வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (05/09/2017)

கடைசி தொடர்பு:14:54 (05/09/2017)

யூஸ்டு கார்களின் சந்தையில் இந்த கார்களுக்குத்தான் கிராக்கி!

நீங்கள், யூஸ்டு கார் வாங்கும் முடிவில் இருக்கிறீர்களா? எத்தனையோ பிராண்டுகளும் மாடல்களும் இருப்பதால், எதை வாங்குவது என்பதில் குழப்பமா? கவலை வேண்டாம் மக்களே! உங்கள் பட்ஜெட், ஒரு புதிய டூ-வீலரின் விலையாகவே இருந்தாலும், யூஸ்டு கார் மார்க்கெட்டில் அனைவருக்கும் கார் உண்டு. தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவில் மூன்று லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய 10 சிறந்த யூஸ்டு கார்களின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

அவற்றின் விலையுடன் அதன் ப்ளஸ்-மைனஸ்களையும் உடன் சேர்த்துள்ளோம். எனவே, உங்கள் தேடலுக்கான தெளிவான பதில் கிடைத்து, உங்களுக்குப் பிடித்தமான காரை வாங்குவதற்கு உதவும் என எண்ணுகிறோம். ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் புதிய கார்களைப்போலவே, இங்கும் மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது.

 

மாருதி சுஸூகி ஆல்ட்டோ:

யூஸ்டு கார்

ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது, மாருதி சுஸூகி ஆல்ட்டோதான். இதே நிலைதான் யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில் இந்த கார் கிடைப்பதால், 160சிசி திறன்கொண்ட புது பைக் ஒன்றை வாங்கக்கூடிய அளவுக்கு உங்களிடம் பணம் இருந்தாலே போதும். குறைவான பராமரிப்புச் செலவும் நம்பகத்தன்மையான ரீ-சேல் மதிப்பும் கூடுதல் போனஸ். காரின் வருடம் - வேரியன்ட் - மாடலைப் பொறுத்து, Used Car மார்க்கெட்டில் ஆல்ட்டோவின் விலை,  ஒரு லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது. 

ஹூண்டாய் சான்ட்ரோ:

Used Car

நகரப் பயன்பாட்டுக்கு ஏற்ற சிறிய கார் வேண்டும் என்றால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் சான்ட்ரோ சரியான சாய்ஸ். இது தற்போது தயாரிக்கப்படுவதில்லை என்றாலும், இது இந்தியாவில் அதிக அளவில் விற்பனையான கார் என்பதால், உதிரிப்பாகங்கள் கிடைப்பதிலும் இந்த காரை சர்வீஸ் செய்வதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது. ஹூண்டாய் நிறுவனத்தை இந்தியாவில் பிரபலப்படுத்தியதில் பெரும்பங்கு வகிக்கும் சான்ட்ரோவின் விலை குறைவு என்பதுடன், நம்பகத்தன்மையான தயாரிப்பாகவும் இருக்கிறது. Used Car மார்க்கெட்டில், ஒரு லட்சம் ரூபாய் முதலாக, இந்த காரின் விலை தொடங்குகிறது.

 

மாருதி சுஸூகி வேகன்-ஆர்:

maruti suzuki

`டால்-பாய்' எனச் செல்லமாக அழைக்கப்படும் வேகன்-ஆர், எளிதான ஓட்டுதல், அசத்தலான ரீ-சேல் மதிப்பு, சிறப்பான இடவசதி, குறைவான பராமரிப்புச் செலவுகள், நம்பகத்தன்மை என முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கு அளவு எடுத்துத் தைத்த சட்டைபோல கச்சிதமாகப் பொருந்துகிறது. Used Car மார்க்கெட்டில், தோராயமாக 1.5 லட்சம் ரூபாய் முதல் இந்த காரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஹூண்டாய் i10:

hyundai

சிறிய சைஸ் காரில் நல்ல இடவசதியுடன்கூடிய மாடல் வேண்டும் என்றால், தாராளமாக ஹூண்டாய் i10 காரை டிக் செய்யலாம். இதை வாங்குவதும் பராமரிப்பதும் எளிது என்பது பெரிய ப்ளஸ். குறைவான பட்ஜெட்டில் தரமான கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் இந்த காரில், போதுமான சிறப்பம்சங்கள் அனைத்தும் இருப்பது ப்ளஸ். காரின் கண்டிஷனைப் பொறுத்து Used Car மார்க்கெட்டில்  i10 காரின் விலை, 1.5 லட்சம் ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. 

