வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (28/08/2017)

கடைசி தொடர்பு:17:42 (28/08/2017)

10 லட்சம் கடல்பறவைகள்... 1 லட்சம் விலங்குகள்... இவற்றின் உயிரைப்பறிக்கும் அந்த ஒரு விஷயம்..!

தான் இருக்கும் நிலம் மட்டுமே உலகம் என நம்பிக்கொண்டிருந்த மனிதனின் சிந்தனையை விசாலப்படுத்தியது கடல். கண்ணுக்கெட்டாத தூரத்துக்கு பரந்து விரிந்திருந்த கடல்தான், இன்னொருபுறம் கரை இருக்கும் என்ற நம்பிக்கையைத் தந்தது. கலம் ஏறிச்சென்று கண்டங்களைக் கண்டுபிடிக்கும், நாடுகளைத் தேடிச்செல்லும் தைரியத்தை தந்தது. இத்தனை கண்டங்கள், இத்தனை நாடுகள் என இன்று பூமியை நம்மால் முழுமையாக உணர முடிகிறது என்றால் அதற்கு, பெருங்கடல்களின் மீது பேரார்வம் கொண்டு பயணித்த மாலுமிகளும், கேப்டன்களும்தான் காரணம். இப்படி மனிதனுக்கான நிலப்பரப்பை விசாலப்படுத்திய கடல்பரப்பு தற்போது எப்படி இருக்கிறது தெரியுமா? மனிதன் கையால் சிக்கிச்சீரழியும் இந்த நிலப்பரப்பை விடவும் மோசமாக இருக்கிறது கடலின் நிலை. நிலத்தில் இருந்து தப்பிப்பிழைத்து வரும் குப்பைகள், திட்டமிட்டே கொட்டப்படும் கழிவுகள், எந்த ஆறுகளையும் சங்கமிக்க விடாத அளவுக்கான வறட்சி என இயற்கையும், செயற்கையும் மாறிமாறி கடல்வளத்தை சூறையாடிக்கொண்டிருக்கின்றன. 

பிளாஸ்டிக் குப்பைகள்

நிலப்பரப்பில் வாழும் மனிதர்களைப் போலவே, கடலை நம்பி வாழும் மக்களும் உலகில் மிக அதிகம். பூமியின் நிலப்பரப்பில் வாழும் மிருகங்களைப் போலவே கடலைச் சார்ந்து வாழும் உயிரினங்களும் மிக அதிகம். இவை அனைத்துக்கும் தீங்கு செய்வதுபோல் அமைந்திருக்கின்றன மனிதர்களின் செயல்பாடுகள். வருடந்தோறும் கடலுக்கு வரும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு 8 மில்லியன் டன்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதனால் கடலின்சூழல் மாசடைவதுடன் ஒரு மில்லியன் கடல்பறவைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இந்த பிளாஸ்டிக் குப்பைகளால் ஒரு லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் செத்து மடிகின்றன. இத்தனை பெரிய இழப்புகள் நடந்தாலும் கூட இவைகுறித்து பலருக்கும் தெரிவதே இல்லை என்பதுதான் சோகம். இதனால் அரசாங்கங்களும் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இதுதொடர்பாக விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக உலகின் பல்வேறு கடலியல் ஆர்வலர்களும், கடலியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் இதற்காக நடத்தப்படுகின்றன. இந்தியாவிலும் இவை நடைபெறுகின்றன. 

கடல்வாழ் பறவைகள்

ஓஷன் கன்செர்வன்ஸி அமைப்பு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் கடற்கரைகளில் இருக்கும் குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சியையும், கடல் தூய்மை சார்ந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது. இந்தியாவில் Indian Maritime Foundation இந்த அமைப்புடன் கைகோத்து இந்தத் தூய்மைப்பணிகளை முன்னெடுக்கிறது. ஏரி, ஆறு, கடல் என நீர்நிலைகள் அருகே ஒவ்வோர் ஆண்டும் தன்னார்வலர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் அவை வெளியேற்றப்படும். கடந்த 2016-ம் ஆண்டு தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளடக்கிய தென்மண்டல கடற்கரைப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலக அளவில் 8,346 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் தென்மண்டலக் கடற்கரைகளில் மட்டும் சுமார் 45 டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் 16-ம் தேதி காலையில் பழவேற்காடு, எண்ணூர், மெரினா கடற்கரை, லைட் ஹவுஸ், எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கோவளம், பாலாறு, பூம்புகார், காரைக்கால், கீழக்கரை, தூத்துக்குடி, உவரி, கடலூர், தனுஷ்கோடி, திருவள்ளூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, கன்னியாகுமரி உள்பட தென்மண்டலக் கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகள் என மொத்தம் 69 இடங்களில் குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெறவுள்ளன. Indian Maritime Foundation-ஐச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து தன்னார்வலர்கள் இணைந்து இந்த பிரமாண்ட தூய்மைப் பணியை மேற்கொள்கின்றனர். இந்தப் பணியில் மீடியா பார்ட்னராக விகடனும் கைகோத்துள்ளது.

கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணி

பங்கேற்கும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் குப்பைகளைக் கையாள்வதற்கான உபகரணங்கள், குப்பைகளின் தன்மைகேற்ப பிரித்து கையாள்வதற்கான பயிற்சிகள், சேகரிக்கப்படும் குப்பைகளை அளவிடுதல், கடற்கரைகளில் கையாள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என அனைத்துவிதமான பயிற்சிகளும், விழிப்புஉணர்வும் அளிக்கப்பட்டு பின்னரே தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகள் இன்றி இந்தப் பணிகளைச் செய்யமுடியாது. எனவே இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்களாக கலந்துகொண்டு பங்களிக்க இயலாது. மாறாக கடற்கரைகளில் தூய்மைப்பணியில் ஈடுபடும் நண்பர்களுக்கு ஊக்கமளிக்கலாம். 

இதுதவிர இன்னொரு விதமாகவும் நீங்கள் பங்களிக்க முடியும். அந்தப் பங்களிப்பு கடலுக்கு மட்டுமல்ல, மொத்த சமூகத்துக்கும் மிக முக்கியமான தேவையும் கூட. கடைகளுக்குச் செல்லும்போது பிளாஸ்டிக் பை வாங்காமல் இருப்பதில் இருந்து, குப்பைகளை தரம்பிரித்து குப்பைத்தொட்டிகளில் போடுவதில் இருந்து, பிளாஸ்டிக் குப்பைகளை தெரு, கடற்கரை என பொதுவெளிகளில் வீசாமல் இருப்பதில் இருந்தே அந்தப் பங்களிப்பு தொடங்குகிறது. ஆம், கூடிவாழும் இந்தச் சமூக அமைப்பில் தனிமனிதர்களின் பங்களிப்புதான் மிகவும் முக்கியம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்