Published:Updated:

வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கரபதி கோட்டை மீது முதல்வரின் பார்வை படுமா?

வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கரபதி கோட்டை மீது முதல்வரின் பார்வை படுமா?
வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கரபதி கோட்டை மீது முதல்வரின் பார்வை படுமா?

வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கரபதி கோட்டை மீது முதல்வரின் பார்வை படுமா?

110-வது  விதியின் கீழ் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி விட்டோம் என்று  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். ஆனால், அப்படி அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் அந்த அறிவிப்போடு நிற்கின்றன என்று குமுறுகிறார்கள் மக்கள். குறிப்பாக சிவகங்கை மக்கள்.  

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் வழியில் முட்புதர்களால் சூழப்பட்டு நாதியற்று கிடக்கிறது சங்கரபதி கோட்டை.  இந்தக் கோட்டையை சுற்றுலாத்தளமாக அறிவிக்க வேண்டும் என்று அப்போதைய மானாமதுரை தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டசபையில் கோரிக்கை வைத்தார். முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் சுற்றுலா தளமாக அறிவித்து, 3 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார். அந்த அறிவிப்பு அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அது பற்றி வாய் திறக்கவே மறுக்கிறார். 

சங்கரபதி கோட்டைக்கு அவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது. அது குறித்து விரிவாகப் பேசுகிறார் அக்கோட்டையை சுத்தம் செய்து பராமரித்து வரும், மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்.

16-ம் நூற்றாண்டை சேர்ந்தது சங்கரபதி கோட்டை. இராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கு மிகவும் விருப்பமான இடமாக இது இருந்தது.

 தொண்டியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர்  200 குதிரைகளைப் பரிசாக கொடுத்தார். அந்த குதிரைகளை பராமரிக்க திறமையான ஆள் தேடினார் சேதுபதி. பெரும்பாலும் திறமையான குதிரைப் படைகளை வைத்திருந்தவர்கள் இஸ்லாமிய மன்னர்கள்தான். ஏற்கெனவே சிவகங்கை சமஸ்தானத்தோடு ஹைதர் அலிக்கு தொடர்பு உண்டு. இந்த குதிரைகளை பராமரிக்க ஹைதர் அலியிடம் உதவிக்கு ஆள் கேட்டார். ஹைதர் அலி, தன் தளபதியையே அனுப்பி வைத்தார். அந்தத் தளபதிதான் சங்கரபதி. இவர், தீரமிக்க மனிதர். யானைப்படை, குதிரைப்படைகளில் தேர்ச்சி பெற்றவர். உருது மற்றும் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்தவர். சங்கரபதி இந்தக் கோட்டையில் தங்கியிருந்து குதிரைகளுக்குப் போர்பயிற்சி அளித்தார். அதனால் இது சங்கரபதி கோட்டை என்று ஆனது. 

மன்னர் சேதுபதி தன்னுடைய மகளான வேலுநாச்சியாருக்கு அனைத்து விதமான போர் பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்து,  சிவகங்கை சமஸ்தான மன்னர் முத்துவடுகநாதருக்கு மணம் முடித்துக் கொடுத்து,  தனது விருப்பத்துக்குரிய சங்கரபதியைக் கோட்டையை சீதனமாகக் கொடுத்தார். வேலுநாச்சியாரின் படை தளபதிகளாக சின்னமருதுவும், பெரியமருதுவும் இருந்தார்கள். வெள்ளைக்காரனுக்கு அடிபணியாத மன்னராக ஹைதர் அலி இருந்ததால் வேலுநாச்சியாரும் ஹைதர் அலியும் இணைந்து  வெள்ளைக்காரர்களைத் தாக்க திட்டமிட்டார்கள். அந்த சமயத்தில் வேலுநாச்சியார் அரண்மனையில் பணிப்பெண்ணாக இருந்த குயிலி வெள்ளைக்கார்களின் ஆயுதக்கிடங்கை அழிக்க முன்வந்தார். அதன்படியே உடம்பில் எண்ணையைத் தடவிக்கொண்டு வெள்ளைக்காரர்களின் ஆயுதக்கிடங்கில் குதித்து ஆயதங்களையும் அழித்து தன்னையும் அழித்துக்கொண்டார் குயிலி. அந்த வகையில், முதல் பெண் தற்கொலை போராளி என்று குயிலியைக் குறிப்பிடலாம்.  வெள்ளைக்காரர்களுடனான போருக்காக, வேலுநாச்சியார் படையும் ஹைதர் அலி படையும் போர் பயிற்சி பெற்றது, சங்கரபதி கோட்டையில்தான். இந்தக் கோட்டையில் இருந்து காளையார் கோவில் பகுதியில் உள்ள காளீஸ்வரர் கோயில்,  திருமயம் கோட்டை ஆகிய இடங்களுக்கு சுரங்கப்பாதைகள் உண்டு. இந்த கோட்டையின் முகப்பை வெள்ளையர்கள் பீரங்கியால் தகர்த்து விட்டார்கள்.

இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கோட்டை காட்டுக்குள் புதைந்து கிடந்தது. வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை  நிர்வாகத்தில் இருக்கும் இந்தக் கோட்டையை மீட்டு சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் அறிவித்தார். ஆனால் அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள். இதன் நிலை குறித்து தகவல் உரிமைச் சட்டப்படி தகவல் கேட்டோம். முழு பூசணிக்காயை சோற்றில்  மறைப்பதைப் போல் அப்படியொரு அறிவிப்பே வெளியிடப்படவில்லை என்கிறார்கள் அதிகாரிகள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சங்கரபதி சுற்றுலாதலமாக மாற்றி கோட்டையைப் புதுப்பித்து வரலாற்றை மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்த்திட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு