வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (25/08/2017)

கடைசி தொடர்பு:16:51 (25/08/2017)

"ஆண்களின் மானம் என்பது, பெண் உடல் மீதான அதிகாரமே!" இலக்கியம் முதல் சமூக ஊடகம் வரை ஓர் அலசல்!

பெண்களின் உலகம் ஆண்களாலே வரையறுக்கப்படுகிறது. இது இன்று மட்டுமல்ல, அரசர்கள் ஆண்ட காலம் முதலே இப்படித்தான். ஆண்களின் ஆதிக்கம் எந்தளவு பெண்ணின் உலகைச் சிதைக்கிறது என்பதை மிக ஆழமாக அலசுகிறார் கவிஞர் சக்தி ஜோதி. 

பெண்


வினுபிரியா... முகநூல் பயன்படுத்துகிறவர்களுக்கு மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் துயர நினைவாக மனதில் பதிந்துவிட்ட பெயர் இது. சேலம் மாவட்டம், இளம் பிள்ளையை அடுத்த இடங்கணசாலை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை - மஞ்சு தம்பதியின் மகள்தான் வினுபிரியா. தனியார் பள்ளி ஆசிரியை. இவரது புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து முகநூலில் யாரோ வெளியிட்ட, அவமானம் அடைந்த வினுபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காலங்காலமாக மானம், கற்பு என்கிற வேலிக்குள் பெண்ணின் உடலை அடைத்து வைத்திருக்கும் சமூகம் செய்த அப்பட்டமான கொலை அது. 

ஒருதலையாகக் காதல் செய்து, அந்தப் பெண் கிடைக்காத வெறியில், உடல் ரீதியாக அவளைத் துன்புறுத்தி திருப்தி அடைகிற வக்கிர சிந்தனை படைத்த ஆண்களின் கண்களில் பெண்களுக்கு மனம் இருப்பது தெரிவதேயில்லை. இதுபோன்ற புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கும் அவற்றை இணையத்தில் பார்த்து ரசிப்பவர்களுக்கும் பெண் என்றால், உடல் மட்டுமே. பெண்ணுக்கு மானம் என்பது உடலில் இருக்கிறது. அதுவே ஆணுக்கு, ஒரு பெண்ணைத் தாய்மை அடையச் செய்வதிலும் நினைத்த காரியத்தில் வெற்றிபெற முடியாமல் போவதிலும் இருப்பதாகக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது, ஆண்மைக்கும் வலிமைக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது. போரில் தோல்வி அடையும்போதும், ஒரு பெண் வழியாக வலிமையை நிரூபிக்க இயலாமல் போகும்போதும் அவன் அவமானம் அடைகிறான். 

தனிமையின் நூறு ஆண்டுகள் ஸ்பானிய மொழி எழுத்தாளர், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய 'தனிமையின் நூறு ஆண்டுகள்' (மொழிபெயர்ப்பு: ஞாலன் சுப்ரமணியன், சுகுமாரன்) என்கிற நாவலில், உர்சுலா என்கிற பெண் வருகிறாள். அவளை ஹோசே அர்க்காதியோ புயேந்தியா என்பவன் திருமணம் செய்கிறான். வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த அவர்களுக்குக் குழந்தைப் பிறந்தால், பன்றியின் வாலுடன் பிறக்கும் என்கிற மூடநம்பிக்கை இருக்கிறது. எனவே, உறவினர்கள் இந்தத் திருமணத்தை எதிர்கிறார்கள். அர்க்காதியோவின் பிடிவாதத்தினால் திருமணம் நடக்கிறது. ஆனால், ஒவ்வொரு நாள் இரவும் கணவன் தன்னோடு உறவு கொண்டுவிடக்கூடாது என்று நினைக்கும் உர்சுலா, கற்புக் கவசம் அணிந்துகொள்கிறாள். பாய்மரத் துணியில் குறுக்கும் நெடுக்குமாக தோல்பட்டைகள் வைத்து, முன்பக்கம் கனத்த இரும்பு பக்கிள் பொருத்திய உள்ளாடைதான் அந்தக் கவசம். இந்த உள்ளாடையை அவளுடைய அம்மா தைத்துக்கொடுக்கிறாள். 

இதை அறியாத அந்தச் சிறிய கிராமத்து மக்கள், அர்க்காதியோவுக்கு ஆண்மையில்லை என பேசத் தொடங்குகிறார்கள். ஒருநாள், சேவல் சண்டையில் புருடென்சியோ அகுய்லர் என்பவனை அர்க்காதியோ தோற்கடிக்கிறான். தோல்வியைத் தாங்கிக்கொள்ள இயலாத புருடென்சியோ, “உன் சேவலை உனக்குப் பதிலாக உன் மனைவிக்கு ஒத்தாசை செய்ய அனுப்பலாம்” என எல்லோரின் முன்பும் கத்திச் சொல்கிறான். இதனால் அவமானமடைந்த அர்க்காதியோ, புருடென்சியோவை ஈட்டியால் தொண்டைப் பகுதியில் குத்திக் கொன்றுவிடுகிறான். உடனடியாக வீட்டுக்கு வந்து, உர்சுலாவிடம் ஈட்டி முனையில் அவளது கற்புக் கவசத்தைக் கழட்டச் சொல்லி கலவி நிகழ்த்துவான். 

இந்தக் கதை தமிழ் நிலத்தில் நிகழவில்லை. எனினும் புருடென்சியோ அகுய்லரின் பேச்சு, பெண்ணின் உடல் சார்ந்து செயல்படுபவே ஆண்மைவாதி என்பதாகவே பார்க்கமுடிகிறது. குழந்தைப்பேறு இல்லாத பெண்ணைப் பற்றிய இழிவான 'மலடி' என்ற சொல் இங்கே உள்ளது. அவளைத் திருமணம் செய்திருப்பவனை ஆண்மை இல்லாதவன் என்கிற எண்ணத்தோடுதான் பார்ப்பார்கள். அவனுக்கே அம்மாதிரியான மனநிலையின் காரணமாக, தாழ்வுணர்ச்சி இருக்கும். மனைவியைக் குற்றம் சொல்லுகிறவனாகவும் நண்பர்களோடும் உறவினர்களோடும் இணங்கியிருக்க இயலாதவனாகவும் மாறியிருப்பான். 

பெண்

அடிப்படையான மனித மனம், எதிரில் இருப்பவரை உடலாலோ, மனதாலோ காயப்படுத்தி சண்டையிட விரும்புகிறது. இதற்குக் காரணம், போர்ச் சமுதாய மரபாகவே மனித குலம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆதிச் சமூகம், காடுகளில் அலைந்து திரிந்த காலத்திலும், மரங்களில் குகைகளில் உறங்கியபொழுதிலும் தன்னைத் தற்காத்துக்கொள்ள போர்முறையினை கற்றுக்கொண்டிருந்தது. பிறகு, மேய்ச்சல் சமூக நிலையிலும் போர் என்பது ஆண்களுக்கு அவசியமானது என உணர்த்தப்பட்டது. எனவே, தோல்வியினால் ஏற்படும் வலியை ஓர் ஆணால் தாங்கிக்கொள்ள இயலுவதில்லை. போர்க்களத்தில் முதுகில் காயம் அடைந்தவன், வாழ்வதைவிட இறப்பதே வீரம் என மரபாக இருந்துள்ளது. 

