Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தையில் பாரத் மேட்ரிமோனி, மணமகன்/மணமகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்! முருகவேல் ஜானகிராமன் பேட்டி

உலக அளவிலான திருமண ஏற்பாட்டு இணையதளங்களில் இன்று முன்னணியில் இருக்கிறது `மேட்ரிமோனி டாட் காம்'. சிறிய ஐடியாவை ஒரு தொழிலாக மாற்றியமைத்து, இன்று கோடிகளைக் குவித்துவருகிறார் மேட்ரிமோனி டாட் காம் நிறுவனரான தமிழர் முருகவேல் ஜானகிராமன். பல லட்சம் திருமணங்களைச் செய்துவைத்து சாதனை செய்துவரும் மேட்ரிமோனி டாட் காம் உருவான கதை உங்களுக்குத் தெரியுமா? 

மேட்ரிமோனி

பட்டதாரியான முருகவேல் ஜானகிராமன், அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். அப்போது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக ஓர் இணையதளத்தைத் தொடங்கி நடத்திவந்தார். பொதுவான செய்திகளை உள்ளடக்கிய அந்த இணையதளத்தில் சிறிய இணைப்பாக `மணமகன்/மணமகள் தேவை' என்ற வரியையும் இணைத்திருந்தார். அந்த இணையதளத்துக்கு வந்து மற்ற செய்திகளைப் படிப்பவர்களைக் காட்டிலும் இந்த மணமாலை இணைப்புக்குச் சென்று திருமண வரன் தகவல்களைப் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதை ஆச்சர்யத்துடன் பார்த்ததோடு மட்டுமல்லாமல், `ஏன் இதையே ஒரு தொழிலாகச் செய்யக் கூடாது?' என அப்போது அவருக்குத் தோன்றிய ஐடியாவையே ஒரு தொழிலாகச் செயல்படுத்தியதுதான் மேட்ரிமோனி டாட் காம். 

இன்று மேட்ரிமோனி நிறுவனம், பாரத் மேட்ரிமோனி.காம், எலைட் மேட்ரிமோனி, கம்யூனிட்டி மேட்ரிமோனி, மதம் சார்ந்த பெங்காலி மேட்ரிமோனி, கன்னடா மேட்ரிமோனி, தமிழ் மேட்ரிமோனி என ஒவ்வொரு மொழி, ஒவ்வொரு சமூகம் மற்றும் ஒவ்வொரு தொழிலுக்கும் என, தனித்தனி திருமண வரன் இணையதளங்கள் என 300-க்கும் மேற்பட்ட இணையதளங்களை மேட்ரிமோனி டாட் காம் நிறுவனம் நடத்திவருகிறது. இப்போது தமிழ்நாட்டிலிருந்து, முதன்முறையாக ஆன்லைனை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் மேட்ரிமோனி டாட் காம், பங்குச்சந்தையில் தனது பங்கைப் பட்டியலிட (ஐ.பி.ஓ) உள்ளது. 

இந்த நிலையில் மேட்ரிமோனி டாட் காம் குறித்து, அதன் நிறுவனர் முருகவேல் ஜானகிராமனைச் சந்தித்துப் பேசினோம்.

``மேட்ரிமோனி டாட் காம், பல சமூகங்களுக்கும் எனத் தனித்தனி இணையதளங்களை நடத்திவருகிறீர்களே ஏன்?''

``ஒரே சமூகத்தில் திருமணம் செய்தால் தவறு என, ஒருசிலர் நினைக்கின்றனர். ஆனால், அப்படியல்ல. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் என ஒரு கலாசாரம் இருக்கிறது; பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. புதியதாக வேலைக்கு எடுக்கும் ஊழியர்கள்கூட நமது நிறுவனத்துக்குச் சரிப்பட்டுவருவார்களா... இல்லையா என அலசி ஆராய்ந்து அதன் பிறகுதான் வேலைக்கே எடுக்கிறார்கள். இதில் தவறு கிடையாது. அதேபோல, ஒவ்வொரு சமூகத்துக்கும் எனத் தனிப்பட்டப் பழக்கவழக்கம், உடை, உணவு எனப் பலதரப்பட்ட விஷயங்களில் மாறுபடுகிறோம். `திருமணத்துக்குப் பார்க்கும் வரன்கள், ஒரே சமூகமாக இருந்தால் நன்றாக இருக்கும்' என பெற்றோர்கள் நினைக்கின்றனர். இது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதே சமயம் பிற சமூகம் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களுடனும் திருமணம் நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன்தான் அதிக அளவில் திருமணம் நடைபெறுகிறது. மேட்ரிமோனி டாட் காமுக்கு என 300-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் செயல்பட்டுவருகின்றன.''

``ஒருமுறை திருமணம் ஆனவர், மறுமுறை உங்கள் நிறுவனத்தைக் கண்டுகொள்ள மாட்டார். நீங்கள் புதிது புதிதாக வாடிக்கையாளர்களைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். (ஆனால், மற்ற நிறுவனங்களுக்கு அப்படியல்ல) இது உங்கள் வணிகத்தில் எப்படிச் சாத்தியம்?''

``மனித இனம் இருக்கும் வரை திருமணம் என்பது நடந்துகொண்டேதான் இருக்கும். மற்ற வணிகத்தைப் பொறுத்தவரை, 20 வருடங்களுக்கு முன் பேஜர், டைப்ரைட்டர் எனப் பல டெக்னாலஜிகள் இருந்தன. அவற்றில் பல இப்போது காணாமல்போய்விட்டன. திருமணம் என்பது அப்படியல்ல. மனித இனம் இருக்கும் வரை இந்த வணிகமும் இருக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட நிகழ்வில் ஏராளமான வாய்ப்புகள் அதிக அளவில் கொட்டிக்கிடக்கின்றன. இந்தியாவில் திருமணம் மற்றும் அதன் சார்ந்த வணிகம் ஆண்டுக்கு 3.50 லட்சம் கோடி ரூபாய் அளவில் நடைபெற்றுவருகிறது. மேட்ரிமோனி டாட் காமில் திருமண வரன் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல், போட்டோகிராஃபி, திருமண மண்டபம் எனத் திருமணத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். 

மேட்ரிமோனி டாட் காமுக்கு நாடு முழுவதும் 140-க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டுவருகிறது. மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஒரு காலத்தில் 240 கிளைகள் வரை இருந்தன. இப்போது 140 ஆகக் குறைந்துள்ளோம். ஏனெனில், எங்களைப் பொறுத்தவரை ஆஃப்லைனைவிட ஆன்லைன்தான் முக்கியமாகப் பார்க்கிறோம். ஓராண்டில் மட்டும் எங்களுடைய மேட்ரிமோனி டாட் காம் இணையதளத்தை ஆறு கோடி பேர் பார்வையிடுகின்றனர். ஒரு வருடத்தில் 30 லட்சம் பேர் எங்களுடைய இணையதளத்தில் இலவசமாகப் பதிவுசெய்கின்றனர். சென்ற ஆண்டு மட்டும் ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பணம் கொடுத்துப் பதிவுசெய்துள்ளனர்.''

மேட்ரிமோனி

``திருமணத்தைப் பொறுத்தவரை மணமகன்/மணமகள் வீட்டார் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது? உங்களுடைய வணிகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.''

``மணமகள் வீட்டாரின் வசதிக்கேற்ப மணமகன் வீட்டார் இருக்கிறார்களா, மணமகன் தங்களுடைய பெண்ணைக் கடைசி வரை காப்பாற்றுவாரா என்பதைத்தான் இன்றும் முக்கியமாகப் பார்க்கின்றனர். மணமகன் வீட்டாரைப் பொறுத்தவரை மணமகள் அழகாக, லட்சணமாக இருக்கிறாரா என்பதையே முக்கியமாகப் பார்க்கின்றனர். மற்றபடி தொழில், பணம், வேலை என எதையும் பார்ப்பதில்லை. மேட்ரிமோனி டாட் காம் இணையதளத்தில் திருமண வரன் பார்ப்பவர்கள் யார் வேண்டுமானாலும் தங்களுடைய விவரங்களை இலவசமாகப் பதிவுசெய்துகொள்ளலாம். ஆனால், மற்றொரு வரனுடன் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்தினால் மட்டுமே தொடர்புகொள்ள முடியும். வரன் தேடுபவர்கள் திருமணத்துக்குப் பதிவுசெய்வதற்கு ஆரம்பத்தில் ஆண்டுக்கு 300 ரூபாய் என நிர்ணயித்திருந்தோம். இப்போது மூன்று மாதங்களுக்கு 4,200 ரூபாய் என மாற்றியிருக்கிறோம். இந்த விலை ஒவ்வோர் ஆண்டும் ஐந்து சதவிகித அளவில் அதிகரித்துவருகிறோம். சென்ற ஆண்டில் மட்டும் ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் மேட்ரிமோனி டாட் காமில் பணம் கொடுத்துப் பதிவுசெய்துள்ளனர். சென்ற ஆண்டில் மட்டும் நிறுவனத்தின் வருவாய் 292 கோடி ரூபாய். இதில் வாடிக்கையாளர்கள் திருமணப் பொருத்தம் பார்ப்பதற்குப் பதிவுசெய்ததன் மூலம் 280 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. மீதி 12 கோடி ரூபாய் இதர திருமண சேவைகள் மூலம் கிடைத்துள்ளது.''

``இப்போது எதற்காக இந்த ஐ.பி.ஓ?''

``தமிழகத்தைச் சேர்ந்த இணையத்தை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் மேட்ரிமோனி டாட் காம், பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை, மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம். இதை அடுத்த லெவலுக்குக் கொண்டுசெல்வதற்காகத்தான் இப்போது ஐ.பி.ஓ வெளியிடுகிறோம். ஒரு பங்கின் விலை 983 முதல் 985 ரூபாயாக நிர்ணயம் செய்திருக்கிறோம். இந்தப் பொதுப் பங்கு வெளியீடு மூலம் 130 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம். ஐ.பி.ஓ, செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி முடிவடைகிறது" என்றார் முருகவேல் ஜானகிராமன். 

மேட்ரிமோனி டாட் காம் நிறுவனர் முருகவேல் ஜானகிராமனைப்போல, உங்களது தொழிலில் ஏதோ ஒரு பிரிவுக்கு சந்தை வாய்ப்பு அமோகமாக இருப்பது தெரியவந்தால், உடனடியாக நீங்கள் செய்யவேண்டியது அந்தப் பிரிவைப் பிரதானப் பிரிவாக மாற்றிக்கொள்வதுதான். அதைப் புரிந்துகொண்ட முருகவேல் ஜானகிராமன், இன்று கோடிகளைக் குவிக்கிறார். உங்களுக்கும் இவரைப்போல உங்கள் மூளையிலும் `பல்ப்' ஏதாவது எரிந்தால், உடனே அதையே ஒரு தொழிலாக நடத்தி வெற்றிபெற முயற்சியுங்கள் நண்பர்களே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement