வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (31/08/2017)

கடைசி தொடர்பு:09:43 (06/09/2017)

ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் இல்லையெனில் என்ன செய்யலாம்? தமிழகத்தில் டிஜி லாக்கர் செல்லுமா?

அ.தி.மு.க-வுக்குப் பிறகு போக்குவரத்துத் துறையில்தான் இப்போது பிரேக்கிங் நியூஸ் வந்துகொண்டே இருக்கின்றன. `ஹெல்மெட்டோடு ரசீதையும் காட்ட வேண்டும். பெட்ரோல் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம். லைசென்ஸ் இருந்தால்தான் கார்/பைக் வாங்க முடியும்!’ - இப்படி அதிரிபுதிரி நியூஸ்களுக்குப் பஞ்சமே இல்லை. அதில் லேட்டஸ்ட் ஹாட் பிரேக்கிங் நியூஸ் இதுதான்... ‘நாளை முதல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸையும் போலீஸார் கேட்கும்போது காண்பிக்க வேண்டும்! இல்லையென்றால், 500 ரூபாய் அபராதம்... சிறை!'

லைசென்ஸ்ஏன் இந்தக் கடுமையான விதிமுறை? இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், `தமிழ்நாட்டில் விபத்துகள் அதிகமாகிவருகின்றன. இதற்கு வாகன ஓட்டுநர்களின் முறையற்ற ஓட்டுதல் திறனே காரணம்' என்பதுதான். 

``லைசென்ஸ் வெச்சிருக்கீங்களா?’’ என்று வாகன ஓட்டிகள் சிலரிடம் கேட்டோம். பொங்கிவிட்டார்கள் பொதுமக்கள்.

``பைக் ஓட்டும்போது ஒரிஜினலையுமா தூக்கிக்கிட்டே திரிய முடியும். இதெல்லாம் வேலைக்கு ஆகாது!’’ என்றார் சென்னையைச் சேர்ந்த ஒருவர்.

``நான் லைசென்ஸ் எடுத்து 10 வருஷம் ஆகுது. இப்போ அது எங்கே இருக்குனே தெரியலை! இதெல்லாம் எதுக்கு?’’ என்றார் கோவையைச் சேர்ந்த பொன்னுமணி.

``ஏங்க... விபத்துக்குக் காரணம் நல்லா ஓட்டத் தெரியாத ரைடர்ஸ்ங்கிறது உண்மைதான். அதுக்கு டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் நடைமுறையைக் கடுமையாக்குங்க. அதை விட்டுட்டு இது எதுக்கு?’’ என்றார் அரவிந்த் என்கிற பைக் ரைடர்.

நாம் விசாரித்ததில் நிறையபேருக்கு தங்களின் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் எங்கே இருக்கிறது என்பதே தெரியவில்லை. `தொலைத்தவர்கள் பாதி; மறந்தவர்கள் மீதி’ என்ற நிலையில் இருக்கும் மக்கள் என்ன செய்வார்கள்? 

அப்படியென்றால், திரும்பவும் ஒரிஜினலுக்கு அப்ளை செய்ய வேண்டுமா?

உங்கள் பகுதி காவல் நிலையத்தில், உங்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டதாக ஒரு புகார் எழுதிக் கொடுத்து, `CSR’ எனப்படும் நகலை வாங்கிக்கொள்ள வேண்டும். அதையும் உங்களின் ஜெராக்ஸ் லைசென்ஸையும் இணைத்து உங்கள் ஏரியா RTO அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். திரும்பவும் புகைப்படம் எடுத்து ஒரிஜினல் லைசென்ஸ் உங்கள் கைக்குக் கிடைக்க ஒரு வாரமாவது ஆகும். வழக்கம்போல் டிரைவிங் பள்ளிகள் மூலம் போனால் 500 முதல் 1,000 ரூபாய் வரை செலவாகும். பணம் செலவழித்தாலும் அலைச்சல் கேரன்ட்டி.

இதற்கு டிஜிட்டலாக இன்னொரு ஆப்ஷனும் உண்டு. DigiLocker என்றொரு ஆப். இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் நோக்கில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அப்ளிகேஷனை, இப்போது மக்களோடு சேர்ந்து தமிழக அரசாங்கமும் மறந்தேபோய்விட்டது. இந்த ஆப்பை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து, உங்கள் ஒரிஜினல் லைசென்ஸ் முதல் ஆதார் கார்டு வரை எல்லாவற்றையும் அப்லோடு செய்துகொண்டும் காண்பிக்கலாம் என்றொரு விதிமுறையும் இருக்கிறது. `இதுவும் வேலைக்கு ஆகாது’ என வெளிமாநிலங்களில் ஸ்மார்ட் லைசென்ஸே வந்துவிட்டது. 4G, 5G என இந்தியாவே டிஜிட்டலாகிவிட்ட நிலையில், இன்னமும் ஒரிஜினல் லைசென்ஸைக் காட்ட வேண்டும் எனச் சொல்வது போக்குவரத்துத் துறை இன்னும் வளர வேண்டுமோ என நினைக்கத் தோன்றுகிறது.

இதுபற்றி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். ஆனால், இந்த நடைமுறை பற்றி அவர்களுக்கே புரிதல் இல்லை. எனவே, டிஜி லாக்கரையும் நம்ப வேண்டாம். 

ஓட்டுநர் உரிமத்தின் எண், ஒருவரின் அடையாளம்தான். ஆனால், இதில் ஒரிஜினலுக்கு என்ன தேவை? விபத்துகள் ஏற்படாமல் இருக்க, முறையாக வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு முறையான லைசென்ஸ் வாங்கியிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளைத் தாண்டி ஒரிஜினல் லைசென்ஸோடுதான் பயணிக்க வேண்டும் என்பது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் விஷயம். இதில் மொட்டைத்தலையும் புரியவில்லை; முழங்காலும் புரியவில்லை என்பதுதான் உண்மை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்