'வடக்கிருத்தல்' என்றால், போர்க்களத்தில் புறப்புண்பட்டவர்கள் உணவு மறுத்து வடக்குத் திசை நோக்கி தவமிருந்து உயிர் துறப்பது. மன்னர்களும், அவரோடு இணங்கி இருந்தவர்களும் இவ்விதமாக உயிர் துறந்துள்ளனர். மகனுடைய தவறான செயலினால் மனமுடைந்த கோப்பெருஞ்சோழன், வடக்கிருந்துள்ளார். இவருடன் பிசிராந்தையார் என்கிற புலவரும் இணைந்து உயிர் துறந்துள்ளார். சிலப்பதிகாரத்தில், பாண்டியன் நெடுஞ்செழியன் தவறான தீர்ப்பைச் சொன்னதற்காக இறந்துபோனதும் மானமுள்ள செயலாக சரித்திரத்தில் பதிவாகியுள்ளன. எனவே, ஒருவன் பேசும் சொற்களில் கவனம் கொள்ளவேண்டியது அவசியம். 

பல சந்தர்ப்பங்களில் ஒருவரை நோக்கி வீசப்படும் சொற்கள், எளிதாக அவமானப்படுத்திவிடும். எழுத்தாளர் இமயத்தின் 'சாவு சோறு' இமையம்  தொகுப்பில் 'பரிசு' என்ற ஒரு சிறுகதை. ராமசாமி என்கிற ஓய்வுபெற்ற ஆசிரியரை அவரது மருமகளும் மகனும் வார்த்தைகளால் காயப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். மகனுக்கு வேலை இல்லை. மருமகளும் மாமனாரின் ஓய்வு நிதியிலிருந்து ஆடம்பரமான வாழ்வை அமைத்துக்கொள்வாள். தனது மகளின் பிறந்தநாளுக்கு பணம் தரவில்லை என்பதால், 'நான் உனக்குத்தான் பிறந்தேனா' என ராமசாமியைப் பார்த்துக் கேட்பான். அவர்களது தொடர் அவமானங்களைப் பொறுத்துக்கொண்டு அந்தக் குடும்பத்துக்கு பணத்தைக் கொடுத்துக்கொண்டிருப்பார் ராமசாமி. 

அம்மாவின் நினைவாக வருடத்தில் ஒருநாளான மாசிமகத்தில் அரிசி கொடுத்து காரியம் செய்ய மகன் வராமல் போக, அந்தக் கோபத்தில் பணம் தர மறுப்பார். அப்போது நிகழும் வாக்குவாதத்தில் அப்பாவைப் பார்த்து மகன், 'நான் உனக்குத்தான் பிறந்தேனா?' எனக் கேட்பான். அதன்பிறகு வங்கிக்குச் சென்று தன் பெயரிலிருக்கும் மொத்தப் பணத்தையும் எடுத்துவரும் ராமசாமி, அண்ணன் மகளிடம் தன் வாழ்நாள் கதையைப் பகிர்ந்துகொண்டு அழுவார். பிறகு, மாலையில் தோட்டத்துக்குச் சென்று, வாடிய பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, மாமரத்தில் சுற்றியிருந்த மாட்டுக்குக் கட்டும் கயிற்றை எடுத்துக்கொண்டு மோட்டார் கொட்டகைக்குள் சென்று தாழ் போட்டுக்கொள்வதாகக் கதை முடிந்திருக்கும். ஆறு ஆண்டுகளாக தனக்குத் தனிப்பட்ட முறையில் மகனிடமும் மருமகளிடமும் ஏற்பட்ட அவமானங்களைப் பொறுத்துக்கொண்ட ராமசாமி, மனைவியின் கற்புச் சார்ந்த கேள்வியில் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறார். ஆணுடைய ஆண்மை அல்லது வீரம் சார்ந்த அவமானங்களை அவன் ஒருபோதும் தாங்கிக்கொள்வதில்லை. ஒன்று, தற்கொலை செய்துகொள்கிறான் அல்லது கொலை செய்கிறான். 

முதலாம் கரிகாற்சோழன், இளம் வயதிலேயே நாட்டை ஆளவேண்டிய பொறுப்புக்கு வந்துவிடுகிறார். இளைஞனான சோழன் கரிகாலனைத் தோற்கடித்துவிடலாம் எனவும், அவன் ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தைக் கையகப்படுத்திவிடலாம் எனவும் நினைக்கும் சேரர், பாண்டியர், வேளிர் ஒன்பது பேர்களும் இணைந்து, சோழ நாட்டின் மீது படையெடுக்க முடிவுசெய்கின்றனர். அனைவரும் சேரமான் பெருஞ்சேரலாதனை முன்னிலைப்படுத்தி ஒன்றிணைந்தனர். நீடாமங்கலத்துக்கு அருகேயுள்ள வெண்ணி என்கிற ஊரில் போர் நிகழ்த்தினர். மிகக்கடுமையாகப் போரிட்ட அத்தனை பேரையும் தோற்கடித்து, சோழன் வெற்றி அடைகிறான். போர்க்களத்தில் கரிகாலன் எறிந்த வேல், சேரனின் மார்பைத் துளைத்து முதுகில் காயம் ஏற்படுத்தி வெளியேறுகிறது. முதுகில் காயம்பட்ட காரணத்தினால், சேரன் அந்த இடத்திலேயே வடக்கிருந்து உயிர் துறக்கிறான். வெற்றிபெற்ற அரசனை, புலவர்கள் போற்றிப் புகழ்ந்து பாடுவது வழக்கம். எனவே, புலவர்கள் பலரும் சோழனைப் புகழ்ந்து பரிசில் பெற்றுச் செல்கிறார்கள். வெண்ணிக்குயத்தியார் என்கிற பெண்பாற் புலவரும் கரிகாலனைப் பாடுகிறார். அந்தப் பாடல்... 

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, 
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! 
களிஇயல் யானைக் கரிகால் வளவ! 
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற 
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே 
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை, 
மிகப் புகழ் உலகம் எய்திப், 
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே! 

'காற்று வீசும் திசையை அறிந்து தடைப்படாது மரக்கலம் செலுத்துகிற தொழில்நுட்பம் அறிந்திருந்த சோழர் குல மன்னர்களின் வழி வந்தவனே, மத யானையையுடைய கரிகாற்பெருவளவனே, உன்னுடைய ஆற்றல் வெளிப்படுமாறு ஊர்ப்புறத்தில் படையெடுத்துச் சென்று பகைவர்களை வெற்றிகொண்டவனே, வளமைமிக்க வெண்ணிபறந்தலை என்கிற இடத்தில் போர்க்களத்தில் புறமுதுகில் காயம்பட்டதால் நாணமடைந்து வடக்கிருந்து உயிர்விட்ட அவன், உன்னைவிட நல்லவன் அல்லவா?' என வெற்றிபெற்ற மன்னனைப் போற்றிய நிலையில், தோல்வி அடைந்தவனை நல்லவன் என்று சொல்வதற்கான காரணங்களைத் தேடச் சொல்கிறது இந்தப் பாடல். 

இந்தப் பாடலில் குறிப்பிடப்படுகிற சேர மன்னர் புறமுதுகிட்டுக் காயமடைந்தார் எனத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்பதால், சேரனின் மார்பில் பாய்ந்த வேல், முதுகு வரை புகுந்து காயம் ஏற்படுத்தியதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் புலவர் கழாஅத் தலையாரின், 

“தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த 
புறப்புண் நாணி மறந்தகை மன்னர் 
வாழ் வடக்கு இருந்தனன்;” 

என்கிற புறப்பாடலின் வரிகளும் உறுதிசெய்கின்றன. அந்த அளவுக்கு வீரமும் வலிமையையும் உள்ளவர்களாகவே பண்டைய மன்னர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். 

