Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநங்கைகளின் உணர்வுகளை உணருங்கள் தோழர்களே! #RespectTransgenders

திருநங்கை

சமூகம் பற்றிப் பேசும் அநேக சந்தர்ப்பங்களில் ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களைப் பற்றிய விஷயங்கள் மட்டும் அலசப்படுகின்றன. மூன்றாம் பாலினமான திருநங்கைகளைப் பற்றிய சிந்தனை பலருக்கு வருவதில்லை. பாலினப் பாகுபாடால் அவர்களுக்கு நேரும் இன்னல்களைப் பற்றியும் அதிகம் பேசப்படுவதில்லை.
 
கல்யாணமாகி  நான்கு வருடங்கள் கழித்துப் பிறக்கும் குழந்தை அது. தன் பெண்மையைப் பூர்த்திச் செய்ய வந்த ஒரு பொக்கிஷமாகவே அந்தக் குழந்தையை நினைத்தாள். தாயை விட்டு அவனாலும் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத அளவுக்குப் பாசத்தால் பிணைந்திருந்தான். ஆண்டுகள் நகர்ந்து அவன் இளமைப் பருவத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றம். இதுவரை தன்னை ஓர் ஆணாகக் கருதி ஆசிரியர் ஆண் பிள்ளை பக்கத்தில் உட்கார வைக்கும் போதெல்லாம் அவனுக்குள் ஏதோ ஒரு நெருடல். பெண் பிள்ளைகளோடு சகஜமாகப் பழக முடிந்த அவனால் ஆண் பிள்ளைகளோடு அந்த நெருக்கத்தைக் காட்ட முடியவில்லை. யாரிடம் சொல்வது என்றும் புரியவில்லை. ஏற்கெனவே தன் நடையையும், பேச்சையும் எல்லோரும் வித்தியாசமாகப் பார்ப்பதும் தன்னைக் கேலி செய்வதும் அவனுக்கு விளங்காமல் இல்லை.

நன்றாக நடனம் ஆடும் இவனும் ஒரு நடனப் போட்டியில் பங்குகொள்ள, அவன் வகுப்பின் ஆசிரியை "நீ என்ன பொம்பளப் புள்ள மாதிரி ஆடுற?" என்று கேட்டதும், அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பது தெரியாமல், அச்சப்பட்டு ஓடிப் போய் கழிவறைக்குள் நின்று அழுகிறான். வீட்டுக்குள் வந்து கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்க்கும்போது அவனை அறியாமலே அவனுக்குள் ஒரு நாணம் பூக்கிறது. ஆசையை அடக்க முடியாமல் அம்மாவின் சேலையை அணிந்துகொள்கிறான். அதில் ஏதோ ஒரு நிறைவு. அம்மா இல்லாத சமயங்களில் அதுவே அவனுக்கு வழக்கமாகி விடுகிறது. ஆனால், என்றாவது ஒரு நாள் தெரிந்துவிடும் அல்லவா! அந்தநாளும் வந்தது. தன் சேலையை உடுத்தி நின்ற அவனைப் பார்த்துவிடுகிறார் அம்மா. வீடே போர்க்களமாகி விடுகிறது. இதுவரை மனதில் பூட்டி வைத்திருந்தை உடைத்து, "எனக்குப் பொண்ணுங்க மாதிரிதான் இருக்கப் பிடிக்கிறது " என்று அழுகையின் ஊடாகச் சொல்கிறான். அம்மா அவனை ஏதேதோ கூறி, ஆண் பிள்ளையைப் போல இருக்கச் சொல்லி கெஞ்சுகிறார். ஆனால், எவ்வளவு நாள்களுக்குத்தான் நடிப்பது என்று தன் நிலையை விளக்கும்போது அம்மாவுக்கு உலகம் சுற்றுவதே நின்றதுபோலாகி விட்டது. இறுதியாகத் தனக்குள் இருக்கும் அவளை மறைக்க விரும்பாததால் வீட்டை விட்டு வெளியேறுகிறான் அவன் (அவள்).

படிப்பதற்கு ஒரு கதைபோல இருந்தாலும் உண்மையா நடந்தது இது. பள்ளியில் என்னோடு படித்த அண்ணன் ஒருவரின் வாழ்வில் நடந்தவை. திருநங்கைகளை எங்கேனும் பார்க்கும்போதும் அந்த அண்ணனின் நினைவு வரும். இவர்களில் அவர் இருக்கிறாரா என என் கண்கள் அனிச்சையாகத் தேடும். 

திருநங்கை

திருநங்கைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் இதை விடக் கொடுமையான பல வலிகளும், அவமானங்களும் நிறைந்ததாகவே இருக்கும். சிறுவயதிலிருந்தே இந்தச் சமூகம் அவர்களை, தப்பிப் பிறந்த ஜீவன்களாகவே பார்த்துவருகிறது. எனக்கும் சிறு வயதிலிருந்தே இவர்களைப் பார்த்தால் சற்றுப் பயமாக இருக்கும். இந்தச் சமூகத்தின் தாக்கம் என்னுள்ளும் விதைத்திருக்கிறது அல்லவா!

