இரண்டு நிலாக்களுடன் உலா வரும் விண்கல்... “ஜஸ்ட் மிஸ்” ஆன பூமி..!

ஃப்ளொரென்ஸ் விண்கல்

பயணம் என்று ஒன்று இருந்தால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்காது. எந்தவகை பயணம் என்றாலும் ஏதாவது ஒரு வகையில் விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. பூமி போன்ற கோள்கள் தொடங்கி உடைந்த விண்கல் வரை அனைத்தும் விண்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. அதுவும் ஒரு பயணம் தானே? அங்கேயும் விபத்துகள் நிகழும் அல்லவா? விண்கற்கள் அவ்வப்போது கோள்களின் பாதைகளில் குறுக்கே நுழைந்து மோதுவதும், உடைந்து போவதும், சேதாரம் ஏற்படுவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பூமியைக் கடந்து சென்ற பெரிய விண்கற்கள், மோதி சிதறிப் போகும் சிறிய கற்கள் என இந்த விபத்துகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

இப்படி மோதிய, மோதவிருக்கும் விண்கற்கள் குறித்த தரவுகள் நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்களிடம் எப்போதும் உண்டு. வரப்போகும் இவ்வகை ஆபத்துகளை முன்னரே கணித்து அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் அளவிற்கு நாம் விஞ்ஞான வளர்ச்சி அடைந்து விட்டோம். 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் விண்கற்கள் பூமியின் மீது மோதக் கூடும் என்றவுடன், அதைத் தடுக்க 2020 ஆம் ஆண்டே Double Asteroid Redirection Test (DART) என்ற முறையில் அதைச் சரி செய்யவிருக்கிறது நாசா.

அந்த வகையில், ஃப்ளோரென்ஸ் என்ற விண்கல் (Asteroid 3122 Florence) சென்ற வாரம் விபத்து என்ற ஒன்றை ஏற்படுத்தும் எல்லை வரை சென்று, ஏதும் செய்யாமல் விட்டிருக்கிறது. பூமியின் பாதையில் வந்த ஃப்ளோரென்ஸ் பூமியைக் கடந்த போது இருந்த இடைவெளி வெறும் 7 மில்லியன் கிலோமீட்டர்கள் (4.4 மில்லியன் மைல்கள்). அவ்வளவு தூரம் இருக்கிறதே என்று நினைக்க வேண்டும். பூமிக்கு மிக அருகில் வந்த விண்கற்களில், ஃப்ளோரென்ஸ் தான் மிகவும் பெரியது.

நாசாவின் பால் சோடாஸ் (Paul Chodas), பூமியின் அருகில் வரும் பொருள்களைக் குறித்து ஆராய்ச்சி செய்யும் மையங்களின் முகாமையாளர் பேசுகையில், “எண்ணற்ற விண்கற்கள் பூமியை கடந்து சென்றுள்ளன. அவை அனைத்தும் அளவில் சிறியவை. நாசா அறிந்து கொண்டதிலேயே ஃப்ளோரென்ஸ்தான் மிகவும் பெரியது. இதைக் குறித்து முன்னரே தெரிந்து வைத்திருந்தோம். மிக அருகில் வந்தாலும் பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று உணர்ந்திருந்தோம்” என்றார்.

 

 

GIF Courtesy: NASA 

அளவு கணக்கு

இதன் விட்டம் 4.4 கிலோமீட்டர் (2.7 மைல்கள்). அதுவும் இது தனியாக வரவில்லை. இதற்கு இரண்டு நிலாக்கள் (துணைக் கோள்கள்) உண்டு. இந்த இரண்டு நிலாக்களின் அளவும் 100-300 மீட்டர் (300-1,000 அடி). முதல் நிலா, ஃப்ளோரென்ஸ் விண்கல்லைச் சுற்றிவர 8 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது, மற்றொன்று 22 முதல் 27 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. இது நம்மைக் கடந்து சென்று விட்டாலும், இது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது நாசா.

பொதுவாக, விண்கற்களுக்கு, துணைக்கோள்கள் இருப்பது மிகவும் அரிதான ஒன்று. இதுவரை பூமியை 16,400 விண்கற்கள் தோராயமாக கடந்து போயுள்ளன. அவற்றுள், 60 விண்கற்கள், ஒவ்வொரு துணைக் கோள்களைக் கொண்டதாய் இருந்தன. ஃப்ளோரென்ஸ் போல் இரண்டு துணைக்கோள்கள் கொண்டு ஒரு விண்கல் வருவது இது மூன்றாவது முறை. இதற்கு முன் 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் இவ்வாறு நடந்துள்ளது. ஆனால், அவை ஃப்ளோரென்ஸ் அளவிற்கு பெரியதுமில்லை, அருகிலும் வந்ததில்லை. கடைசியாக இந்த ஃப்ளோரென்ஸ் 1890 ஆம் ஆண்டு பூமியின் அருகில் வந்ததாகவும், இனி 2500 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் வரும் என்றும் கணித்துள்ளார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!