Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநங்கைகளுக்கான முதல் பாடல் ஆல்பம் உருவாக்கிய கதை சொல்கிறார் ப்ரியா பாபு!

ழுத்து, நாடகம், ஆவணப்படம் எனக் கலைகளின் வழியே திருநங்கைகளின் மேம்பாட்டுக்காகப் போராடிக்கொண்டிருப்பவர், ப்ரியா பாபு. தற்போது 'வானம் தாண்டி' என்கிற திருநங்கைகளுக்கான ஆல்பம் சாங்கை இயக்கியுள்ளார். அது குறித்து அவரிடம் பேசினோம். 

''நான் பிறந்த ஊர் ஈழமா இருந்தாலும், என்னுடைய ஆறாவது வயசுலேயே எங்க குடும்பம் தமிழ்நாட்டுக்கு வந்துட்டோம். எனக்கு ஒரு அக்கா, ரெண்டு அண்ணன்கள். என்னோட 14 வயசுல என் உடம்புல ஒரு மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன். பள்ளிப் படிப்பை முடிச்சதுக்கு அப்புறம் அதைப் பத்தி எங்க வீட்டுல சொன்னேன். 80கள் காலகட்டம் அது. அப்போ சமூகம் திருநங்கைகளை ரொம்ப கேவலமா சித்தரிச்சிருந்தது, நடத்திட்டிருந்தது. எங்க வீட்டிலும் அதுதான் நிலை. என்னை நிராகரிச்சாங்க. வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்குப் போனேன்.

வானம் தாண்டி ப்ரியா பாபு

வழக்கமா வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைகளுக்கு இந்தச் சமூகம் என்ன விதிச்சதோ, அதைத்தான் நானும் செய்தேன். ஒவ்வொரு கடையா ஏறி கையை நீட்டினேன். எங்க வீட்டுல சின்ன வயசுல இருந்தே படிக்கிறதுக்கு நிறையப் புத்தகங்கள் இருக்கும். அதுனால வாசிப்போட ருசி அறிந்தவளா இருந்தேன். கடை கடையா ஏறி வாங்குற காசுலயும் ஒரு பங்கு புத்தகங்கள் வாங்க செலவு செய்தேன். அப்போ சு.ச‌முத்திர‌ம் எழுதிய 'வாடாமல்லி' என்ற நாவலைப் படிக்கிற வாய்ப்புக் கிடைச்சது. அதுதான் திருநங்கைகளைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அந்த நாவலின் 'சுயம்பு' என்ற கதாபாத்திரம் என்னை ரொம்பவே யோசிக்க வெச்சது. சமூகத்தில் ஏதாவது மாற்றம் கொண்டு வரணும்ங்குற எண்ணத்தை எனக்குள்ள விதைச்சது'' என்பவர், நல்ல பல முயற்சிகள் எடுத்திருக்கிறார். 

“மும்பையில் ஒரு பத்திரிகையில் நிருபராகவும், பின்னர் தமிழ்நாட்டில் எச்ஐவி விழிப்புஉணர்வு சேவை நிறுவனம் ஒன்றிலும் எனது பயணம் தொடர்ந்துச்சு. 2004ல் நானும் என்னுடைய தோழியும் தொடர்ந்த வழக்கின் பலனாகத்தான் திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைச்சது. 'கண்ணாடி கலைக்குழு' மூலமா திருநங்கைகளின் இன்னல்களை நாடக வடிவுல மக்கள்கிட்ட கொண்டு போனேன். இதுவரை மூன்று ஆவணப்படங்கள் எடுத்துருக்கேன். திருநங்கைகளை மையமா வைத்து மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கேன். அதில் ஒன்றுதான், 'வெற்றிப் படிக்கட்டுகள்' '' என்பவர், அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். 

வானம் தாண்டி ப்ரியா பாபு

“ 'வெற்றிப் படிக்கட்டுகள்' புத்தகத்தை எழுதுறதுக்காக 50 திருநங்கைகளை சந்திச்சேன். அதுதான் நான் இப்போ இயக்கி இருக்கிற 'வானம் தாண்டி' ஆல்பம் சாங்கிற்கு உந்துதல் கொடுத்தது. இதுவரைக்கும் திருநங்கைகள் யாசகம் செய்றவங்க, பாலியல் தொழில் செய்றவங்கனுதான் இந்தச் சமூகத்துக்குக் காட்டப்பட்டிருந்தது. ஆனா, இப்போ திருநங்கைகள் பல வேலைகளிலும், தொழில்களிலும் ஈடுபட்டுட்டு இருக்காங்க. அவங்களோட அந்த வெற்றி முகங்களை, பாஸிட்டிவ் பக்கங்களை இந்தச் சமூகத்துக்குச் சொல்லணும்னு முடிவு பண்ணினேன். அப்படித்தான் 'வானம் தாண்டி' இயக்குனேன்” என்பவரின் முயற்சிகள், இன்னும் விரிந்துபட்டுள்ளன.

“இப்போ மதுரையில பி.எச்டி ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் திருநங்கைகள் பற்றிய எல்லா புத்தகங்களையும், பத்திரிகை செய்திகளையும், வழக்குகளின் விவரங்களையும் தொகுத்து ஒரு நூலகம் மாதிரி அமைத்துள்ளேன். ஆனந்த விகடனின் 'நம்பிக்கைத் தோழி' விருது வாங்கியது, பெரிய அங்கீகாரம், சந்தோஷம். என் அப்பா இறந்ததுக்கு அப்புறமா, அம்மா என்னைப் புரிஞ்சிகிட்டு பார்க்க வந்தாங்க. நீளமான முடி, கம்மல், மூக்குத்தினு மாறியிருந்த அவங்க பையனைப் பார்த்துட்டு ரொம்ப அழுதாங்க. 'அம்மா... நான் உங்க பொண்ணும்மா'னு புரியுற மாதிரி என் உணர்வுகளை எடுத்துச் சொன்னேன். அதை ஏத்துக்கிட்டவங்க, இப்போ என் முதுகெலும்பா என்கூடவே இருக்காங்க. எங்க அண்ணணோ, என் அக்காவோ எங்க அம்மாவைப் பார்த்துக்கல. அவங்களோட கடைசி காலத்துல நான்தான் அவங்களுக்கு ஆதரவா இருக்கேன்'' என்றவர்,

“திருநங்கைகளைப் பார்த்து யாரும் பரிதாபப்பட வேண்டாம் அவங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தா போதும்... வானம் தாண்டி நிச்சயம் தடம் பதிப்போம்" - நம்பிக்கை ததும்ப பேசி முடித்தார் நமது 'நம்பிக்கைத் தோழி!'

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement