வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (26/08/2017)

கடைசி தொடர்பு:15:58 (26/08/2017)

முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடும் சில கதைகள்..!

இது முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும் சில கதைகளின் கதை...

ஹாரிபாட்டரின் சாபம் பெற்ற ஆந்தைகள் :

அழகான ஆந்தைகள். அந்த ஆந்தை இனத்தின் பெயர் "ஹெட்விக்" ( Hedwig ). வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் காணக்கிடைக்கும் பறவை.  ஹாரிபாட்டர் பட வரிசைகளில் இந்த ஆந்தை முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருக்கும். அந்தப் படத்தில் 7 ஹெட்விக் ஆந்தைகள்  பயன்படுத்தப்பட்டிருக்கும். அவைகளுக்கு கிஸ்மோ, காஸ்பர், ஊப்ஸ், ஸ்வூப்ஸ், ஓ ஓ, எல்மோ , பாண்டிட் என பெயர்களைக் கொண்டிருக்கும். 

உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களைக் கொண்ட இந்தப் படம் இந்தோனேசியாவில் வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. நாடி, நரம்பு, சதை, ரத்தம் என எல்லாவற்றிலும் ஹாரி பாட்டர் வெறி ஏறிப் போன ரசிகர்கள் இந்த ஆந்தையை வாங்குவதில் பெரும் போட்டி போட்டார்கள். இந்த ஆந்தையை வாங்கி வளர்த்தால், தாங்களே ஏதோ ஹாரிபாட்டர் ஆகிவிடும் கணக்காக இதைத் தேடியலைந்தார்கள். இந்தோனேசியாவில் இந்த வகை ஆந்தைகள் கிடையாது. ஆனால், அதையொட்டிய இனமான “புபோ சுமாட்ரனஸ் " ( Bubo Sumatranus ) எனும் வகை ஆந்தைகளை கூண்டில் அடைத்து விற்பனையைத் தொடங்கினார்கள் வியாபாரிகள். வரிசைகட்டி வாங்கித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். எந்தளவிற்கு என்றால், அந்த இனமே அந்தப் பகுதியில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஹாரிபாட்டரின் சாபம் பெற்ற இந்த ஆந்தைகளைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். 

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை

விவாகரத்திற்குக் காரணமாகும் புறாக்கள் :

இந்தோனேசியாவின் ஜாவா தீவின் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மட்டும் விவாகரத்து கேட்டு 90 பெண்கள் படியேறியுள்ளனர். இதுவே ஜூன் மாதம் 13 பேர் தான் நீதிமன்ற படியேறினார்கள். இந்த 90 பேரில் பெரும்பாலானவர்கள், விவாகரத்திற்கு காரணமாக கைகாட்டும் திசையில் உட்கார்ந்திருக்கின்றன புறாக்கள். 

சமீபகாலமாக இந்தோனேசியாவில் புறா பந்தயம் மிகப் பிரபலமடைந்து வருகிறது. இதனால், பல ஆண்களும் வேலைக்குப் போவதை விடுத்து நாள் முழுக்கப் புறா பந்தயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், பலரும் தினம், தினம் பல நூறு ரூபாய்களை இந்தப் பந்தயங்களில் தோற்கிறார்கள். இது குடும்பப் பெண்களுக்கு கடுமையான கடுப்பை ஏற்படுத்த அவர்கள் நீதிமன்ற படியேறியிருக்கிறார்கள். 

கூடுதல் தகவலாக, ‘இந்தியாவில் பிரபலமாக இருந்த புறா பந்தயம் சமீபகாலங்களில் வெகுவாக குறைந்துள்ளது. பந்தயங்களில் பங்கேற்கும் கணவன்களை வீட்டுக்குள் பெண்கள் சேர்க்காததே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்’ என்று சொல்கிறது இந்தியாவின் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று. இந்தோனேசியப் பெண்களின் கவனத்திற்கு...