பெண்

பண்டைய காலத்தில் தன்னுடைய நாட்டின் எல்லையைக் காப்பதற்காகவும், நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவதற்காகவும் என்கிற இரண்டு காரணங்களுக்காக போர் நடைபெற்றது. இது தவிர, ஒரு பெண்ணைக் கைக்கொள்ளும் விதமாகவும் போர்கள் நடைபெற்றன. அதனால்தான் ‘மகட்பாற்காஞ்சி’ என்கிற ஒரு துறை, சங்கப் பாடல்களில் அமைக்கப்பட்டுள்ளது. பெண் கேட்டு, அந்தப் பெண்ணைக் கொடுக்க தகப்பன் மறுக்கும்போது, நிகழ்த்தப்பட்ட போர்களே 'மகட்பாற்காஞ்சி'. ஆனாலும், ஒரு நாட்டின் எளியக் குடியில் வசிக்கும் பெண்ணுக்காக இவ்வகையான போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்காது எனவும் பாடல்களின் வழியாக உணரமுடிகிறது. முதுகுடித் தலைவனின் மகளாகப் பிறந்திருக்கும் ஒரு பெண்ணின் காரணமாக, அவள் பொருட்டுக் கிடைக்கின்ற நிலத்தைக் கைக்கொள்ளும் விருப்பத்துடனும் அந்த நாட்டின் மீது போர் நிகழ்ந்திருக்கும். எவ்விதமாயினும், நிலத்தின் மீதான பெருவிருப்பமே பெண்கள் மீதும் நிகழ்ந்திருக்கிறது. 

நிலமே இன்றுவரையில் நடைபெறுகிற போர்களுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது. இன்றுவரையில் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்ய நடைபெறுகிற எந்தப் போரிலும் பெண்ணின் உடல் களங்கப்படவே செய்கிறது. பெண்ணுடலைக் களங்கப்படுத்துவதன் வழியாக, அந்த நாட்டில் வாழ்கிற ஆண்களின் வீரத்தையும் ஆண்மையையும் இழிவுசெய்ததாக வெற்றிபெறும் நாடு நினைக்கிறது. மேலும், பெண்ணுடலை அவமானம் செய்வதன் வழியாக, அவளது கற்பையும் அவள் சார்ந்த ஆணின் ஆண்மையையும் அவமானப்படுத்திவிட முடியும் என நம்புகிறது. 

ஆணுக்கு மானம் என்பது அவனுடைய வீரம், பெண் உடல் மீதான அதிகாரம் சார்ந்த ஆண்மை என்கிற உணர்வுகளாக இருக்க, பெண்ணுக்கு மானம் என்பது அவளது உடல் சார்ந்ததாக இருக்கிறது. எனவே, பெண்ணின் உடல் களங்கப்படுத்தப்படும்போது அவளது கற்பு களங்கமடைந்துவிட்டதான கற்பிதமாக மாறிவிடுகிறது. ஆகவேதான், வினுபிரியாவின் உடல் ஆபாசமாக்கப்பட்டவுடன் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்துகொண்டார். 

உண்மையில், 'கற்பெனப் படுவது பிறர் நெஞ்சு புகாமை' எனத் தொல்காப்பியம் கூறுகிறது. 'கற்பெனப் படுவது சொற்திறம்பாமை' என ஔவையார் சொல்கிறார். இந்த இரண்டு கூற்றுகளிலும் கற்பு எனப்படுவது, பெண்ணின் உடலாகக் கருதப்படவில்லை. களவு, கற்பு என்கிற இரண்டு பிரிவுகளில், கற்பு என்பது திருமண வாழ்வையே குறிப்பிடுவதாக இருக்கிறது. காலப்போக்கில் கற்பு, பெண்ணுடல் சார்ந்த விஷயமாக மாறி, அவளது மான, அவமானங்களைத் தீர்மானித்துள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆணின் மானமே பெரிதென கருதி, அவனுக்காக தன் உயிரையும் இழக்கிறவளாகப் பெண் இருக்கிறாள். 

சக்தி ஜோதி: கவிஞர், எழுத்தாளர், சங்க இலக்கியம் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதி வருபவர்.


டிரெண்டிங் @ விகடன்