வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (07/09/2017)

கடைசி தொடர்பு:16:08 (07/09/2017)

அம்பாஸடர் முதல் மாருதி 800 வரை... சுதந்திர இந்தியாவின் சிறந்த கார்கள்!

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில் தவிர்க்க முடியாத பைக்குகளைத் தொடர்ந்து, கார்களை இப்போது பார்ப்போம்.

இந்துஸ்தான் அம்பாஸடர்:

அம்பாஸடர்

இந்தியச் சாலைகளில் தனிக்காட்டு ராஜாவாக ஒருகாலத்தில் வலம் வந்த கார்தான் `அம்பாஸடர்'. இங்கிலாந்தைச் சேர்ந்த மோரிஸ் மோட்டார்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தின் தயாரிப்பான `Oxford Series III' எனும் காரை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட கார்தான், `Amby' எனச் செல்லமாக அழைக்கப்படும் `அம்பாஸடர்'. இந்தியாவில் இந்த கார் 1957-ம் ஆண்டில் அறிமுகமானபோது, இதன் விலை 16 ஆயிரம் ரூபாய்! இதன் உற்பத்தி 2014-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டபோது 5.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிகப்படியான இடவசதி, உறுதியான கட்டுமானம், சொகுசான ஓட்டும் வசதி ஆகியவற்றைக்கொண்டிருந்ததால், இந்தியாவின் கூட்டுக் குடும்பங்கள் மட்டுமல்லாது, மத்திய அரசின் சாய்ஸாகவும் இருந்தது அம்பாஸடர். அரசாங்க அதிகாரிகளும் இதை விரும்பிப் பயன்படுத்தியதால், இந்த காரின் விற்பனை எண்ணிக்கையில் 16 சதவிகிதம் அரசு சார்பாகவே இருந்திருக்கிறது. இன்றும்கூட சில அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த காரில் பயணிப்பதைப் பார்க்கலாம். கார் ஆர்வலர்கள் தவிர்க்க முடியாத தயாரிப்பாக இருந்த அம்பாஸடரின் தயாரிப்பு, 2014-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதனுடன் அந்த நிறுவனமும் மூடுவிழா கண்டது. 

ப்ரீமியர் பத்மினி:

இந்தியா

அம்பாஸடர் காருக்குக் கடும் போட்டியை ஏற்படுத்திய கார், ப்ரீமியர் பத்மினி. `ஃபீயட் 1100 Delight' காரின் மறு ஆக்கமாகப் பார்க்கப்படும் இந்த கார், இந்தியாவில் 1973-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. ``அம்பாஸடர் பெரிதாக இருக்கிறது. எனக்கு காம்பேக்ட்டாக ஒரு கார் வேண்டும்'' என்பவர்களுக்கான சாய்ஸாக இருந்த பத்மினி, நாளடைவில் மும்பையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறியது. அங்கே `Kaali Peeli' டாக்ஸி எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த கார், இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில் தவிர்க்க முடியாத ஒன்று. கடுமையான மாசுக்கட்டுப்பாடு விதிகள் நடைமுறையில் இருந்தாலும், இன்றும்கூட மும்பையில் பத்மினி கார்கள் டாக்ஸிகளாகப் பயன்பாட்டில் இருப்பதே, அதன் அழியாப் புகழுக்குச் சாட்சி. ஆனால், இத்தகைய நிலையை இந்த நிறுவனத்தின் அடுத்தடுத்த மாடல்கள் (ப்ரீமியர் ரியோ) பெறாததுதான் சோதனை. 

மாருதி 800:

மாருதி 800

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் புரட்சியை ஏற்படுத்திய பெருமை, `மாருதி 800' காரையே சேரும். குறைவான விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள், எளிதாக ஓட்டும் வசதி, அதிக மைலேஜ் என காரை ஆடம்பரப் பொருளாகப் பார்த்து வளர்ந்தவர்களை, கார் உரிமையாளராக மாற்றியது இந்த கார்தான். 1983-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட இந்த கார், `இந்தியாவில் நீண்ட நாள்கள் உற்பத்தியில் இருந்த கார்' என்ற பெருமையைத் தக்கவைத்திருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில், சுமார் 29.50 லட்சம் கார்கள் விற்பனையாகின. தற்போது இந்த வியத்தகு சாதனையை, மாருதியின் மற்றொரு தயாரிப்பான ஆல்ட்டோ பெற்றுவிட்டது. சுருக்கமாகச் சொல்வதென்றால், கார் விற்பனையில் மாருதி 800 கொடுத்த அதிரடியான தொடக்கத்தை அடித்தளமாகக்கொண்டு, இந்தியாவில் தனது பாதையைச் சரியாக நிர்ணயித்த மாருதி சுஸூகி, மாதத்துக்கு சராசரியாக 1.4 லட்சம் கார்களை நம் நாட்டில் விற்பனை செய்துகொண்டிருக்கிறது.

டாடா நானோ:

டாடா நானோ

‘இந்தியா மட்டுமல்லாது உலகத்திலேயே விலை குறைவான காரை தயாரிப்போம்' என்ற ரத்தன் டாடா கண்ட கனவின் வெளிப்பாடாக வந்ததுதான் `நானோ'. இது 2009-ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தபோது கிடைத்த அசுரத்தனமான வரவேற்பு, நாளடைவில் கானல்நீராகப் பொய்த்துப்போனது. இது இன்று வரை, இந்திய ஆட்டோமொபைல் துறை கண்ட மிகப்பெரிய முரணாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், `உலகின் விலை குறைவான காரை வைத்திருப்பவர்' என்று அடையாளப்படுத்திக்கொள்ள பலர் விரும்பவில்லை என்பதே நிதர்சனம். இத்தனைக்கும் அப்போது விலை குறைவான காராக அறியப்பட்ட மாருதி 800 காருடன் ஒப்பிடும்போது, மாடர்ன் டிசைன் - அதிக இடவசதி - அதிக மைலேஜ் - அதிக வசதிகள் எனப் பல ப்ளஸ்களை இந்த கார் பெற்றிருந்தது. இதன் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு பல ஸ்பெஷல் எடிஷன்கள், பவர் ஸ்டீயரிங், திறக்கக்கூடிய பூட், CNG கிட், AMT ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் எனக் காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை காரில் டாடா செய்தாலும், அது நானோவின் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது எலெக்ட்ரிக் நானோ காரைத் தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறது டாடா நிறுவனம். 

ஹூண்டாய் சான்ட்ரோ:

ஹூண்டாய் சான்ட்ரோ

1997-ம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம், உலக கார் சந்தைகளில் `Atos' எனும் ஹேட்ச்பேக்கை அறிமுகப்படுத்தியது. இது அங்கே பெற்ற வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, இந்தியாவில் அதே காரை `சான்ட்ரோ' என்ற பெயரில், 1998-ம் ஆண்டில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மாருதி கார்களுக்குப் போட்டியாகக் களம்கண்ட இந்த கார், தென் கொரிய நிறுவனமான ஹூண்டாயை, இந்திய மக்களின் மனதில் இடம்பெற செய்தது என்றால் அது மிகையில்லை. இதற்கு அந்த காரின் விலை, சிறப்பம்சங்கள், இடவசதி, நல்ல மைலேஜ், குறைவான பராமரிப்புச் செலவுகள் ஆகியவையே காரணம். தற்போது மும்பையில் பத்மினி காருக்கு அடுத்தபடியாக, சான்ட்ரோதான் மக்களால் விரும்பப்படும் டாக்ஸியாக இருக்கிறது. அந்த அளவுக்குப் புகழைப் பெற்றிருக்கும் இந்த கார், இந்தியாவில் 16 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. 2014-ம் ஆண்டில் இதன் உற்பத்தியை நிறுத்திய ஹூண்டாய், இதற்கு மாற்றாக `இயான்' காரை வழிமொழிந்தது. ஆனால், சான்ட்ரோவுக்குக் கிடைத்த நன்மதிப்பு, ஏனோ இயானுக்குக் கிடைக்கவில்லை. எனவே, சான்ட்ரோ பெயரிலேயே ஒரு புதிய காரைக் களமிறக்கும் முடிவில் உள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்