வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (11/09/2017)

கடைசி தொடர்பு:12:18 (11/09/2017)

வேட்டையாடவில்லை... விலைக்கு வாங்கவில்லை... இவரிடம் 16 ஆயிரம் மான் கொம்புகள் எப்படி வந்தன?

ஒரு அழகான மலையை ஒட்டிய கிராமம். இன்று அந்த கிராமம் சற்றே நகர்மயப்பட்டிருக்கிறது. ஆனால், 1958-ல் முழுமையான கிராமமாகவே அது இருந்தது. குளிர்கால விடுமுறைக்கு, அமெரிக்காவின் மோன்ட்டானா மாகாணத்தில் உள்ள அந்த கிராமத்திற்குத் தன் தாத்தா, பாட்டியைப் பார்க்க வந்திருந்தார் ஜிம் பிலிப்ஸ் (Jim Philips). வீட்டை ஒட்டியே மலையும், காடும் இருப்பதால் ஜிம் வெளியே காலடி எடுத்து வைத்தாலே பாட்டி திட்ட ஆரம்பித்துவிடுவார். இரவில் எந்த நேரமும் மான் கூட்டங்களை அந்த வீட்டினருகே பார்க்கலாம். இரவு நேரங்களில். பாட்டிக்குத் தெரியாமல் ஜன்னல் வழியே அந்த மான் கூட்டங்களை ஜிம் பார்ப்பான். பல வகை மான்கள் அங்கு வரும். அனைத்து மான்களுமே ஜிம்மிற்கு ரொம்ப பிடிக்கும். அவன் மான்களை அத்தனை ஆச்சர்யத்தோடும், பரவசத்தோடும் பார்த்துக் கொண்டிருப்பான். சிலநாள் இரவு முழுக்கவே கூட அந்த மான்கூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருப்பான். தனக்கு ஏன் மான்களை இவ்வளவுப் பிடிக்கிறது என்ற ஆச்சர்யம் அவனுக்கு வந்தது...

மான் கொம்புகளை சேகரிக்கும் மனிதர்

அப்போது ஜிம்மிற்கு பத்து வயது. பாட்டி கொஞ்சம் பக்கத்தில் போய் வருவதாக சொல்லி நகர்ந்தார். அவ்வளவுதான், கிடைத்தது வாய்ப்பு என்று தாவி குதித்துக் காட்டிற்குள் ஓட ஆரம்பித்தான். தன் வீடு தன் கண்ணை விட்டு மறையும் வரை வேகமாக ஓடினான். பின்னர், மெதுவாக நடக்கத் தொடங்கினான். அவன் காட்டிற்கு வந்தது, இரவில், தான் பார்த்த மான் கூட்டங்களைப் பகலில் பார்க்கத்தான். அது அடர்ந்தக் காடு, ஆபத்துகள் நிறைந்த காடு என்பதெல்லாம் அவனுக்கு உரைக்கவேயில்லை. 

நீண்ட தூரம் நடந்த பிறகு, சோர்வாகிப் போனதால் ஒரு மரத்தினடியில் உட்காருகிறான். ‘சரி... திரும்ப நடக்கத் தொடங்கலாம். போதும்... கால் ரொம்பவே வலிக்கிறது’ என்று நினைக்கத் தொடங்குகிறான். அப்போது கண்ணுக்கு எட்டும் தொலைவிலிருந்த புல் வெளியில் மான் கூட்டங்கள் வருவதைப் பார்த்தான். உற்சாகம் கொள்ள ஆரம்பித்தான். பரவசமடைந்தான். அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு மான், தான் இருந்தப் பகுதியை நோக்கி நடந்து வருவதைக் கவனித்தான். எங்கு மான் தன்னைச் சாப்பிட்டு விடுமோ என்று பயம் கொள்ள ஆரம்பித்தான். தான் சாய்ந்து உட்கார்ந்திருந்த மரத்தின் பின்னர் போய் ஒளிந்துக் கொண்டான். அந்த மான் சற்றே சோர்வாக இருந்தது. அதன் கொம்புகளை உற்றுப் பார்த்தான் ஜிம். அதில் ஏதோ ஒரு வித்தியாசம் இருந்ததைக் கவனித்தான். 

மான் கொம்புகளை சேகரிக்கும் மனிதர்

சோர்வாக தளர்ந்து நடந்து வந்த மான், ஒரு மரத்தின் அருகே சென்றது. ஜிம்மிற்கு குளிர் எடுக்கத் தொடங்கியிருந்தது. வரும் அவசரத்தில் ஸ்வெட்டெர் எதுவும் அவன் போட்டு வரவில்லை. அந்த மானையே கவனித்துக் கொண்டிருந்த அவனுக்கு ஓர் ஆச்சர்யக் காட்சி கண்ணில் பட்டது.

