வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (12/09/2017)

கடைசி தொடர்பு:12:15 (12/09/2017)

ஃபுளோரிடாவைக் கதறவிட்ட இர்மா புயல்...கடல் நீரை உள்வாங்கியது எப்படி? #HurricaneIrma

மெரிக்கா, கியூபா, மெக்சிகோ, ஆகியவற்றை ஆட்டம் காணவைத்திருக்கிறது இர்மா புயல். கரிபீயப் பகுதியைத் தாக்கிய புயல்களிலேயே இதுதான் மிகப்பெரியது என்கின்றனர் வானியலாளர்கள். அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து மட்டும் சுமார் 63 லட்சம் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே இந்த அளவிற்கு மக்கள் வெளியேற்றப்படுவது இதுதான் முதல்முறை. அந்தளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றுள்ளது இர்மா. குறிப்பாக ஃபுளோரிடா மற்றும் கியூபா பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இர்மா புயல்

மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்க

புயலின் போது வீசும் காற்றின் அளவைப் பொறுத்து அவை வகை 1, வகை 2 என ஐந்து வரை வகைப்படுத்துவது வழக்கம். இதற்கு சஃபீர் சிம்ப்சன் அளவுகோல் எனப்பெயர். (அட்லாண்டிக் மற்றும் வட பசிபிக் கடற்பகுதிகளில் ஏற்படும் புயல்களுக்கு மட்டுமே இந்த முறை. மற்ற இடங்களில் வெவ்வேறு முறைகளைப் பின்பற்றுகிறார்கள்) இதன்படி ஐந்தாவது வகை புயல்தான் இர்மா. அதாவது கட்டடங்கள், மரங்கள், மேற்கூரைகள் ஆகியவற்றிற்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதோடு மணிக்கு 252 கி.மீ வேகத்திற்கும் அதிகமாகக் காற்று வீசும். நகர்ப்புறங்களில் மிக அதிகமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். 

இப்படி இர்மா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒருபக்கம் இருந்தாலும், அனைவரையும் வியப்படையச் செய்த மற்றொரு விஷயம் பஹாமா கடற்கரையில் கடல்நீர் உள்வாங்கியது. இப்படிக் கடல்நீர் உள்வாங்குவது என்பது புதிய நிகழ்வல்ல. உலகில் பல இடங்களில் கடந்த காலங்களில் நடந்துள்ளன. ஆனால் பஹாமா கடற்கரையில் கடல்நீர் அதிகதூரம் உள்ளே செல்லவே, உலகம் முழுக்க வைரலானது ஒரு ட்விட்டர் வீடியோ. 

அங்கு மட்டுமில்லாமல் டம்பா விரிகுடாவிலும் கடல்நீர் உள்ளே சென்றது.

இந்த இரண்டிற்கும் ஒரே காரணம்தான். அது காற்றழுத்தம். கடலின் மையத்தில் ஏற்படும் காற்றழுத்தக் குறைவுதான் இப்படிக் கடல் நீர் உள்வாங்கக் காரணமாக அமைகிறது. கடல்நீர் உள்வாங்குவதற்கு உதாரணமாக ஒடிஸா மாநிலத்தில் இருக்கும் சண்டிபூர் கடற்கரையைக் குறிப்பிடலாம். இங்கு தினமும் கடல்நீர் இருமுறை உள்ளே சென்று, மீண்டும் கரைக்குத் திரும்பும். இதுபோன்ற இயற்கையின் விந்தைகளுக்கு என்ன காரணம் என விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம். 

"மிகக்குறைந்த காற்றழுத்த மண்டலம்தான் சூறாவளியாக மாறி, கடலின் மையத்தின் மேற்பகுதியில் நிலைகொண்டிருக்கும். அங்கே அழுத்தம் குறைவாக இருப்பதால், வெளியே இருக்கும் காற்று அந்த மையத்தை நோக்கி வேகமாகச் செல்லும். கடலின் மையத்தில் காற்றானது சுழன்று கொண்டிருக்கும் என்பதால், வெளியே இருக்கும் காற்றும் அந்த சுழற்சிக்கு ஏற்ப கடலுக்குள் செல்லும். அப்போது அந்தக் காற்றானது கடலினை உள்ளே தள்ளும். மேலும் சூறாவளி மையம் கொண்டிருக்கும் இடத்தில் கடல் நீரின் அளவும் உயரும். இதனால் கடல் நீரானது உள்ளே செல்கிறது. 

 

இதனை ஒரு சிறிய உதாரணம் மூலமாக விளக்கலாம். ஒரு வட்டமான தட்டில் நீர் ஊற்றி வைத்திருக்கிறோம் எனக் கற்பனை செய்துகொள்ளுங்கள். தற்போது அந்தத் தட்டின் ஒரு விளிம்பிலிருந்து அந்தத் தட்டை நோக்கி நாம் ஊதினால் என்ன ஆகும்? நாம் ஊதும்போது காற்றானது விளிம்பில் இருக்கும் நீரை உள்ளே தள்ளும். மேலும் தட்டின் மையத்தில் இருக்கும் நீரின் அளவும் உயரும். நாம் ஊதியதை நிறுத்தியதும், மீண்டும் நீரானது சமநிலையை அடைந்துவிடும். இதேதான் கடலிலும் நடக்கிறது. காற்றின் சுழற்சி நின்றதும் மீண்டும் கடல்நீரானது கரையை அடைந்துவிடுகிறது. இது புயலின் போது நடப்பது.

சண்டிபூர் கடற்கரையில் நடக்கும் விஷயம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதற்குக் காரணம் நிலவின் ஈர்ப்பு விசைதான். நிலவின் ஈர்ப்பு விசை கடற்பரப்பில் அதிகமாக இருக்கும்போது, அதனால் கடல் நீரின் ஏதேனும் ஒரு பகுதியில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கத்தால் அந்தப் பகுதியில் இருக்கும் நீரின் அளவு உயரும். கடலுக்குள்ளே நீரின் அளவு உயரும்போது, கடற்கரை பரப்பில் நீரின் அளவு குறையும். நிலவின் ஈர்ப்பு விசையினால் நீர் மட்டுமல்ல; நிலப்பகுதிகளின் உயரம் கூட மிகச்சிறிய அளவில் உயரும். ஆனால் அவை நம் கண்களுக்குத் தெரியாது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்