“சேலை கட்டிக்கொண்டு 100 கி.மீ பயிற்சி செய்தேன்!” - மாரத்தானில் சாதித்த ஜெயந்தி சம்பத்குமார் | Meet Jayanthi Sampathkumar who wore saree for a full marathon

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (02/09/2017)

கடைசி தொடர்பு:15:33 (02/09/2017)

“சேலை கட்டிக்கொண்டு 100 கி.மீ பயிற்சி செய்தேன்!” - மாரத்தானில் சாதித்த ஜெயந்தி சம்பத்குமார்

ஜெயந்தி

அந்த மாரத்தான் பந்தயத்தில் பலரும் உத்வேகத்துடனும் உற்சாகமாகவும் ஓடிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் தனித்துவமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர்தான் ஜெயந்தி சம்பத்குமார். முதன்முறையாக புடவை கட்டிக்கொண்டு மாரத்தானில் கலந்துகொண்ட பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த மாரத்தான் பந்தயத்தில், மடிசார் கட்டியபடி கிட்டத்தட்ட 42 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்திருக்கும் அவரை அலைபேசியில் தொடர்புகொண்டோம். 

''ஹைதராபாத்தில் வசித்தாலும் என் சொந்த ஊர் சென்னைதான். இந்தியாவுல ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேகமாகக் கிடைக்கிற புடவைகளை வாங்கி வெச்சிருக்கேன். ஆனா, வேலை காரணமா அதிகம் உடுத்த முடியுறதில்லை. ஒரு நாள் என் கணவர், 'நீ வாங்குற சேலையை எல்லாம் கபோர்ட்தான் கட்டிக்குது'னு கிண்டலா சொன்னார். அது உண்மையும்கூடனு தோணுச்சு. அதுல இருந்து, தினமும் ஆபீஸுக்கு புடவை கட்டிட்டுப் போறதுனு முடிவெடுத்தேன். 

எனக்கு எப்பவுமே கைத்தறிப் புடவைகள்னா ரொம்பப் பிடிக்கும். அந்தப் புடவைகளுக்குப் பின்னாடி இருக்கிற நெசவாளர்களோட உழைப்பு யாருக்கும் தெரியாது. அந்தப் புடவைகளோட முக்கியத்துவத்தை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கணும்னு நினைச்சேன். நான் 10 வருஷமா ஓட்டப் பந்தயங்களிலும், ஒரு வருஷமா மாரத்தான் பந்தயத்திலும் கலந்துக்கிட்டு வர்றேன். 'சரி புடவை கட்டிட்டு மாரத்தான் ஓடுவோம்... அது கைத்தறி புடவைக்கான ஒரு வெளிச்சமா அமையும்'னு நினைச்சேன்'' என்ற ஜெயந்தி, அதற்கு மடிசார் ஸ்டைலைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைச் சொன்னார். 

ஜெயந்தி“எங்க அம்மா, எங்க பாட்டியெல்லாம் மடிசார் கட்டிட்டுதான் எல்லா வேலைகளையும் பார்ப்பாங்க. ஆனா, புடவை கட்டிட்டு அதைப் பண்ண முடியாது, இதைப் பண்ண முடியாதுனு இப்போ ஒரு பிம்பம் இருக்கு இல்லையா... அதை உடைக்கணும்னு நினைச்சேன். புடவை கட்டிட்டு மாரத்தான் போட்டியில கலந்துக்க முடிவு செய்ததும், என்ன ஸ்டைலில் கட்டலாம்னு யோசிச்சேன். ஆந்திரா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடுனு ஒவ்வொரு ஸ்டைலிலும் புடவை கட்டிப்பார்த்து மாரத்தான் போட்டிக்குப் பயிற்சி எடுத்தேன். அவற்றில் மடிசார் ஸ்டைல் ஓடுறதுக்கு வசதியா இருந்தது. 

தினமும் காலை 5 மணிக்கு புடவை கட்டிட்டு மாரத்தான் ப்ராக்டீஸை ஆரம்பிப்பேன். ஏப்ரல் மாசத்துல இருந்து கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர்வரை  மாரத்தான் பயிற்சி  பண்ணியிருப்பேன். அதுக்கு ஒத்துழைப்பா இருந்த என் பெற்றோருக்கும் கணவருக்கும் நன்றி சொல்லணும். காலையில் நான் பயிற்சிக்குப் போயிடுவேன் என்பதால், வீட்டு வேலை, பசங்களை ஸ்கூலுக்குக் கிளப்பி அனுப்புறதுனு அவங்கதான் எல்லாம் பார்த்துக்கிட்டாங்க. 

மாரத்தான் போட்டில கலந்துக்க மற்றோரு முக்கியமான விஷயம், காலணிகள். முதல்ல நான் வெறுங்கால்ல கலந்துக்கலாம் என்ற ஐடியாவிலதான் இருந்தேன். ஆனா, அப்படி முயற்சி பண்ணும்போது, கல், முட்கள், பள்ளம்னு கால்ல காயங்கள் ஏற்பட ஆரம்பிச்சது.  அதனால், ஷூ போட்டுறதை தவிர்த்திட்டு, சாதாரணமா செருப்பு போட்டு கலந்துக்கிட்டேன்.

போட்டியன்று புடவையோட நான் ஓடினப்போ, நான் எதிர்பார்த்த மாதிரியே பலரும் கவனிச்சுப் பார்த்தாங்க. முழு மாரத்தானில் இதுவரை புடவை கட்டி யாரும் ஓடினதில்லை என்பதால், என் முயற்சியை கின்னஸ் சாதனையில் இடம்பெறச் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கோம். என்னோட இந்தச் சிந்தனைக்கும் முயற்சிக்கும் மீடியா வெளிச்சமும் கிடைச்சது சந்தோஷமான விஷயம். இதன் மூலமா சொல்ல வர்ற மெஸேஜ் இதுதான்... ‘புடவையைக் கொண்டாடுவோம். நெசவாளர்களுக்கு வாழ்வளிப்போம்!’ " என்கிறார் ஜெயந்தி உற்சாகமாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்