ரயில் பயணங்களில் வழக்கமாக ஒரு காட்சியை நாம் பார்க்க நேரும். பயணம் செய்யும் அநேகரின் தலைகள் திடீரென்று குனிந்துகொள்ளும் அல்லது ஜன்னலை நோக்கித் திரும்பும். இதற்கான காரணத்தை எளிமையாக யூகித்துவிடலாம். திருநங்கை ஒருவர் பணம் கேட்டு வந்துகொண்டிருப்பார். குறிப்பாக, ஆண்களிடம் பணம் கேட்கும்போது அவர்களில் பலர் ஒருவித கிண்டலான பார்வையையே அந்தத் திருநங்கை மீது வீசுவார்கள். எனக்கு அப்பொழுது எல்லாம் இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்ற கேள்வி எழும்? கோபமாக வரும். கிண்டலாகப் பார்ப்பவர்களிடம் என் கோபத்தைக் காட்ட நினைப்பேன். வழக்கமாக எனக்குள் இருக்கும் பயம் அதைத் தடுத்து விடும்.

இதுபோல பல சம்பவங்கள் எனக்குப் பழகிப் போக ஒரு ரயில் பயணம் என் கேள்விக்கான விடையைத் தந்தது. ரயில் வடமாநிலத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அன்றைக்கும் திருநங்கை ஒருவர் பணம் கேட்டு வந்துகொண்டிருந்தார். பணம் கொடுத்தவர்களை திருநங்கைவாழ்த்திக்கொண்டு வந்தார். வழியில் நான் நிற்க, என் அம்மா வயதில் இருக்கும் அந்தத் திருநங்கை  என்ன நினைத்தாரோ... ஒரு நிமிடம் நின்று, அவரின்கையை என் தலையில் வைத்து "எல்லா ஆசியோடும் நல்லா இரு" என்று ஆசிர்வதித்தார். இது எனக்கு அவருடன் ஓர் இணக்கத்தை ஏற்படுத்தியதாக உணர்ந்தேன். அவரிடம் "ஏன் இப்படி எல்லோரிடமும் பணம் கேட்கிறீர்கள்? நீங்கள் போன பிறகு உங்களைப் பலர் திட்டுவது தெரியாதா?" என்று கேட்டேன்.

அவர் என்னை நன்றாக ஒருமுறைப் பார்த்துவிட்டு, "இப்படிச் சம்பாதிக்கவில்லை என்றால் எனக்குச் சோறு போடுவது யாரு?" என்றார். இந்தப் பதிலை நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும் நேரடியாக அவரின் குரலில் கேட்டபோது திகைத்துபோனேன்.

"எல்லோரையும்போல வேலைக்குச் செல்ல வேண்டியது தானே?" என்றேன் சின்னத் தயக்கத்தோடு. 

"நான் வேலைக்குப் போக ரெடி! வேலைத் தர யார் இருக்கிறார்கள்? என்றவர் தொடர்ந்து "எங்களைப் போன்ற திருநங்கைகளில் சில படித்து நல்ல வேலைக்குப் போயிருப்பதை மனதில் கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறாய். அவர்களை, எங்களைப் போன்ற யாரோ ஒருத்தர் கஷ்டப்பட்டுப் படிக்க வச்சுட்டோம். ஆனால், நான் ஸ்கூலுக்குப் போற காலத்துல என்னோட அம்மாவே என்னைப் பிடிக்கவில்லைனு ஒதுக்கிட்டாங்க... வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஏதாச்சும் வேலை செய்து பிழைச்சிகலாம்னு வேலை தேடினால், எங்களை நம்பி யாரும் வேலை தரவும் தயாராக இல்லை. நாங்க என்ன ஆசைப்பட்டா பிச்சை எடுத்துட்டு இருக்கிறோம்" என்று விரக்தியான சிரிப்போடு சொல்லி நகர்ந்தார். மிக இயல்பான உரையாடலில் இதுவரை திருநங்கைகளைப் பற்றிய என் பார்வையின் வேறு கோணத்தைக் காட்டிச் சென்றார் அவர்.  

இப்போது விண்ணப்பம் நிரப்பும் ஒவ்வொரு முறையும் பாலினம் எனக் குறிப்பிடும் இடத்தில் மூன்றாவதாக ஒன்றை என் கண்கள் இயல்பாகத் தேடுகின்றன. அப்படி இல்லாத விண்ணப்பப் படிவங்களைப் பார்க்கும்போது, திருநங்கைகள் விண்ணப்பிக்கும்போது எப்படி குறிப்பிடுவார்கள் என்று யோசனை எழுகிறது. சில விண்ணப்பங்களில் மட்டுமே மூன்றாவது பாலினத்திற்கான இடத்தை வழங்கியுள்ளது. 

என்னைப் போன்று நீங்களும் திருநங்கைகளைப் பற்றி உங்களுக்குள் உருவாகியிருக்கும் அச்சத்தையும் கூச்சத்தையும் தவிருங்கள். அவர்களின் வாழும் சூழலுக்கு முதல் காரணம் நாம் என்று உணருங்கள். இதுவரை அவர்களை ஒதுக்கியதை இனியும் தொடராமல், மனித சமுதாயத்தில் அவர்களுக்கான புதிய அத்தியாயம் உருவாக நம்மால் இயன்ற செயல்களில் களமிறங்குவோம். அவர்களின் உணர்வுகளை உணர்ந்துகொள்வோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement