வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (23/08/2017)

கடைசி தொடர்பு:11:30 (24/08/2017)

மியூச்சுவல் ஃபண்டின் பிக் பாஸ்... அள்ளித்தரும் அட்சய பாத்திரம் எஸ்.ஐ.பி! #SIP

ஏழையைக்கூடப் பணக்காரராக மாற்றிவிடும் சக்தி கொண்டது எஸ்.ஐ.பி (SIP). முன்பு ஒரு சிலருக்கே தெரிந்த வார்த்தையாக இருந்த எஸ்.ஐ.பி, இன்றைக்குப் பலரும் அடிக்கடி பேசுகிற வார்த்தையாக மாறியிருக்கிறது. அதுவும் குறிப்பாக முதலீட்டாளர்கள் அடிக்கடி உச்சரிக்கின்ற வார்த்தையாக அமைந்துவிட்டது. 

SIP


மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக செய்யும் முதலீட்டைத்தான் எஸ்.ஐ.பி (SIP – Systematic Investment Plan) என்று சொல்லுகிறோம். எஸ்.ஐ.பி என்பது முதலீட்டுத் திட்டம் அல்ல; அது ஒரு முதலீட்டு முறை. அதாவது, எஸ்.ஐ.பி என்பது குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்வதாகும். 

இந்த இடைவெளி என்பது மாதத்துக்கு ஒருமுறை, காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை, வருடத்துக்கு ஒரு முறை என நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு முடிவு செய்யலாம். காலம் என்பதை ஒன்று, இரண்டு, ஐந்து வருடங்கள் எனப் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு அல்லது நமது தேவைக்கு ஏற்றவாறு விருப்பப்படி முடிவு செய்துகொள்ளலாம். 

அதேநேரத்தில் எஸ்.ஐ.பி முறையில் குறிப்பிட்டத் தொகை என்பது நம்மால் எவ்வளவு தொகையை முதலீடாக மேற்கொள்ள முடியுமோ அந்தத் தொகையே தாராளமாக முதலீட்டை மேற்கொள்ளலாம். எஸ்.ஐ.பி முறையின் மூலம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி முதலீட்டில் நம்மால் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் கூட, அப்போது நம் முதலீட்டை நிறுத்திக்கொண்டு விடலாம். எந்த ஒரு பிரச்னையும் இல்லை. மியூச்சுவல் ஃபண்டுகளில், எஸ்.ஐ.பி முறையில் அனைத்து வகை சொத்துகளிலும் முதலீடு செய்யலாம். பங்கு சார்ந்த திட்டங்கள், கடன் சார்ந்த திட்டங்கள், தங்கம், வெளிநாட்டு ஃபண்டுகள் போன்ற பல வகையான சொத்துகளிலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்ளலாம். 

எஸ்.ஐ.பி நன்மைகள்! 

எஸ்.ஐ.பி முறையிலான முதலீட்டில் பல சாதகங்கள் உள்ளன. எப்போது பணம் தேவைப்படுகிறதோ, அப்போது பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளலாம். இப்படித் திரும்ப எடுப்பதற்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது. எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் சிறிய சிறிய தொகையாக சேமித்து முதலீட்டைப் பெருக்கலாம். நம்மில் பெரும்பாலோனோர் மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள் அல்லது சொந்தத் தொழில் செய்பவர்களாக இருக்கிறோம். நம்மால் நிச்சயம் ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய், 1,000 ரூபாய் என ஒரு சிறிய தொகையை நமது எதிர்காலத் தேவைகளுக்காக ஒதுக்கி முதலீடு செய்யலாம். 

பங்குச் சந்தையில் முதலீட்டை மேற்கொண்டால் எந்தப் பங்கில் முதலீடு செய்வது, எப்போது வாங்குவது அல்லது விற்பது என்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கும். ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் அந்தப் பயம் இல்லை. எஸ்.ஐ.பி முறை முதலீட்டு ஒழுக்கத்தைக் கொண்டு வருவதால், தொடர்ச்சியாக முதலீட்டை மேற்கொண்டு லாபத்தை ஈட்ட முடியும். நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் எனப் பல சாதகங்கள் உள்ளன. 

எஸ்.ஐ.பி முதலீடு பல தரப்பட்ட மக்களிடமும் பாப்புலர். எஸ்.ஐ.பி-ல் முதலீடு செய்து வந்தால், வங்கி சேமிப்புக் கணக்கைவிட அதிகமான வட்டி கிடைக்கும். பணம் தேவையென்றால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். சிறு துளி, பெரு வெள்ளம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்றைய சூழ்நிலையில் எஸ்.ஐ.பி.யைத் தவிர வேறுவழியில்லை. 

எஸ்.ஐ.பி எல்லா வகையான நீண்ட கால இலக்குகளுக்கும் உதவியாக இருக்கிறது. எஸ்.ஐ.பி முதலீட்டைப் பொறுத்தவரை ஒரு மரத்தை வளர்ப்பது போன்றது. ஒரு செடி முதலில் ஒரு மரமாக வளருவதற்கு அதிகபட்சம் 5 அல்லது 10 ஆண்டுகள் வரை காத்திருத்தல் வேண்டும். அவ்வாறு காத்திருந்தால், நமக்குத் தேவையான பழத்தைப் பறித்துக்கொள்ளலாம். அதைப்போலவே எஸ்.ஐ.பி முறையில் நல்ல ஒரு திட்டத்தில் முதலீட்டை மேற்கொண்டால் அந்தத் திட்டம் நல்ல லாபத்தில் இருக்கும்போது, நமக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.


டிரெண்டிங் @ விகடன்