வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (28/08/2017)

கடைசி தொடர்பு:21:51 (28/08/2017)

சிறந்த இயக்குநர் மோடி, சிறந்த தயாரிப்பாளர் அமித் ஷா... இது செம கலாய் விருதுகள்!

தமிழகத்தில் இன்றைய தினங்களில் நடந்துவரும் அரசியல் மாற்றங்கள் ஒரு சினிமாவைப் போல் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆஸ்கரை மிஞ்சும் ஆக்டிங், நோலன் படங்களை மிஞ்சும் டிவிஸ்ட்டுகள் என ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, தமிழக அரசியலில் நடந்தவற்றை வைத்து சிலருக்கு விருது கொடுக்கலாம் என்ற ஒரு யோசனை. யார் யாருக்கு என்னென்ன விருது, அண்ட் தி நாமினீஸ் ஆர்.

சிறந்த நடிகர், துணை நடிகர், வில்லன்:

விருது

 

நடிகர் : 'தர்மயுத்தம்' என்று சொல்லி தியான காட்சியுடன் அந்தர் மாஸ் என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்து தன் பேட்டிகள் மூலம் தமிழகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். ஊழல் ஆட்சி என்று சொல்லி அடுத்த 20 நாள்களில் ஈபிஎஸ் அணியுடன் இணைந்த பெருமைக்குரியவர். அதனால், மத்திய தலைமை இயக்கிய இப்படத்தின் சிறந்த நடிகர் ஓ.பி.எஸ் அவர்களே! 

துணை நடிகர் : பன்னீர் அண்ட் பழனிசாமி மேக்ஸ் பெஸ்ட் பேர் என்பது போல் அவருக்குச் சிறந்த நடிகருக்கான விருது என்றால் கட்டாயம் இவருக்குதான் சிறந்த துணை நடிகருக்கான விருதைக் கொடுக்க வேண்டும். யாருக்கு லாபமோ இல்லையோ, இவருக்குதான் ஜாக்பாட் லாபம். சேலத்தில் இருந்தவரை இந்தியாவுக்கு அடையாளம் காட்டிய அந்தத் தருணங்களை நினைத்தாலே இனிக்கும். வழ வழ கொழ கொழவென இழுத்துக்கொண்டிருந்த திரைக்கதைக்கு எண்ட் கார்டு போட்ட பெருமை இவரையே சேரும்.

வில்லன்: இவரது பிக் பாஸ் பெங்களூரில் ஷாப்பிங் வேலையில் பிஸியாக இருப்பதால் இவர்தான் இப்போதைய தலைவர். தன் பக்கம் உள்ள ஆட்களை வைத்து அவ்வப்போது எதிர்பாராத மாஸ் காட்டுவார். இணைந்த கைகள்தான் இவரது டார்கெட். சிரித்துக்கொண்டே வில்லத்தனம் செய்வதில் இவர்தான் சித்தார்த் அபிமன்யூ. இப்படி பல பெருமைகளையுடைய தினகரனுக்கே சிறந்த வில்லனுக்கான விருது போய்ச் சேரும். 

சிறந்த தயாரிப்பாளர், இயக்குநர் :

அமித் ஷா, மோடி

தயாரிப்பாளர் : இயக்குநர் கதை சொல்லிய மறு கணமே 'எப்படியும் படம் ப்ளாக்பஸ்டர். அதனால், படத்தை நானே தயாரிக்கிறேன், நல்லா பண்ணுங்க' என்று ஆதரவு தந்தவர் அமித் ஷா. அவ்வப்போது கதையில் இவரும் என்ட்ரி கொடுத்தார். அதனால் இவருக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருதைக் கொடுக்கலாம்.

இயக்குநர் : இப்படியொரு படைப்பை இயக்கிய பெருமை கண்டிப்பாக மோடிக்குத்தான் போய்ச் சேரும். டீ கடையில் இருந்தவருக்குள் இப்படி ஒரு டெடிகேஷனா என்ற ரகத்தில் தந்திரமான படம் ஒன்றை இயக்கியுள்ளார். பாரம்பர்யம் நிறைந்த தமிழ்நாட்டில் 'இவிங்களுக்கு ஒரு பாயசத்தை போட்டுற வேண்டியதுதான்' என்ற மைண்ட்வாய்ஸில் படம் இயக்கியுள்ளார். இப்படி ஒரு பெருமை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரையே போய்ச் சேரும். ஆதலால், சிறந்த இயக்குநருக்கான விருது மோடிக்கும், சிறந்த தயாரிப்பாளருக்கான விருது அமித் ஷாவுக்கும் போய்ச் சேரும். 

சிறந்த வசனகர்த்தா, பேச்சாளர் : 

சென்கோட்டையன், நாஞ்சில் சம்பத்

வசனகர்த்தா : இவர் வைரலாவதைப் பேசுகிறாரா? இல்லை இவர் பேசுவது வைரலாகிறது என்பது தெரியவில்லை. இவர் துப்பினாலும் வைரல், காத்திருந்தாலும் வைரல். அதனால் இந்த விருது நாமினேஷன் இன்றி சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது நாஞ்சில் சம்பத்தையே போய்ச் சேரும். பேட்டிகளே இல்லாமல் தான் கொடுக்கும் பேட்டி மாஸ் ஹிட் அடிக்கும். அரசியலில் ஆகச் சிறந்த வசனகர்த்தா இவரே. அதனால் விருதும் இவருக்கே.

பேச்சாளர் : விருதுகளுக்கு தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த இவர், ஆங்கிலப் பத்திரிகை கேட்ட கேள்விக்குப் பிறகு வைரல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். ஆம், கேள்விக்கு இவர் சொன்ன 'All members anybody admk peoples madam supporting' பதில்தான் இவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அதுமட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றே இவ்வார்த்தைகளைக் கூறலாம். ஆதலால் சிறந்த பேச்சாளருக்கான விருதை நம் பேச்சுப் புயல் செங்கோட்டையன் தட்டிச் சென்றார். 

சிறந்த தொகுப்பாளர், காஸ்ட்யூம் டிசைனர் :

ஜெயக்குமார், ஸ்டாலின்

தொகுப்பாளர் : இந்த அணி பிரிந்ததில் இருந்து ஒரு அரசியல் திருப்பம் வரப்போகின்றது என்பதை முன்னமே தெரிவித்து லீட் கொடுத்தார். அதை வைத்து என்னல்லாமோ நடக்கப் போகிறது என்பதை உணரலாம். பொதுச் செயலாளர் நீக்கம் குறித்த செய்தியை நமக்குக் கொடுத்தமைக்காகவே ஜெயக்குமாருக்கு சிறந்த தொகுப்பாளருக்கான விருதைக் கொடுக்கலாம். 

காஸ்ட்யூம் டிசைனர் : இவரின் காஸ்ட்யூம்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மாறிக் கொண்டே இருக்கும். இதுதான் இவரது சிறப்பம்சமும் கூட. ஜாகிங் போனால் ஷர்ட் - ட்ராக் பேன்ட், கட்சி வேலை என்று வந்தால் வெள்ளை வேஷ்டி, சட்டை என வெரைட்டி காட்டுவார். 'சண்டையில கிழியாத சட்டை எங்க டூட் இருக்கு?' என்ற வசனத்துக்கு வாழும் உதாரணமான ஸ்டாலினுக்கே இந்த விருது போய்ச் சேர வேண்டும். ஆக.....!  

விருதுகளை வென்றவர்களுக்கு வாழ்த்துகள்!!!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்