இனி லைக் போட கூட லைசென்ஸ் தேவை... ஃபேக் ஐடிகளை ஒழிக்கும் சீனா!

கருத்துரிமை என்பது ஜனநாயக நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஆனால், சீனா ஜனநாயக நாடும் இல்லை. அங்கு கருத்துரிமைக்கு அனுமதியும் இல்லை. அரசு அதிகாரிகளின் ஊழல் பற்றி எழுதிய பத்திரிக்கையாளர்கள், அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த நெட்டிசன்கள் அனைவரும் எவ்விதப் பாரபட்சமின்றி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நாட்டுக்கு எதிரானவர் என்றால் எப்பேற்பட்ட மனிதரையும் சிறையில் தள்ளத் தயங்காது அந்நாடு.

கருத்துரிமையின் கழுத்தை நெறிக்கும் சீனா

சீனாவில் இணையம் என்பது அனைவருக்குமானது அல்ல. அங்கு தணிக்கை என்ற பெயரில் இணையதளங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏராளம். ஒவ்வொரு பக்கமும் தணிக்கைக்குப் பின்னரே அங்கு வெளியிடமுடியும். இதை மீறும் இணையதளங்களுக்கு சீனாவில் இடமில்லை. இணையத்தை தணிக்கை செய்யும் அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளை, 'தி கிரேட் ஃபயர்வால் ஆஃப் சீனா' என வெளிநாட்டுப் பத்திரிகைகள் விமர்சனம் செய்துவருகின்றன. சீனாவின் சர்வாதிகாரம் காரணமாக விக்கிப்பீடியா, ஃபேஸ்புக் நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறின. உலகில் அதிக அளவில் பத்திரிகையாளர்கள் மற்றும் இணையவாசிகளைக் கைது செய்த நாடு சீனா தான். இதனால், 'நெட்டிசன்களைப் பொறுத்தவரை சீனா தான் உலகின் மிகப்பெரிய சிறை' என பாரிஸ் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் செய்தியாளர்கள், தலைப்புச் செய்திகளை எழுதினர்.

1989 ஆம் ஆண்டு சீன அரசுக்கு எதிராக தியான்மென் சதுக்கத்தில் மாணவர்களும், தொழிலாளர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, அரசு ராணுவத் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையைக்கூட அந்நாடு வெளியிடவில்லை. தியான்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டங்கள் குறித்து விக்கிபீடியாவில் இருந்த கட்டுரையை நீக்கச்சொல்லி அந்நாடு உத்தரவிட்டது. இதிலிருந்துதான், சீனாவுக்கும் விக்கிபீடியாவுக்குமான மோதல் போக்கு தொடங்கியது. மேலும், “தங்கள் நாட்டைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்ட பின்பே, இணையத்தில் வெளியிடப்பட வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அதன்பின் சீனா விதிக்கத் தொடங்கியது. தற்போது விக்கிபீடியா அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. சீன அரசு தனக்கென ஒரு கலைக்களஞ்சியத்தைத் தற்போது உருவாக்கி வருகிறது.

சீனா

VPN என சுருக்கமாக அழைக்கப்படும் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (Virtual Private Network) மூலம், தடை செய்யப்பட்ட இணையதளங்களையும் அக்சஸ் செய்யமுடியும். சீனாவில் மட்டும் சுமார் 9 கோடிப்பேர் VPN சேவைகளைப் பயன்படுத்தி வந்தனர். சில தினங்களுக்கு முன் VPN சேவைகளையும் சீனா தடைசெய்து உத்தரவிட்டது. இதனால் வெளி உலகத்துக்கான கதவுகள் சீனாவில் அடைபட்டன.

ஃபேஸ்புக், கூகுள் போன்றவை சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளதால், அவற்றிற்குப் பதிலாக சீனத் தயாரிப்புகளான வெய்போ, பாய்டு போன்றவைகளே அங்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தும் மக்களுக்கு மேலும் ஒரு கட்டுப்பாடை விதிக்கவிருக்கிறது சீன அரசு. உண்மையான அடையாளத்துடன் இணைக்கப்பட்ட ஐடிகள் மட்டுமே கமென்ட் செய்யும் வகையில் இணையதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலியான கணக்கில் இருந்து கமென்ட் செய்யமுடியாது என்பதால் வதந்திகளும், போலியான செய்திகளும் வெளியாவதைத் தடுக்க முடியும் என சீன அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டால் அந்நாட்டு மக்களின் கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெறிபடும் என்பதே உண்மை. அரசுக்கெதிரான கருத்தைத் தெரிவிப்பவர்கள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, அரசின் நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுவர். இதைத்தான் அந்நாடு விரும்புகிறது.

எந்தவொரு அரசும், உலகத்தில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பது அவசியம். ஜனநாயகத்தையும், கருத்துரிமையையும் வலியுறுத்திப் போராடிய பேராசிரியர் லீ ஜியோபோ அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது கூட அவரை சிறையிலிருந்து வெளியேற அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தனது 61வது வயதில் காவலில் இருக்கும்போதே இறந்துபோனார். சீனா ஒரு கம்யூனிச நாடு என்பது மருவி, சர்வாதிகார நாடாகவே அந்நாட்டின் அண்மைப்போக்கு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!