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை

யானை நண்பனைக் கொன்ற, யானை எதிரிகள் :

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் யானைகள் கொல்லப்படுவது சர்வ சாதாரணம். தந்தங்களுக்காக, தோலுக்காக, பற்களுக்காக, மயிர்களுக்காக, நகங்களுக்காக எனப் பல காரணங்களுக்காக வேட்டையாடப்படும் இந்த யானைகளைக் காக்க பலரும் போராடி வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் வேய்ன் லாட்டர் ( Wayne Lotter ). யானைகள் மற்றும் வனவிலங்குகளைக் காக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த லாட்டர் சமீபத்தில், சுட்டுக் கொல்லப்பட்டார். மனைவியும், அவரின் இரண்டுப் பெண் குழந்தைகளும் ஆதரவற்று நிற்கின்றனர். துப்பாக்கியிலிருந்து வெளிவரும் புகையோடு சில சுருட்டுகளையும் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிறார்கள் அந்த கொலைகாரர்கள். பெரிய மாளிகைகளில், ஏசி அறையில், பஞ்சு மெத்தையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த முதலாளிகள். அவர்களின் கட்டிலுக்கு மேலே சுவற்றிலிருந்து துருத்திக் கொண்டு நிற்கின்றன யானையின் இரு தந்தங்கள். 

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை

பிளாஸ்டிக் இல்லா லண்டன் மார்க்கெட் :

லண்டன் நகரின் மிகப் பிரபலமான பரோ மார்க்கெட் ( Borough Market ) கொஞ்சம், கொஞ்சமாக இயற்கை வழி நிற்க முயன்றுக் கொண்டிருந்தது. பல வகைகளில் முன்னேற்றத்தைக் கண்டாலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பைகளாகக் கிடப்பதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. அதற்கும் ஒரு முடிவை இப்போது எட்டியிருக்கிறார்கள். 

இந்த மார்க்கெட்டில் மொத்தம் 114 கடைகள் அமைந்திருக்கின்றன. மார்க்கெட்டின் மொத்த பரப்பளவு 51 ஆயிரம் சதுர அடி. பல வழிகளில் பிளாஸ்டிக்கை இந்தக் கடைக்காரர்கள், ஆங்காங்கே தண்ணீர் குழாயை வைத்திருப்பதன் மூலம் தற்போது பிளாஸ்டிக் தண்ணிர் பாட்டிலையும் தடை செய்திருக்கிறார்கள். இந்த மார்க்கெட் முழுக்கவே பிளாஸ்டிக் அற்ற இடமாக மாறியிருக்கிறது. பிளாஸ்டிக் தடை என்று சொல்லிவிட்டு 2 ரூபாய், 5 ரூபாய், 7 ரூபாய், 10 ரூபாய் என அளவின் அடிப்படையில் பிளாஸ்டிக் கவர்களை விற்கும் கதையெல்லாம் அங்கு இல்லை. பிளாஸ்டிக் இல்லை என்றால் இல்லைதான்.

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை 

காண்டாமிருகத்தைக் காப்பாற்ற அதைக் கொல்ல வேண்டும் : 

காண்டாமிருகம் வேட்டையாடுவதை சட்டப் பூர்வமாக்கினால், அது அதிகப்படியாக வேட்டையாடப்படுவது தடுக்கப்படும். காண்டாமிருக இனமே காப்பாற்றப்படும் என்று சொல்லியிருக்கிறார் பிரபல காண்டாமிருகக் கொம்புகள் விற்பனையாளரான ஜான் ஹியூம் ( John Hume ). 

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை

அகதிகளுக்கு வீடுகளான கூடாரங்கள் :

வார இறுதிகளில் காடுகளுக்கும், பாலைவனங்களுக்கும் செல்லும் தன் நண்பர்களுக்காகத் தானே ஒரு வகையான கூடார வீட்டை ( டெண்ட் - Tent ) வடிவமைத்தார் கிறிஸ்டியன் வெபர். அவர் வடிவமைத்த அந்த கூடார வீடு பெரும் வரவேற்பைப் பெற, கூடாரம் தயாரிக்கும் நிறுவனத்தையே அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார். இன்று அவருக்கு அது பல கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் தொழில். ஆனால், சமீபமாக விடுமுறையைக் கழிக்கப் போகும் பணக்காரர்களைவிடவும், வாழ்வையே கழிக்கும் அகதிகளுக்குத் தான் தன்னுடைய கூடாரம் அதிகம் உதவும் என்பதை உணர்ந்தார். 

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை

தற்போது, தான் விற்கும் 20 கூடாரங்களுக்கு ஒரு கூடாரத்தை அகதிகளுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறார் வெபர். 

இந்தக் கதைகளில் உங்களுக்கு முழங்கால் புரிந்தால் முழங்கால்... மொட்டைத்தலைப் புரிந்தால் மொட்டைத் தலை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்