வெளியிடப்பட்ட நேரம்: 20:58 (23/08/2017)

கடைசி தொடர்பு:10:59 (24/08/2017)

இட்லி சாம்பார், தென்னிந்திய மீல்ஸ், பிரியாணி... உணவுகளின் ‘மினியேச்சர்’!

மினியேச்சர்

"சின்ன வயசுல பொம்மை ஸ்டவ், குட்டி குக்கர், குட்டி கரண்டினு கிச்சன் செட் பொம்மைவெச்சு விளையாடின அனுபவம் பலருக்கும் இருக்கும். அப்படி ஆரம்பிச்சதுதான் உணவு மீதான என்னுடைய காதல். எங்க அப்பா ரொம்ப நல்லா சமைப்பார். அவர்கிட்டேதான் நான் சமையல் கத்துக்கிட்டேன். சமைச்சதை கலை அழகுடன் அலங்கரிச்சு ரசிப்பேன். அதுதான் இன்னிக்கு 'ஃபுட் மினியேச்சர்' என எனக்கான தனித்துவமான அடையாளத்தைக் கொடுத்திருக்கு'' என்கிறார் ரூபாஸ்ரீ ஆடம். குட்டி குட்டியான இட்லி, தென்னிந்திய மீல்ஸ், உருளைக்கிழங்கு போண்டா, பிரியாணி என உணவுகளின் ‘மினியேச்சர்’ உருவாக்கி அசத்துகிறார்.

ரூபாஸ்ரீ “என் சொந்த ஊர் சென்னை. அம்மா டாக்டர், அப்பாவுக்கு பிஸினஸ். ஐரோப்பா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து என பல வெளிநாடுகளுக்கு அப்பா அழைச்சுட்டுப் போவார். அப்படிப் போகும்போது ஒவ்வொரு நாட்டின் பாரம்பர்ய உணவுகளைத் தேடிப்பிடிச்சு ருசிப்போம். ஒருமுறை ஸ்பெயின் நாட்டுக்குப் போயிருந்தோம். உலகின் மிகவும் பழமையான ஒரு ரெஸ்டாரண்ட் அங்கே இருக்குன்னு கேள்விப்பட்டுப் போனோம். அங்கே ஒரு முழு ரெஸ்டாரண்டையும் மினியச்சராக கண்காட்சிக்கு வெச்சிருந்தாங்க. குட்டி சேர், குட்டி டெபிள் என எல்லாமே பார்க்கப் பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சு. எனக்குள்ளிருந்த கலைத் திறமையைத் தட்டி எழுப்பிச்சு அந்த டீரிப்” என்று மினியேச்சர் செய்வதற்குத் தூண்டுதலாக இருந்த தருணத்தைப் பகிர்ந்தார் ரூபாஸ்ரீ. 

 

''அப்போ, நான் சென்னை ஸ்டெல்லா மாரீஸ் காலேஜ்ல ஃபைன் ஆர்ட்ஸ் படிச்சிட்டிருந்தேன். உடனே, ஓய்வு நேரத்தில் நானாக மினியேச்சர் செய்யும் பயிற்சியில் இறங்கினேன். நான் ஒண்ணை நினைச்சு ஆரம்பிப்பேன்; அது வேற மாதிரி வரும். சில சமயம் ஒருநாள் முழுக்க இதுவே வேலையாக இருப்பேன். கடைசியில் நான் செஞ்சதை எனக்கே பார்க்கப் பிடிக்காமல் ஒளிச்சு வெச்சுடுவேன்'' என்று சிரிக்கிறார் ரூபாஶ்ரீ. 

மினியேச்சர்

இப்படியே ஒரு வருடம் ஓடிய பிறகு, இந்த விஷயத்தில் என்ன தப்பு செய்கிறோம் என யோசிக்க ஆரம்பித்திருக்கிறார். ''கொஞ்சம் கொஞ்சமாக சரிசெஞ்சுக்க ஆரம்பிச்சதும், என் வொர்க் மேலே நம்பிக்கை வந்துச்சு. 'சார்மிங் மினியேச்சர்’ என்ற வலைதளத்தை 2014-ம் வருஷம் ஆரம்பிச்சு, நான் செய்ற மினியேச்சர்களை வெளியிட ஆரம்பிச்சேன். 2016-ம் வருஷம் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் என் மினியேச்சர்களை ஒரு நிகழ்ச்சியில் டிஸ்ப்ளே பண்ணச் சொன்னாங்க. அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அப்புறம் எவ்வளவு வேலை இருந்தாலும், வாரத்துக்கு ஒரு மினியேச்சர் செஞ்சிருவேன். இல்லைன்னா எதையோ மிஸ் பண்ணின மாதிரியே இருக்கும். என் ஆர்வம் சமையல் என்பதால், இந்திய உணவுகள், கேக், ஐஸ்கிரீம், ஸ்நாக்ஸ் என மினியேச்சர் செய்யறேன்” என்று கண்கள் மின்ன சொல்கிறார் ரூபாஶ்ரீ. 

மினியேச்சர்


தற்போது, நியூசிலாந்தில் சமையல் கலை பயின்றுவரும் ரூபாஶ்ரீ, சென்னையில் இருந்தபோது மினியேச்சர் செய்வதற்காக வீட்டிலேயே பயிற்சி பட்டறைகள் நடத்தியிருக்கிறார். “ஒரு மினியச்சரை உருவாக்க, பாலிமர் க்ளே, ஊசி, பிளேடு, சிறிய டூத் பிரஷ் ஆகியவை தேவை. இது எல்லாத்தையும்விட ரொம்ப முக்கியம், ஒரு பொருளை எவ்வளவு ரியாலிஸ்டிக்காக செய்றோம் என்பதுதான்” என்று புன்னகைக்கிறார் ரூபாஸ்ரீ. 

இதுபோன்ற சின்னச் சின்னச் சந்தோஷங்களில்தானே வாழ்க்கையின் நொடிகள் ஒளிந்திருக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்