காட்டு யானையின் கோபம் தெரியாமல் ’செல்ஃபி' எடுக்கும் சுற்றுலாப்பயணிகள்..! | Tourists playing with wild elephant without knowing the danger

வெளியிடப்பட்ட நேரம்: 21:36 (30/08/2017)

கடைசி தொடர்பு:21:53 (30/08/2017)

காட்டு யானையின் கோபம் தெரியாமல் ’செல்ஃபி' எடுக்கும் சுற்றுலாப்பயணிகள்..!

கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுற்றுலாவுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்க்கு வருமானம் கிடைத்துக்கொண்டிருக்கும் சிறந்த சுற்றுலாத்தலம் மூணாறு. நீங்கள் அங்கு ஒரு முறை சென்றிருந்தால் பசுமை கொஞ்சும் ’மாட்டுப்பட்டி’ என்ற இடத்தை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அதென்ன மாட்டுப்பட்டி?

இந்தோ – ஸ்விஸ் கூட்டுமுயற்சியில் மூணாறு அருகில் இருக்கும் மாட்டுப்பட்டி என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் மாட்டுப்பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கே, பல லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமல்லாமல், பல்வேறு இன காளைகளில் இருந்து விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. பண்ணையில் இருக்கும் மாடுகளுக்காகவே மாட்டுப்பட்டி அணை அருகில் பல ஏக்கர் பரப்பளவில் புற்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த புல் வெளிகளில் சில திரைப்படங்களும் படமாக்கப்பட்டுள்ளது. (கேட்டால், இந்த புல்வெளி ஸ்விச்சர்லாந்தில் உள்ளது என்று புருடா விடுவார்கள்…) கண்ணுக்கெட்டிய தூரம் வரை புற்களாக காட்சியளிக்கும் இந்தப் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் படையெடுத்து வந்து புற்களை சாப்பிடுவது வழக்கம். வளமான புற்களால் ஈர்க்கப்படும் காட்டு யானைகள் சில நாள்கள் வரை அங்கேயே முகாமிட்டு புற்களை சாப்பிட்டுச்செல்லும்.

யானை

ஆபத்தான பகுதியாக மாறும் மாட்டுப்பட்டி:

மூணாரில் நீங்கள் எங்கு யானையை பார்க்கிறீர்களோ இல்லையோ மாட்டுப்பட்டி புல்வெளியில் நிச்சயம் பார்க்கலாம். இதனால், மாட்டுப்பட்டிக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமானது. மிக முக்கிய சுற்றுலா இடமாக மாறியுள்ள மாட்டுப்பட்டி, மிக ஆபத்தான பகுதியாகவும் மாறிவருகிறது என்கின்றன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர், ”புற்களுக்காக வரும் யானைகளை அருகில் பார்க்கும் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைகிறார்கள். அந்த உற்சாகத்தில் யானைகளின் அருகில் செல்கிறார்கள். செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். அது காட்டு யானை என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதில்லை. மேலும், அது புற்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அதன் அருகில் சென்று தொந்தரவு செய்கிறார்கள். இதனால் ஆத்திரமடையும் யானைகள் சுற்றுலாப்பயணிகளை விரட்டுகிறது. ரோட்டுக்கு வரும் யானைகள் அந்த கோபத்தில் வாகனங்களை சேதப்படுத்துகிறது. பல முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், மூணாறு – வட்டடை இடையே பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியுள்ளது. காட்டுயானையின் கோபம் தெரியாமல் அதனோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாப்பயணிகள். இது ஆபத்தானது என்பதை அவர்களுக்கு கேரள வனத்துறை உணர்த்த வேண்டும். மாட்டுப்பட்டிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். யானைகளை பார்ப்பதை முறைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட துரத்திலேயே சுற்றுலாப்பயணிகளை நிறுத்திவிட வேண்டும்’’ என்றார் ஆதங்கத்தோடு.

யானை

செல்ஃபி எடுத்தால் தண்டனை:

வன விலங்குகளின் இடத்துக்குச் சென்று அதன் வாழ்வியலையும், அதன் அமைதியையும் சீர்குலைக்கு நோக்கோடு நாம் செய்யும் செயல் தண்டனைக்குறிய குற்றம். பிணையில் வெளிவர முடியாத வனச்சட்டப் பிரிவுகளில் சிறையில் அடைக்க முடியும். அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் காட்டுயானைக்கு அருகில் சென்று அதனோடு செல்ஃபி எடுத்துக்கொள்வது, ”செல்ஃபி எடுக்கிறேன்… இங்க கொஞ்சம் பாரு…” என்று யானைக்கு கட்டளை போடுவது. இதெல்லாம் தண்டனைக்குரிய குற்றம் என்பதை இனியாவது உணர வேண்டும். தமிழகத்தின் ஊட்டிப் பகுதியில் காட்டுமாடுகள் உலாவருவது அதிகம். காட்டுமாடுகளை பார்த்தவுடன் உற்சாகமடையும் சுற்றுலாப்பயணிகள் அதனோடு செல்ஃபி எடுத்துக்கொள்வது அதிகரித்தது. அதனால் விபத்துகள் நடந்தவுடன், விழித்துக்கொண்ட தமிழக வனத்துறை ஊட்டி பகுதியில் வன விலங்குகளுடன் செல்ஃபி எடுக்கத் தடை வித்தது. (ஊட்டி வித் பைசன் என்று பேஸ்புக்கில் செல்ஃபி போட்டுவிடாதீர்கள். அரஸ்ட் கன்பார்ம்.!) இதுபோன்று தமிழகத்தின் பல இடங்களில் வன விலங்குகளுடன் செல்ஃபி எடுக்கத் தடை இருக்கும் சூழலில், கேரள வனத்துறை மாட்டுப்பட்டி விவகாரத்தில் அமைதிகாப்பது ஏன்? ஒரு வேளை வருமானம் பாதிக்கப்படும் என்று யோசிக்கிறதோ என்னவோ..!


டிரெண்டிங் @ விகடன்