வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (29/08/2017)

கடைசி தொடர்பு:18:30 (15/02/2018)

ஐ.டி. வேலையை உதறி பிசினஸில் சாதிக்கும் இளம் பெண்!

மேகபாரதி

''என்னைப் படிக்க வைக்க முடியாமல் திணறிய அப்பா... கையில் எடுத்த சுயதொழில்... இப்படித் தொடர்ந்து என் வாழ்க்கையில் நான் அடைந்த ஒவ்வொன்றுக்கும் பின்னும் பெரிய போராட்டம் இருக்கு. நல்லபடியாக படித்து, முடித்து என்னையும், என் பெற்றோரையும் அவமானப்படுத்துனவங்க முன்னால நல்லா வாழ்ந்து காட்டணும்னு நினைச்சேன். அதுக்கெல்லாம் நான் நிறைய விலை கொடுக்க வேண்டியிருந்தது'' குரலில் சற்று கலக்கத்துடன் பேசுகிறார் கோவையைச் சேர்ந்த மேகபாரதி. இவர் மேகபாரதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர்.

''எனக்கு இப்போ இருபத்தைந்து வயசுதான் ஆகுது. ஆனா, அதற்குள் எத்தனையோ சோதனைகளைச் சந்திக்க வேண்டியதாயிடுச்சு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவையில்தான். அன்றாடச் செலவுகளை நிவர்த்தி செய்ய தடுமாறும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோரின் ஒரே ஒரு மகள் நான். தன் பிள்ளைக்கு மூன்று வேளை உணவும், நல்ல உடையும், இருக்க இடமும் இருந்தால் மட்டும் போதாது, தகுதியை உயர்த்த நல்லா படிக்க வைக்கணும்னு என் அப்பா நினைச்சார். என்னை அரசுப்பள்ளியில் படிக்க வைச்சப்ப, கடன் வாங்கியாவது  தனியார் பள்ளியில் படிக்க வைக்கச்சொல்லி சொந்தக்காரங்க சொல்லும்போது, "ஏன் அரசுப் பள்ளியில் படிச்சா நல்லா வர முடியாதானு' எதிர் கேள்விக்கேட்டு ஒரு சவாலாவே என்னைப் படிக்க வைச்சார். அவர் சக்திக்கு முடிகிற அளவுக்கு என்னை ஒன்பதாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்துவிட்டார்.' ஹய்யா.. அடுத்த வருஷம் பத்தாம் வகுப்பில் உட்காரப்போகிறோம்' என நான் ஆசையாக காத்திருக்க.. அப்பா குண்டைத்தூக்கிப் போட்டார் 'ஏதோம்மா.. என்னால முடிஞ்சளவுக்கு இவ்வளவுதூரம் உன்னை கொண்டு வந்துட்டேன். இதுக்கு மேல முடியாதும்மா... வீட்லயே இருந்து எதாவது முடியுமானு பாரு'ன்னு சொல்லிட்டார். அன்னிக்கு இரவு முழுக்க எனக்கு தூக்கமே வரல. அழுதுட்டே இருந்தேன். அம்மாதான் என்னை ஆறுதல்படுத்திட்டு இருந்தார். அப்பா மனசிலயும் தன் ஒரே மகளைக் கூட படிக்க வைக்க முடியலயே என்கிற ஆதங்கம் இருந்தது. 'பொண்ணைக் கல்யாணம் கட்டிக் கொடுக்காம, ஏன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு இருக்க'னு என அப்பாவைப் பார்க்கிறவங்க எல்லாம் கேட்க, அப்பாவுக்கு அந்த வார்த்தைகள் வருத்தத்தைத் தந்தாலும், 'என்ன செலவானாலும் சரி, என் பிள்ளையை படிக்க வச்சேத் தீருவேன்' என சில மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் காசைப் புரட்டிட்டுப் போய் தலைமை ஆசிரியர் முன்னாடி நின்னார்.. 'பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்குத் தயாராகிற இந்த நேரத்துல, இடையிலலாம் சேர்த்துக்க முடியாதுங்க. வேற ஸ்கூல் பார்த்துக்கோங்க'னு சொல்லிட்டாங்க. ஸ்கூல்ல சேர முடியலயேனு வருத்தத்தோடு வீட்டுக்குத் திரும்பினோம். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அட்மிஷனுக்காகப் போனேன். அந்த ஸ்கூல்ல சேர்வதற்கு நான் அதுவரை பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டினு பல போட்டிகளில் பரிசு வென்ற சான்றிதழ்களைக் காட்டி 'என்னை எப்படியாவது ஸ்கூல்ல சேர்த்துக்குங்க சார்.. எனக்கு படிக்கணும்னு ஆசை'னு கேட்டேன். அப்படியா, 'அப்போ, குடியரசு தினத்தன்னைக்கு ஒரு பேச்சுப் போட்டி நடத்துறோம். அதுல பேசிக் காட்டு'னு எனக்கு டெஸ்ட் வச்சாங்க. ஆன் தி ஸ்பாட்ல தலைப்பு சொல்லி மூன்று நிமிஷம் மட்டுமே டைமும் கொடுத்தாங்க. ஒரு வாய்ப்பு கிடைச்சா சும்மாவிடுவேனா.. கிட்டத்தட்ட நாற்பத்தைந்து  நிமிடம் அந்தத் தலைப்பையொட்டிப் பேசினேன். அதுவரைக்கும் பெல் அடிக்கவே இல்ல. அவ்வளவு சுவாரஸ்யமா என் பேச்சைக் கேட்டுட்டு இருந்தாங்க. அங்கிருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எல்லோருக்கும் என்னைப் பிடித்துப் போக எனக்கு உடனே அட்மிஷன் கொடுத்துட்டாங்க' என்றவர் அடுத்தடுத்தும் பல சவால்களைச் சந்தித்திருக்கிறார். 

 

''எனக்குத் தெரிஞ்சவங்க மற்றும் நண்பர்கள் எனக்குப் பண உதவி செய்ததால பாலிடெக்னிக், இன்ஜினீயரிங்கில் சேர முடிந்தது. அந்த உதவியைக்கூட நான் கடன் என்கிற கண்டிஷனோடு வாங்கினேன். அந்தக் கடனை  படிச்சுக்கிட்டே, பார்ட் டைமா வேலைப் பார்த்து அடைச்சேன். காலேஜ்லயும் நான் ரொம்பவே ஆக்டிவான பொண்ணு. படிப்பு விஷயமானாலும் சரி, தனித்திறனை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் சரி, முதல் ஆளாக வந்தேன். இந்த மாதிரி திறமைகளால் நான் படிச்சிட்டு இருக்கும்போதே, ஒரு கல்லூரில பார்ட் டைமா விரிவுரையாளராக வேலைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைச்சது. அதே மாதிரி நான் படிச்சு முடிக்கிறதுக்குள்ள நிறைய கம்பெனியில இருந்து ஆஃபர் லெட்டரும் வந்துச்சு. அதில் ஒரு ஐ.டி கம்பெனியைத் தேர்ந்தெடுத்து அந்த வேலையில் சேர்ந்தேன். எப்போ காலேஜ்ல அடியெடுத்து வச்சேனோ அப்பவே ஒரு விஷயத்தைப் மனதுக்குள் பதியம்போட்டுட்டேன். எல்லோரும் திரும்பிப் பார்க்கிற அளவுக்கு 'பிசினஸ் பெண்மணி'யாக வேண்டும். அவ்வப்போது என் நண்பர்களிடமும் இதைப்பற்றி பகிர்ந்திருக்கேன். ஒரு சிலர் அதைப் பாராட்டினாலும், காலேஜ் பீஸூக்கே மத்தவங்க கையை எதிர்பார்த்துட்டு இருக்கிற நீயெல்லாம் எங்கப்போய் பிசினஸ் பெண்மணியாகுறது?' என கிண்டலும் பண்ணாங்க. இவ்வளவு தூரம் கடந்து வந்த நாம் இதுக்காக மனசுவிட்டுடக்கூடாது'னு உறுதியாக இருந்தேன்''. 

''கல்லூரிப் படிப்பு முடிச்சு, என்னதான் ஐ.டி கம்பெனியில் நல்ல சம்பளம் கிடைச்சாலும், இதை நாம படிக்கல, இது நமக்கான இடம் இல்லைங்குறது மனசுல ஓடிட்டே இருந்துச்சு. ஐ.டி கம்பெனியில் வேலைப் பார்த்த அந்த சில வருடங்களுக்குள் கடனையும், வீட்டுப் பிரச்னைகளையும் ஓரளவுக்கு முடிச்சிருந்தேன். அப்படி யோசித்து வேறு இடத்துக்கு மாறலாம் என்கிற நிலைமையிலதான்  'உங்க பொண்ணை மட்டும் தந்தால் போதும்; வேற எதுவுமே வேணாம்னு சொல்லி வீடு தேடி ஒரு மாப்பிள்ளை வர, வீட்டில் எல்லோரும் பேசி, தானாகவே வந்து மாட்டிக்கிட்டவர் தான் என் கணவர் திருமலை வாசன் எனச் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்.

