Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மார்க் சக்கர்பெர்க் குழந்தையின் பெயருக்குப் பின்னால் இவ்வளவு பெரிய ஆராய்ச்சியா?

ஆகஸ்ட் மார்க் சக்கர்பெர்க்

ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் சக்கர்பெர்க்கிற்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ''ஆகஸ்ட்'' எனப் பெயர் வைத்துள்ளார். ஆகஸ்ட் அவரது இரண்டாவது குழந்தை. ஆகஸ்ட் பிறந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த மார்க், பெயர்க்காரணத்தையும் தெரிவித்தார். ஆகஸ்டஸ் என்ற லத்தின் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது ஆகஸ்ட். இதற்கு மிகுந்த மரியாதைக்கு உரியவர், உச்சங்களைத் தொடுபவர் என்று பொருள்.

ஆகஸ்ட் என்பது இருபாலருக்குமான பொதுவான பெயர். இதில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுகே இந்தப் பெயர் அதிகம் வைக்கப்படுகிறது. 2016ல் இந்தப் பெயர் 2076 ஆண் குழந்தைகளுக்கும், 222 பெண் குழந்தைகளுக்கும் வைக்கப்பட்டுள்ளது.  இதுதான் 2016ல் அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட பெயரிலேயே பிரபலமான பெயராம். எப்போதும் “கனெக்ட்” என்ற வார்த்தையே மந்திரமாக உச்சரித்து வரும் மார்க், தனது குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் விஷயத்திலும் மக்களோடு ‘கனெக்ட்’ ஆகும்படி பார்த்துக்கொண்டிருப்பதுதான் நேற்றைய ஃபேஸ்புக் டாக்.

2வது குழந்தைக்கும் மட்டும் மார்க் இப்படி ஆராய்ச்சி செய்து வைக்கவில்லை. தன் முதல் குழந்தையான மேக்ஸுக்கும் இதே உத்தியை தான் கையாண்டுள்ளார். 2015ன் பிரபலமான பெயரான  மேக்ஸ் என்பதை தன் குழந்தைக்கு சூட்டினார். மேக்ஸிமஸ் என்ற லத்தின் வார்த்தையிலிருந்து பெறப்பட்ட வார்த்தை தான் மேக்ஸ்.

 

 

மார்க் தன் முதல் குழந்தையின் வளரும் வேகத்தை ஃபேஸ்புக்கில் சிலாகித்துக் கொண்டாடியது அனைவரும் அறிந்ததே. தனது இரண்டாவது மகள் பிறந்ததற்காக ஒரு கடிதம் ஒன்றை தன் மனைவி பிரிசில்லாவுடன் சேர்ந்து மார்க் எழுதியுள்ளார்.

டியர் ஆகஸ்ட்,

இந்த உலகிற்கு உன்னை வரவேற்கிறோம். நானும், உன் தாயும் நீ என்ன ஆகப்போகிறாய் என்பதை காண ஆவலாய் இருக்கிறோம்.

உன் சகோதரி பிறந்த போது உனக்கான உலகம் எப்படி இருக்கப்போகிறது என்ற கடிதம் ஒன்றை எழுதினோம். இப்போது அந்த உலகம் வளர்ந்து வருகிறது. நீ காணும் உலகில் நல்ல கல்வி, குறைவான எண்ணிக்கையில் நோய்கள், வளமான சமூகம் மற்றும் சமத்துவம் ஓங்கி இருக்கும். அறிவியல் தொழில்நுட்பத்தில் உள்ள மேம்பாடுகள் குறித்து எழுதியிருந்தோம். உன் தலைமுறை எங்களுடைய தலைமுறையை விட சிறப்பானதாக இருக்கும். அதனை உருவாக்கித் தருவதில் எங்களின் பங்கு அதிகமாக உள்ளது.  இன்றைய தலைப்பு செய்திகள் தவறாக இருந்தாலும், அதனை சரியாக மாற்ற வேண்டியது எங்கள் கடமை. உனது தலைமுறையை செம்மையாக்குவது தான் எங்களது வேலை.

ஆனால், உன் எதிர்காலத்தை பற்றி எழுதுவதை விட உன் குழந்தைப்பருவம் பற்றி பேச வேண்டியது அவசியம். உலகம் தற்போது உள்ள மோசமான சூழலில் நீ வெளியில் சென்று விளையாட சாதகமான சூழல் இப்போது இல்லை. அதனை ஏற்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

நீ வளர்ந்த பின்பு  பிஸியாகி விடுவாய். அதனால் இப்போது நீ பூக்களின் வாசம் நுகர வேண்டும், இலைகளின் பசுமை அறிய வேண்டும். நீ மேக்ஸுடன் சேர்ந்து புத்தகங்களைப் படிக்க வேண்டும், வீட்டின் எல்லாப் பக்கங்களின் தவழ்ந்து விளையாட வேண்டும். மேலும் நீ நிறைய தூங்குவாய் என நினைக்கிறேன். உன் கனவிலும் நாங்கள் உன்னை எவ்வளவு அன்போடு பார்த்துக்கொள்கிறோம் என்பது உனக்கு தோன்றும் என நம்புகிறேன்.

குழந்தைப்பருவம் என்பது அதிசயமானது. ஒருமுறைதான் நமக்கு அது கிடைக்கும். அதனால் எதிர்காலத்தை குறித்து கவலைப்படாமல் குழந்தைப்பருவத்தை அனுபவி. உன் எதிர்காலத்தை நாங்கள் கவனித்து கொள்கிறோம்.  உனக்கு மட்டுமல்லாமல் உன் தலைமுறை குழந்தைகள் அனைவருக்குமான சிறந்த உலகை உருவாக்குவோம்.

ஆகஸ்ட் உன்னை அதிகம் நேசிக்கிறோம். உன்னுடனான ஆச்சர்யங்களுக்குக் காத்திருக்கிறோம். உன் வாழ்க்கை மகிழ்வாக அமைய வாழ்த்துகிறோம். நீ தந்த மகிழ்ச்சியை நாங்கள் உனக்குத் திரும்பத் தருவோம்.

அன்புடன்

அம்மா, அப்பா

இப்படி ஓர் உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார் மார்க். வாழ்த்துக்கள் மார்க்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement