உலகத்துல எவ்ளவோ பைக் இருக்கும்போது, ஏன் சார் பல்சர்?! #16YearsOfBajajPulsar

பஜாஜ் பல்ஸர்... ''அனைவரது பட்ஜெட்டுக்கும் ஏற்ற பெர்ஃபாமென்ஸ் பைக் எப்படி இருக்கும்?'' என்ற இளைஞர்களின் கனவுக்கு, இது நிகழ்கால பதிலாக இருந்து வருகிறது. இது ஒரு பிராண்ட் என்பதைத் தாண்டி, ஒரு உணர்வுபூர்வமான பொருளாக மாறியிருக்கிறது என்பதே நிதர்சனம். ஆப்பிள் ஐ-போன் போல, கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னை தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொண்டு வரும் பல்ஸர் பைக்கிற்கு, வயது 16 ! 4 வால்வு - 2 ஸ்பார்க் ப்ளக் இன்ஜின், லிக்விட் கூலிங், மோனோஷாக் சஸ்பென்ஷன், ஏபிஎஸ், ப்ரொஜெக்டர் ஹெட்லைட், பேக்லிட் ஸ்விட்ச், பெரிமீட்டர் ஃப்ரேம் என வாடிக்கையாளர்களுக்குப் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வைத்த பெருமையும், இந்த பைக்கையே சேரும். முதன்முதலாக பெர்ஃபாமென்ஸ் பைக் வாங்க விருப்பப்படுவோரின் முதல் சாய்ஸாக இருந்து வரும் பல்ஸர் பைக், கடந்து வந்த பாதையைச் சற்று திரும்பி பார்ப்போமா?

 

பஜாஜ் பல்ஸர்

 

2000-2001 : பல்ஸர் க்ளாஸிக் -  2 ஸ்ட்ரோக் மற்றும் மைலேஜ் பைக்குகளிலிருந்து விலகி, பவர்ஃபுல் 4 ஸ்ட்ரோக் பைக்குகளுக்காகப் பலரும் ஏங்கிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது முன்பக்க 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன், 150 சிசி மற்றும் 180 சிசி எனும் இரு வேரியன்ட்களில், கட்டுமஸ்தான தோற்றத்துடன் “Definitely Male” என்ற அடைமொழியுடன் களமிறங்கிய பல்ஸர் பைக்கை, மக்கள் ஆரத்தழுவி கொண்டனர்.

 

பஜாஜ்

 

2002-2003 :  பல்ஸர் UG1 - ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்து விலகி, பைலட் லேம்ப்களுடன் கூடிய பிகினி ஃபேரிங்க்குக்கு மாறியது பல்ஸர். பஜாஜின் காப்புரிமை பெற்ற DTS-i தொழில்நுட்பம், முதன்முதலாக அறிமுகமானது இதில்தான்; இதனால் இன்ஜின் முன்பைவிட அதிக பவர் & மைலேஜை வெளிப்படுத்தின. இன்ஜின் கில் ஸ்விட்ச்சையும் கொண்டிருந்தது பல்ஸர். இப்போது விற்பனை செய்யப்படும் ஹார்னெட் 160R பைக்கில் கூட இந்த வசதி இல்லை மக்களே!

 

பல்ஸர்

 

2004-2005: பல்ஸர் UG2 - ஸ்போர்ட்டி பெர்ஃபாமென்ஸ் என்பதைத் தாண்டி, பிரிமியம் அனுபவத்துக்காக பல்ஸர் அப்டேட் ஆனது இந்த காலத்தில்தான்! 17 இன்ச் அலாய் வீல்கள், ஆல் பிளாக் தீம், ExhausTEC இன்ஜின் மற்றும் Nitrox சஸ்பென்ஷன் ஆகியவற்றை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். 180சிசி மாடலில் இருந்த அகலமான டயர்கள், பைக்கிற்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை அளித்தன.

 

bajaj pulsar

 

2006 : பல்ஸர் UG3 - இந்த மாடலில்தான், பல்ஸர் வரலாற்றில் அதிகப்படியான மாற்றங்கள் நிகழ்ந்தன; இதில் இருக்கும் பல விஷயங்கள், இன்றும் கூட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதை வைத்தே, இது எப்படி மாடர்ன்னாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. டிஜிட்டல் மீட்டர், பேக்லிட் ஸ்விட்ச், பார்க்கிங் லைட், செல்ஃப் கேன்சலிங் கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர்கள், ரெட் லைன் வார்னிங் லைட் போன்ற அதிகப்படியான வசதிகளுடன், அமூல் பேபி போல கொழுக் மொழுக் என இருந்த பைக்கின் தோற்றத்தையும், ஷார்ப்பாக மாற்றியது பஜாஜ். 