கல்யாணத்துக்குப் பிறகு, கொஞ்ச நாள்லேயே நான் வேலை பார்த்துட்டு இருந்த ஐ.டி கம்பெனியில எனக்கு புரோமோஷன் கிடைச்ச நேரம், எனக்கு சம்பளம் உயரப் போகுதுனு தெரிஞ்ச நேரம், இது வேணாம்னு பிசினஸ் ஆரம்பிக்கிறேனு வேலையைவிட்டு நின்னுட்டேன். என்னோட கணவர் குடும்பமும் நடுத்தரக் குடும்பம்தான். திடீர்னு நான் வேலைய விட்டுட்டு வந்து நின்னப்போ 'ஏன் இப்படி ஒரு முடிவெடுத்த... உனக்கென்ன பைத்தியாமா'னு என் நண்பர்கள் திட்டினாங்க. ஆனால், என் கணவர் எனக்கு உறுதுணையாக இருந்து, 'இத்தனை நாள் எப்படி நம்ம குடும்பத்தைச் சமாளிச்சேனோ, அதேமாதிரி சமாளிச்சுக்கிறேன். உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்'னு தோள் தட்டி ஊக்கப்படுத்தினார்.'' என்றவரின் வாழ்க்கையில் அதற்குப் பிறகுதான் வசந்தம் வீச ஆரம்பித்திருக்கிறது.

''என்னுடைய கணவரிடமோ, என் அப்பாவிடமோ ஒரு ரூபா கூட வாங்காம பிசினஸ் ஆரம்பிக்கணும்னு முடிவுசெய்தேன். அதற்காக, லோகோ டிசைனிங், விளம்பரங்கள், இண்டீரியர், மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என பதினோரு மாதங்கள், ஒரு மாசத்துக்கு ஒரு வேலைனு எனக்கு தெரிந்த வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சேன். அதில் கிடைச்ச வருமானத்த கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு வைச்சேன். அதை வைத்துத்தான் 'மேகபாரதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்கிற கம்பெனிக்கு பெயர் வைத்துப் பதிவுப் பண்ணினேன். இந்தக் கம்பெனிக்கு கீழதான் என்னோட பதினோரு பிசினஸையும் ( லோகோ டிசைனிங், விளம்பரங்கள், இண்டீரியர், மேக் அப் ஆர்ட்டிஸ்ட் ) பண்ணிட்டு இருக்கேன். நாம வேலைக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கோம். நம்மள மாதிரி கஷ்டப்படறவங்களுக்கு நம்மாள முடிந்த வேலைவாய்ப்பைக் கொடுக்கணும்னு அப்பவே நினைச்சேன்.''என்பவரின் கம்பெனியில் தற்போது இருபது பேர் வேலை பார்க்கிறார்கள். இவருக்கு வெளிநாட்டில் இருந்தும் பல ஆர்டர்கள் வருகின்றதாம்.

'வாழ்க்கையில் பெரிய சறுக்கல்கள் வரும்போது அதிலிருந்து எப்படி நிதானமாக நிற்க வேண்டும் என்பதைப் பழகிக் கொண்டால் வெற்றிக்கான வழி ரொம்ப தூரமில்லை. எனக்கு இந்த வேலைதான் வரும், இந்த வேலை நமக்கு வராதுனு எப்பவுமே நினைச்சது இல்ல. ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு விஷயத்துக்கான கற்றலோடுதான் தொடங்குவேன். நான் கடந்து வந்த இந்தப் பாதையில் கற்றுக் கொண்டதைத்தான்.. சோர்ந்து போகும் ஒவ்வொருவரிடமும் எடுத்துக்காட்டாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்க வெற்றிப் பெற தோல்விகள் ரொம்ப முக்கியம்ங்க' என்கிறார் அனுபவம் நிறைந்த வார்த்தைகளில். 

தன்னம்பிக்கை பெண்களின் முயற்சிகள் வெல்லட்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்