஒரு பக்கவிளைவுக்கு 'Malar Rash' எனப் பெயர். மலர் - Malar-ன்னு மேட்ச் ஆனதால இந்த டெம்ப்ளேட் பிடிச்சோம்.

funny medical memes

நம் முகத்திலேயே 20 தசைகளுக்கும் மேல இருக்கு. அதுல புருவம், உதடு, நெற்றி சுருக்கம் என ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு தசை இயங்கும். அப்படி எந்த அசைவுக்கு எந்த தசைன்னு சொல்றதுதான் இந்த மீம். கீர்த்தி சுரேஷ் ரியாக்‌ஷன் செம வைரல் ஆனதால இந்த மீம் போட்டோம். 

'Medical College Students and memes' கூட 'Makes the best pair-தான்' போலயே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்