Published:Updated:

கலாமின் கனவை நிறைவேற்ற 50 கோடி கலாம்கள் உருவாக வேண்டும் - கிரண்பேடி உருக்கம்

கலாமின் கனவை நிறைவேற்ற 50 கோடி கலாம்கள் உருவாக வேண்டும் - கிரண்பேடி உருக்கம்
கலாமின் கனவை நிறைவேற்ற 50 கோடி கலாம்கள் உருவாக வேண்டும் - கிரண்பேடி உருக்கம்

கலாமின் கனவை நிறைவேற்ற 50 கோடி கலாம்கள் உருவாக வேண்டும் - கிரண்பேடி உருக்கம்

அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற, 50 கோடி கலாம்கள் உருவாக வேண்டும் என புதுச்சேரி மாநிலத் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். 


புதுச்சேரி மாநிலத் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, வியாழக்கிழமை இரவு ராமேஸ்வரம் வந்திருந்தார். ராமேஸ்வரம் வரும் வழியில், பேய்க்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் நினைவிடத்துக்குச் சென்றார். கலாமின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அங்கு அமைந்துள்ள கலாமின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார். கலாம் சில்லாங் சென்றிருந்தபோது, கடைசியாகப் பயன்படுத்திய பொருள்களை நெடு நேரமாகப் பார்வையிட்ட கிரண்பேடி, கலாம் கடைசியாக மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரையினை முழுவதுமாகப் படித்துப் பார்த்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, ''நாட்டின் வளர்ச்சிக்காகத் தன்னலம் பாராது தனது இறுதிநாள் வரை உழைத்தவர், டாக்டர் கலாம். மிக உயர்ந்த பதவியிலிருந்தபோது மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், டெல்லி திகார் சிறையில் உள்ள சிறைவாசிகளின் குழுந்தைகளுக்குக் கல்வி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையைத் திறந்துவைக்க வருமாறு கலாமை அழைக்கச் சென்றிருந்தோம். மிகவும் எளிமையான முறையில் விடுக்கப்பட்ட எங்கள் அழைப்பை ஏற்று, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. அதே நாளில், டாக்டர் கலாமின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தியது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.


நாட்டின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு வாழ்ந்த கலாம், நவீன இந்தியாவை உருவாக்குவதையே தனது கனவாகக் கொண்டிருந்தார். அவரது கனவை நிறைவேற்ற, கலாமைப் போல 50 கோடி கலாம்கள் நாட்டில் உருவாக வேண்டும். அதற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், இந்த நினைவிடம் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த நாள்களில், எல்லோரும் இலகுவாக வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்துக்கு, நாட்டின் அனைத்து மாணவர்களும், இளைஞர்களும் வந்துசெல்ல வேண்டும்'' என்றார்.
முன்னதாக, கலாம் நினைவிடத்துக்கு வருகைதந்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை, மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, கோட்டாட்சியர் பேபி, கலாம் நினைவகப் பொறுப்பாளர் ஜோசப், கலாமின் பேரன் சலீம் ஆகியோர் வரவேற்றனர். கிரண்பேடி வருகையை முன்னிட்டு, கலாம் நினைவிடத்தில் ராமேஸ்வரம் டி.எஸ்.பி மகேஷ் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு