வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (28/08/2017)

கடைசி தொடர்பு:16:43 (28/08/2017)

உங்கள் குழந்தைகள் தேர்வு எழுதப் போகிறார்களா? இந்த 10 விஷயங்கள் அவசியம் பெற்றோரே #GoodParenting

தேர்வு

ன்றைய குழந்தைகளின் எக்ஸாம் ஃபீவர், பெற்றோரையும் சேர்த்தே தொற்றிக்கொள்கிறது. 'படி படி' எனப் பெற்றோர் படுத்துவதால், குழந்தைகள் அதிகளவில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தேர்வு நேரத்தைக் குழந்தைகள் டென்ஷன் இல்லாமல் கடக்க, பெற்றோர் இந்த 10 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். 

1. குழந்தைகளின் கல்வியாண்டு தொடங்கியதிலிருந்து பலவித டேர்ம் தேர்வுகள் நடக்கிறது. எப்போது எந்தத் தேர்வு வர உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு தேர்வும் எந்த மாதங்களில் நடக்கும் என்பதைப் பட்டியலிட்டு, பார்வையில் படும் இடத்தில் மாட்டிவைக்கலாம். மனம் தானாக தேர்வுக்குத் தயாராகிவிடும். 

2. பள்ளியில் உங்கள் குழந்தைகளின் மனதில் எந்த அளவுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்றி அனுப்புகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த அழுத்தங்களில் இருந்து விடுபடும் வாய்ப்புகள் அவர்களுக்கு அளிக்கப்படுவது அவசியம். வீட்டுச் சூழல் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும். பதற்றத்தை அவர்கள் மனதில் ஏற்றி பயப்படுத்துவதைத் தவிர்க்கவும். 

படிப்பு3. தேர்வுக்குத் தயாராகும் குழந்தையின் குட்டி தம்பி அல்லது குட்டி தங்கையின் குறும்பும் விளையாட்டும் படிக்கும் குழந்தையைப் பாதித்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். 

4. படித்ததை நினைவில் நிறுத்தும் வழிமுறைகளைக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவும். உங்கள் குழந்தைப் பார்த்துப் படிப்பது, கேட்டுப் படிப்பது, எழுதிப் பார்த்துப் படிப்பது இவற்றில் எதில் பலமா இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அந்த வழியில் அவர்களை வழிநடத்துங்கள். எந்த நேரத்தில் எதைப் படிப்பது என்பதற்கான நேரத் திட்டமிடலுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். பழைய கேள்வித்தாள்களை ரிவிஷன் செய்வதும் எழுதப்போகும் தேர்வுக்கு உதவியாக இருக்கும். 

5. படிப்பதற்கு என்று வீட்டில் தனியாக இடம் ஒதுக்கவும். அங்கே வேறு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். 

6. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால், அதற்கான பரிசு வீட்டில் கிடைக்கும் என்ற இனிய நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அடிக்கடி சொல்லி உற்சாகப்படுத்துங்கள். தேர்வுக்குப் படிப்பது, பரிசுக்கான பயணமாக அவர்களை உற்சாகமாகச் செயல்படவைக்கும். 

7. குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம். குழந்தைகளுக்குப் பிடித்த உணவு வகைகளை சமைத்துக் கொடுப்பதில் தயக்கம் வேண்டாம். காய்கள், கீரை வகைகளும் சேர்த்து உணவை சத்துமிக்கதாக மாற்றுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவுகள் அவசியம். அன்பு கலந்த ஆரோக்கியம் உங்கள் குழந்தையின் உடலையும் மனதையும் வலிமைப்படுத்தும். 

குழந்தைகள்

8. மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் பழங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நொறுக்குத்தீனியாக பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கவும். சுண்டல் வகைகள், வீட்டிலேயே செய்த முறுக்கு, வெஜ் சூப் எனச் சுவையாகச் செய்துகொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். 

9. என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும், குழந்தைகளின் கவனம் ஒரு விஷயத்தில் குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டுமே இருக்கும். தொடர்ந்து பல மணி நேரம் படிக்கவைக்காமல், குறிப்பிட்ட இடைவெளி கொடுக்கவும். உடற்பயிற்சியும் போதிய தூக்கமும் மூளையைச் சுறுசுறுப்பாக்கும். அதற்குச் சரியாகப் பழக்கப்படுத்தவும். 

10. தேர்வு வரப்போகிறது என்பதற்காக, எல்லாவற்றையும் நிறுத்தி, கடுமையாக நடந்துகொள்வது சரியல்ல. கொஞ்சம் சினிமா, விளையாட்டு, ஃப்ரெண்ட்ஸ் அரட்டை, அவுட்டிங் என ரிலாக்ஸ் செய்துகொள்ள அனுமதிக்கவும். 

குழந்தைகள் படிக்கும் வீடுகளில் பெற்றோர் இவற்றை நடைமுறைப்படுத்தினால், தேர்வு பயம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்