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்:

மாருதி சுஸூகி

யூஸ்டு கார் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய சிறந்த ஹேட்ச்பேக்குகளில் ஒன்றுதான் ஸ்விஃப்ட். ஸ்போர்ட்டியான டிசைன், சிறப்பான ஓட்டுதல் அனுபவம், சூப்பர் பெர்ஃபாமன்ஸ், அதிக மைலேஜ் ஆகியவற்றுடன், மாருதி சுஸூகி கார்களுக்கே உரித்தான பரந்துவிரிந்த டீலர் நெட்வொர்க்கும் சேரும்போது, நீங்கள் 2-வது ஓனராக இருந்தாலும் காருக்கு சிறப்பான சர்வீஸ் மற்றும் ரீ-சேல் மதிப்பு கிடைப்பது நிச்சயம். சுமார் இரண்டு லட்சம் ரூபாய் முதல், Used Car மார்க்கெட்டில் ஸ்விஃப்ட் கிடைக்கிறது. 

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் டிசையர்:

swift dzire

காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில், யூஸ்டு கார் வாங்க விரும்புபவர்கள், தவிர்க்க முடியாத கார்தான் ஸ்விஃப்ட் டிசையர். ஸ்விஃப்ட்டின் பலங்களுடன் போதுமான இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸ் சேரும்போது, பிராக்டிக்கலான ஒரு கார் கிடைப்பது உறுதி. இதனுடன் நம்பகத்தன்மையான பெட்ரோல் / டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள், குறைவான பராமரிப்புச் செலவு, மனநிறைவைத் தரும் ஓட்டுதல் அனுபவம் என இதன் ப்ளஸ்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். சுமார் இரண்டு லட்சம் ரூபாய் முதலாக, Used Car மார்க்கெட்டில் ஸ்விஃப்ட் டிசையரை வாங்கலாம். 

ஹூண்டாய் வெர்னா:

ஹூண்டாய்

ஸ்டைலான டிசைன் - அதிகப்படியான சிறப்பம்சங்கள் என அசத்தும் ஹூண்டாய் வெர்னா, யூஸ்டு கார் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய செடான்களில் சிறந்த கார்களுள் ஒன்று. இந்த காரின் கிரில்லுக்குப் பின்பாக பவர்ஃபுல்லான டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது அறிந்ததே. யூஸ்டு கார் மார்க்கெட்டில் இரண்டு லட்சம் ரூபாய் முதல், இந்த காரின் விலை இருக்கிறது.

ஹூண்டாய் i20:

i20

யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிக வசதிகளுடன் சொகுசான ப்ரீமியம் ஹேட்ச்பேக் வேண்டுமா? ஹூண்டாய் i20  காரை நீங்கள் பரிசீலிக்கலாம். சிறிய கார்களிலிருந்து பெரிய காருக்கு மாற நினைப்பவர்களுக்கான பக்கா கார் இது. ஸ்டைலான டிசைன் - இடவசதிமிக்க கேபின் - அதிக சிறப்பம்சங்கள் - ஸ்மூத் இன்ஜின் என சிறப்பான பேக்கேஜ் ஹூண்டாய் i20. இந்த காரின் விலை, யூஸ்டு கார் மார்க்கெட்டில் 2.25 லட்சம் ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.

ஹோண்டா சிட்டி:

honda city

யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஒரு செடானை வாங்கும் முடிவில் நீங்கள் இருந்தால், பெரும்பாலானோரின் தேர்வு ஹோண்டா சிட்டியாகவே இருக்கும். அந்த அளவுக்கு இது மக்களுக்குப் பிடித்த நம்பகமான மாடல். இதற்கு அந்த காரின் ஸ்போர்ட்டினெஸ் மற்றும் லக்ஸூரி கலந்த தோற்றம், அற்புதமான இடவசதி & சொகுசு, ஸ்மூத் பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தும் பெட்ரோல் இன்ஜின், நம்பகத்தன்மை ஆகியவையே காரணம். சுமார் 2.5 லட்சம் ரூபாய் முதல், யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கிடைக்கிறது.  

டொயோட்டா இனோவா:

toyota innova

குவாலிஸ் காரின் அடுத்த தலைமுறை மாடலாக வெளிவந்த இனோவா, அதைப்போலவே அசத்தலான வரவேற்பை மக்களிடையே பெற்றது. இந்தியாவில் அறிமுகமானது முதல் லக்ஸூரி எம்பிவியான இது, போதுமான இடவசதி, அசைக்க முடியாத நம்பகத்தன்மை, குறைவான பராமரிப்புச் செலவு என முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கு மட்டுமல்லாது, யூஸ்டு கார் மார்க்கெட்டில் கார் வாங்குபவர்களுக்கு உகந்த தயாரிப்பாக இருக்கிறது இனோவா. இதன் முதல் தலைமுறை மாடலின் விலை, யூஸ்டு கார் மார்க்கெட்டில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் முதல் ஆரம்பிக்கிறது. வருடம் மற்றும் வேரியன்ட்டைப் பொறுத்து விலைகள் மாறுபடலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்