Arena - மாருதி சுஸூகியின் புதிய ஷோரூம் ஐடியா! #MarutiSuzukiArena | Arena - Maruti Suzuki's amazing showroom concept

வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (03/09/2017)

கடைசி தொடர்பு:19:42 (03/09/2017)

Arena - மாருதி சுஸூகியின் புதிய ஷோரூம் ஐடியா! #MarutiSuzukiArena

இந்தியாவில் அதிக கார்களை (மாதத்துக்கு சராசரியாக 1.4 லட்சம் கார்கள்) விற்பனை செய்யும் நிறுவனமான மாருதி சுஸூகி, தனது டீலர் நெட்வொர்க்கின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் போட்டியாளரான ஹூண்டாய் நிறுவனத்தின் ஸ்டைலான ஷோரூம்களுடன் ஒப்பிடும்போது, வெள்ளை - நீல நிறத்தில் டல்லாகக் காட்சிதந்தன மாருதி சுஸூகியின் 2,050-க்கும் அதிகமான ஷோரூம்கள்.

மாருதி சுஸூகி

தற்போதைய சூழ்நிலையில் ப்ரீமியம் கார்களுக்காக நெக்ஸா, யூஸ்டு கார்களுக்காக ட்ரூ வேல்யூ, LCV-யான சூப்பர் கேரிக்குப் பிரத்யேகமான ஷோரூம், பட்ஜெட் கார்களுக்கான டீலர்கள் எனப் பல வகைகளில் இந்தியா முழுக்க தான் வைத்திருக்கும் ஷோரூம்களை, `Transformation 2.0' என்ற பெயரில் அவற்றின் கட்டமைப்பை மாடர்னாக மாற்றும் முயற்சிகளில் மாருதி சுஸூகி ஈடுபட உள்ளது. இதில் மாருதி சுஸூகியின் வழக்கமான டீலர்கள் அனைத்தும், இனி `Arena' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளன. 

ஹூண்டாய்

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும் பொருட்டு, அவை முழுக்க டிஜிட்டல் செட்டப்புடன் வடிவமைக்கப்படும் என்பதுடன், முதற்கட்டமாக 80 டீலர்களை Arena பெயரில் அந்த கான்செப்ட்டுக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் Arena ஷோரூம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், மீதமுள்ள ஷோரூம்களும் Arena கான்செப்ட்டுக்கு அப்டேட் செய்யப்படும் எனத் தெரிகிறது.

arena

இப்போதும் அதே வெள்ளை - நீல நிறப் பின்னணியே இருந்தாலும், மரத்தால் ஆன ஃபர்னிச்சர், வெள்ளை - மஞ்சள் நிற லைட்டிங், சில்வர் வேலைப்பாடு, வெள்ளை - கறுப்பு நிற டைல்ஸ் என Arena ஷோரும்கள் அசத்தலாக இருக்கின்றன. அங்கே வெள்ளை பேக்லிட்டில், சுஸூகியின் லோகோ அழகாக பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு காரைப் பற்றி உடனுக்குடன் விளக்குவதற்கு ஏதுவாக, கையில் டேப்லெட்டுடன்கூடிய Relationship Manager-கள் இங்கே தயாராக இருப்பார்கள். 

maruti suzuki

கார் வாங்கியவர்கள் காத்திருப்பதற்கான இடம் மற்றும் Cafeteria வசதியும் இருக்கின்றன. இப்படி புதிதாக கார் வாங்க விரும்பும் இளைய தலைமுறையினரை மனதில்வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் Arena ஷோரூம்களில், ஒருவர் தான் வாங்க விரும்பும் காரைப் பற்றி முழுவதும் அங்கு இருக்கும் டச் ஸ்க்ரீன்களில் 360 டிகிரியில் தெரிந்துகொள்ள முடியும் என்பதுடன், தேவையான ஆக்ஸசரிகளையும் அதில் எலெக்ட்ரிக்கலாகப் பொருத்திப் பார்க்க முடியும் என்பது ப்ளஸ்.

hyundai

இருந்த இடத்திலிருந்தே பிடித்தமான மாடலின் டெஸ்ட் டிரைவையும், காரை புக் செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. புதிய கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் இடத்தில், டெஸ்ட் டிரைவுக்கு வழங்கப்படும் கார்களும் அருகே நிறுத்தப்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டுக்குள் தனது டீலர் நெட்வொர்க்கை இரட்டிப்பாக்கும் முடிவில் இருக்கும் மாருதி சுஸூகி, அவை அனைத்தையும் Arena கான்செப்ட்டின்படியே வடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஷோரூம்

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பட்ஜெட் கார்களை விற்பனை செய்யும் இடம், வால்வோ ஷோரூம்போல இவ்வளவு லக்ஸூரியாக இருப்பது, வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷலான உணர்வைக் கொடுக்கும் என்றே தெரிகிறது. ஆக, ஷோரூமுக்குள் நுழைந்த உடனே நமக்குக் கிடைக்கும் காரின் விலைப்பட்டியல் மற்றும் Brochure ஆகியவை முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்