மெதுவாக நடந்துக் கொண்டிருந்த அந்த மான் திடீரென துள்ளிக் குதித்தது. அங்குமிங்கும் ஓடியது. ஒரு நொடி சட்டென்று தன் தலையை சிலுப்பியது. அதன் இடப் பக்க கொம்பு தலையிலிருந்து கழன்று விழுந்தது. ஜிம்மிற்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் தன் கண்களைக் கசக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கலானான். சில நிமிடங்கள்... ஒற்றைக் கொம்போடு அந்த மான் சுற்றிக் கொண்டிருந்தது. இப்போது துள்ளி குதிக்காமலேயே தலையை சிலுப்பியது. மிச்சமிருந்த கொம்பும் கீழே விழுந்தது. சில நிமிடங்கள் அதைச் சுற்றி நடந்த மான், பின்பு ஓடிச் சென்று தன் கூட்டத்தோடு சேர்ந்துக் கொண்டது. கொம்பில்லா அந்த மானைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. 

மான் கொம்புகளை சேகரிக்கும் மனிதர்

தற்போது ஜிம்மிற்கு பயம் ஒன்றுமில்லை. மெதுவாக மரத்தின் பின்னின்று வெளிவந்தான். அந்தக் கொம்புகளை நோக்கிப் போனான். அது பனிக்காடு என்பதால், வெள்ளைப் பனியின் மீது கிடந்த அந்தக் கொம்புகளைத் தூக்கும்போது அவன் கைகளில் சில பனித்துளிகள் பட்டன. குளிரில் சிலிர்த்துக் கொண்டான். அந்தக் கொம்புகள் அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தன. அதை எடுத்துக் கொண்டு வேகமாக தன் வீட்டை நோக்கி ஓடினான். 

இவன் கொம்புகளோடு வீட்டிற்குள் நுழையும் அதே சமயத்தில் அவன் பாட்டியும் வந்து சேர்ந்தாள்.  கைகளிலிருந்த கொம்புகளைக் கண்டு கடுங் கோபம் கொண்டாள். ஜிம்மை வெளுத்து வாங்கினாள். ஜிம் அமைதியாகவே இருந்தான். அவனுக்கு அந்த கொம்புகள் கிடைத்த மகிழ்ச்சிக்கும் முன்னர் அந்த அடிகள் வலிக்கவில்லை. பின்னர், கொஞ்ச நேரத்தில் பாட்டி சமாதானம் ஆனதும், அவரிடம் சென்று, தான் கண்ட அதிசய காட்சியைச் சொன்னான். பாட்டி சிரித்தபடியே,

" அது இயற்கை ஜிம். எல்லா மான்களும் வருடத்திற்கு ஒரு முறை இது போல் தங்கள் கொம்புகளை இழக்கும். பின்பு மீண்டும் அது வளர்ந்துவிடும்..." என்றாள்.

மான் கொம்புகளை சேகரிக்கும் பிலிப்ஸ்

கொம்புகளுக்கு நடுவே ஜிம் பிலிப்ஸ்...

இது நடந்து முடிந்து 50 வருடங்களாகின்றன. இன்று வரை ஜிம் கொம்புகளைத் தேடிச் சென்று, எடுத்து வந்து சேகரிக்கிறார். இன்றைய கணக்குப்படி ஜிம் தன் வீட்டில் 16 ஆயிரம் கொம்புகளை சேர்த்து வைத்துள்ளார்.

"ஜிம் ஹார்ன் ஹவுஸ்" (Jim Horn House) என்ற பெயரில் தன் வீட்டருகே கொம்புகளுக்கான ஒரு பிரத்யேக ஷெட்டை அமைத்திருக்கிறார். இந்த ஷெட் 30 அடி அகலமும், 60 அடி நீளமும் கொண்டுள்ளது. இதில் எங்கு திரும்பினாலும், கொம்புகள் தான். 50 வருடங்களாக ஜிம் காடுகளுக்குள் சென்று தேடி இந்தக் கொம்புகளை சேகரிக்கிறார். இதுவரை ஒரு கொம்பைக் கூட அவர் விலை கொடுத்து வாங்கியதில்லை. அதேபோல், எந்த மானையும் வேட்டையாடி கொம்புகளை எடுத்ததில்லை. கலைநயத்தோடு அமைந்திருக்கும் அவரின் "கொம்பு வீட்டினுள்" கொம்புகளை சீராக அடுக்க அவருக்கு 2.5 வருடங்கள் ஆகியிருக்கின்றன. 

1980 களில் தன்னிடமிருந்த 1800 கொம்புகளை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொன்டு தான், தன் மூன்று மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தார் ஜிம் பிலிப்ஸ். 

எதற்காக இப்படி கொம்புகளைச் சேகரிக்கிறார் என்ற கேள்விக்கு,

மான்கள்

"தெரியவில்லை... எனக்கு கொம்புகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். என் மனைவியும், மகள்களும் என்னை இதை நிறுத்துமாறு சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரே நாளில் 87 கொம்புகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. ஒரு நாள் 11 மணி நேரம் காட்டினுள் நடந்தும் எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. இந்தத் தேடல் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்குப் பிடிக்கும் வரை... என் உயிர் இருக்கும் வரை இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்..." என்று தன் மொட்டைத் தலையை வருடியபடியே சொல்கிறார் ஜிம். 

அவரின் இணையதளத்தில் இங்கிருந்தபடியே அவர் கொம்பு வீட்டினை சுற்றிப் பார்க்க முடியும். அதைப் பார்த்துவிட்டு ஜிம்மைப் பார்க்கும் போது அவர் தலையிலும் இரண்டு கொம்புகள் இருப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்