ஸ்பெஷல் -1
Published:Updated:

வீரசிவாஜியும் மிக்கி மவுஸும்!

வீயெஸ்வி, படம்: ப.சரவணகுமார்

ராத்தி நாடகம் ஒன்று, தமிழ் வடிவம் பெற்றிருக்கிறது. 30 வருடங்களுக்கு முன் விஜய் டெண்டுல்கர் எழுதிய 'பாபியின் கதை’ என்ற மராத்தி நாடகத்தை இறக்குமதி செய்து மேடை ஏற்றியது ஷ்ரத்தா குழு. 'பாரதி’ என தலைப்பிட்டு தமிழாக்கம் செய்தவர் யதார்த்த கே.பென்னேஸ்வரன். இயக்கம்: ஜி.கிருஷ்ணமூர்த்தி. ரமேஷ் விநாயகம் இசையமைத்து, தமிழ் நாடக மேடைக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் சென்று, நாள் தவறாமல் தாமதமாக வீடு திரும்ப, தனிமையில் வாடி, வதங்கி, கந்தல் ஆகும் ஒன்பது வயது சிறுமி பாரதியின் பரிதவிப்புதான் கதை. வருடங்கள் 30 ஆனாலும், டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட பிரச்னை இன்று வரை வாடாமல் வதங்காமல் அப்படியே இருப்பது நாடகத்துக்கு அட்வான்டேஜ்!

வீரசிவாஜியும் மிக்கி மவுஸும்!

வீட்டில் தனிமையில் பாரதி என்னதான் செய்கிறாள்? நிறையக் கனவு காண்கிறாள். கனவில் கிளாஸ் டீச்சராக மாறிவிட, மாணவர்களாக அக்பரும் பீர்பாலும் வருகிறார்கள். வீரசிவாஜி வருகிறார்; ஒரு ஜோக்கரும் வந்து துள்ளிக் குதிக்கிறார்; மிக்கி மவுஸ் வருகிறது. வானில் இருந்து நிலா இறங்கி வந்து பாரதிக்கு சோறு ஊட்டுகிறது; நட்சத்திரங்கள் வந்து டான்ஸ் ஆடுகின்றன; தேவதைகள் வருகிறார்கள். கழைக்கூத்தாடி வருகிறார்; இன்னும் பலர்.

கனவுகள் எதையும் சும்மா வசனங்கள் ஊடே சொல்லிவிட்டுப் போய்விடாமல் ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தியிருப்பது இந்த நாடகத்தின் சிறப்பு. மேடையில் வர்ணஜாலம் புரிந்திருக்கிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில் கலர்கலரான குழந்தைகளின் அணிவகுப்புகள். பாரதியுடன் சேர்ந்து பார்வையாளர்களும் மிரண்டுபோகிறார்கள். ஆனால், இந்த Fantasy  ஒருகட்டத்தில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி போன்ற உணர்வை ஏற்படுத்திவிட, 'பாரதி’ மீது ஏற்பட்டிருக்க வேண்டிய பரிதாபம் காக்கா ஊச்! இறுதியில் பாரதியேகூட, 'எனக்கு இதெல்லாம் எதுவுமே வேண்டாம்... அம்மா, அப்பா நடுவுல அவங்க மேல கால் போட்டுத் தூங்கணும்’ என்றுதான் சொல்கிறாள்!

பாரதியாக சிறுமி மஹிமா. இதுவே சினிமாவாக இருந்தால், 'சிறந்த குழந்தை நட்சத்திரம்’ விருதுகளை அள்ளிச் சென்று, நேரு உள்விளையாட்டு அரங்கில் ராக் ஸ்டார் மாதிரி கைதட்டல்களைக் குவித்திருப்பாள்!