 

bajaj

 

2007-2008 : பல்ஸர் 200 & பல்ஸர் 220 - போட்டியாளர்கள் 180சிசி பல்ஸரையே விநோதப் பொருளாகப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், பவர்ஃபுல்லான 200சிசி நேக்கட் மற்றும் 220சிசி செமி ஃபேரிங் பைக்குகளை அசத்தலாக அறிமுகப்படுத்தியது பஜாஜ். 200சிசி மாடலில் ஆயில் கூலர்; 220சிசியில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் என இன்ஜின் தொழில்நுட்பத்திலும் எகிறியடித்தது பஜாஜ். ஸ்ப்ளிட் சீட், பின்பக்க டிஸ்க் பிரேக், ப்ரொஜெக்டர் ஹெட்லைட், ட்யுப்லெஸ் டயர் என வசதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 

 

pulsar

 

2009 : பல்ஸர் UG4 - 200சிசி மாடலின் தயாரிப்பு நிறுத்தப்பட்டதால், அதிலிருந்த வசதிகள் அப்படியே 180சிசி மாடலுக்கு இடம்பெயர்ந்தன. கூடவே இன்ஜினின் பவரும் அதிகரிக்கப்பட்டது. க்ளிப் ஆன் ஹேண்டில்பார், DC லைட்டிங் எனப் புதிய சிறப்பம்சங்களும் சேர்ந்தன. இதுதவிர ''பேபி பல்ஸர்'' என பைக் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பல்ஸர் 135LS பைக், இந்தாண்டில்தான் வெளியானது. 4 வால்வு - 2 ஸ்பார்க் பிளக் காம்பினேஷனில் வெளிவந்த முதல் இந்திய பைக் என்ற பெயர் பெற்ற இதன் தோற்றம் மற்றும் எடை, அதன் Light Sports பெயருக்கு ஏற்ப அமைந்திருந்தது. ''The Fastest Indian'' என்ற அடைமொழியுடன், கார்புரேட்டர் கொண்ட 220சிசி இன்ஜினுடன் வெளியானது. 

 

220s

 

2010 : பல்ஸர் 220S - தனது 220F மாடலில் இருந்த செமி ஃபேரிங்கை நீக்கிவிட்டு, நேக்கட் டிசைனுடன் களமிறங்கியது பல்ஸர் 220S. இதனால் எடை குறைந்தது என்பதுடன், அது பைக்கின் கையாளுமையிலும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது எனலாம்.

 

200ns

 

2012 : பல்ஸர் 200NS - அப்பாச்சி RTR 160 Hyper Edge & RTR 180 ஏபிஎஸ், ஹோண்டா டேஸ்லர் & ட்ரிகர், யமஹா FZ-16 & பேஸர் எனப் பெர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்ட்டில் அதிகரித்துக் கொண்டிருந்த போட்டியை எதிர்கொள்ள, ''i had some other ideas'' என தோனி பாணியில், மாற்றி யோசித்தது பஜாஜ். அதன் விளைவாகத் தயாரானதுதான் பல்ஸர் 200NS. அடுத்த தலைமுறை பல்ஸர் பைக்காகப் பிரகடனப்படுத்தப்பட்ட இதில் லிக்விட் கூல்டு இன்ஜின், 3 ஸ்பார்க் பிளக், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பெரிமீட்டர் ஃப்ரேம் என பல்ஸர் வரலாற்றில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, போட்டியாளர்களுக்கும் தனக்குமான முன்னிலையை அதிகரித்துக் கொண்டது பஜாஜ். இதனுடன் மற்ற பல்ஸர் பைக்குகளின் கலர் ஆப்ஷன்களும் அப்டேட் செய்யப்பட்டன.

 

rs200

 

2015 : பல்ஸர் RS200 & AS 150/200 - எப்படி பல்ஸர் 150/180/200 பைக்கிலிருந்து 220சிசி மாடல் உருவானதோ, அதே பாணியில் பல்ஸர் 200NS பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் AS 150 மற்றும் AS200 பைக்குகள்; LED பொசிஷன் லைட், செமி ஃபேரிங், ப்ரொஜெக்டர் ஹெட்லைட் என இவை கெத்து காட்டின. யமஹா R15, ஹோண்டா CBR 150R, கரிஸ்மா ZMR எனத் தொடர்ச்சியாக ஃபுல் ஃபேரிங் கொண்ட பைக்குகள் வெளிவந்த நிலையில், பல்ஸரின் அடுத்தகட்ட பாய்ச்சல் வெளிவந்தது. RS200 எனும் அந்த பைக்கில் ஏபிஎஸ், LED பொசிஷன் லைட், ஃபுல் ஃபேரிங், டூயல் ப்ரொஜெக்டர் ஹெட்லைட், LED இண்டிகேட்டர் ஆகியவற்றுடன், வேகமான பல்ஸர் பைக் என்ற பெருமையை, இது இப்போதும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 

 

ns160

 

2017: பல்ஸர் NS160 - 150சிசி செக்மென்ட்டின் மன்னனாக பல்ஸர் 150 பைக் இருந்து வந்தாலும், சுஸூகி ஜிக்ஸர் - யமஹா FZ-S V2.0 - ஹோண்டா ஹார்னெட் என போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, அது மிகவும் பின்தங்கியிருந்தது. அத்தகைய மாடர்ன் பைக்குகளை எதிர்கொள்ளும் விதமாக, ஆயில் கூலருடன் கூடிய NS160 பைக்கைக் களமிறக்கி உள்ளது பஜாஜ். இது இந்தாண்டில் மறுஅறிமுகமான NS200 பைக்கின் மினி வெர்ஷனாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. BS-IV இன்ஜின், AHO ஆகியவை இடம்பெற்றதும் இந்தாண்டில்தான்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!